PUBLISHED ON : ஜன 12, 2025 12:00 AM

கே.ரமேஷ், நாகர்கோவிலில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பண்டிகை காலம் வந்து விட்டாலே, ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ஒரே கொண்டாட்டமாகி விடுகிறது.
அதுவரை சாதாரண கட்டணத்தில் ஆம்னி பஸ்களை இயக்குவோர், பண்டிகை என்றாலோ, தொடர் விடுமுறை வந்து விட்டாலோ, வழக்கத்தை விட மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தி விடுகின்றனர்.
ரயில்களில் முன்பதிவு டிக்கெட்கள் விரைவில் தீர்ந்து விடுவதால், வேறு வழியில்லாமல், மக்கள் ஆம்னி பஸ்களை தேர்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கினாலும், வெளியூர்வாசிகள் பெரும்பாலும் பணிநிமித்தமாக இங்கே இருப்பவர்கள் என்பதால், பணி முடிந்து, குழந்தைகளுடன், லக்கேஜ்களை துாக்கிக் கொண்டு, பேருந்தைப் பிடித்து, கிளாம்பாக்கம் செல்வதற்குள், இரவு, 11:00 மணியை தாண்டி விடுகிறது. பின், அடித்து பிடித்து வெளியூர் பேருந்தைப் பிடித்து செல்ல வேண்டும்... இதனால், குழந்தைகள், முதியோருடன் வருவோர் நொந்து நுாடுல்ஸ் ஆகிவிடுகின்றனர்!
இதைத் தவிர்க்க, கோயம்பேடில் இருந்து இயங்கும் ஆம்னி பேருந்துகளை தேர்வு செய்கின்றனர்.
ஆனால், ஆம்னி பேருந்து உரிமையாளர்களோ, இதுதான் சம்பாதிக்கும் நேரம் என்பது போல், கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி, பயணியரை ரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கின்றனர்.
வழக்கமாக, நெல்லை, நாகர்கோவில் செல்ல, 800 - 850 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 4,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மதுரை செல்ல, 3,000 ரூபாய் கட்டணம் வாங்குகின்றனர்.
இந்த பகல் கொள்ளை, ஆன்லைனில் வெளிப்படையாக உள்ள நிலையில், அரசு இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருப்பது ஏன்?
நெடுஞ்சாலை சோதனை என்ற பெயரில் ஒப்புக்கு ஒரு சில பேருந்துகளை நிறுத்தி, அபராதம் விதித்து, கணக்கு காண்பித்து விட்டால் போதும் என்று நினைக்கின்றனரா?
பண்டிகை கால கொள்ளைக்கு, எப்போது தான் அரசு கடிவாளம் போடும்?
ஜனநாயகத்திற்கு எதிரானது!
ஆர்.கிருஷ்ணமூர்த்தி
ராமசுப்பிரமணியன், ஆசிரியர் (பணி நிறைவு), நயினார் மண்டபம்,
புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாகர்கோவிலில்
வாழும் நபர் ஒருவர், சமீபத்தில் தன் மகனைக் காண ஓமன் நாட்டின் தலைநகர்
மஸ்கட் சென்று உள்ளார். தன் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி உள்ள அவர்,
தொழில்நுட்ப உதவியுடன், வெளிநாட்டில் இருந்தபடியே, தன் வீட்டை கண்காணித்து
வந்துள்ளார்.
ஒருநாள், தன் வீட்டின் கதவுகளை உடைத்து, உள்ளே
நுழைந்த கள்ள, 'சார்'கள் இருவர், கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதை அறிந்து,
பக்கத்து வீட்டினரை தொடர்புகொண்டு, அவர்கள் உதவியுடன் அந்த இரு,
'சார்'களையும் குற்றம் நிகழ்வதற்கு முன்னரே, வெளிநாட்டில் இருந்தபடியே
விரட்டி அடித்துள்ளார்.
ஆனால், தமிழக அரசோ, அண்ணா பல்கலைக்கழக
வளாகத்தில், முறையாக சிசிடிவி கேமராக்களை நிறுவாமலும், ஏற்கனவே நிறுவியுள்ள
சிசிடிவி கேமராக்களை சரியாக பராமரிக்காமலும், பல்கலை வளாகத்தில் நிகழ்ந்த
பாலியல் குற்றச்செயலில் தொடர்புடைய, 'சார்' ஒருவரை கண்டுபிடிக்க முடியாமல்,
'யார் அந்த சார்?' என்று விழி பிதுங்கி நிற்கிறது.
தொழில்நுட்ப
வளர்ச்சியை பயன்படுத்தி, குற்றச் செயல்களை தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள
சட்ட அமைச்சர் ரகுபதியோ, 'குற்றங்கள் நிகழ்வது சகஜம்தான்' என்றும், 'பிற
மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் குறைவு'
என்றும் வாய் ஜாலம் காட்டுகிறார்.
காவல் துறையை ஏவல் துறையாக
மாற்றி வைத்து உள்ள முதல்வரோ, ஜனநாயக முறையில் போராடுவதற்கு கூட அனுமதி
மறுத்து, கருத்து சுதந்திரத்தின் குரல் வளையை நெறிக்கும் சர்வாதிகாரியாக
உள்ளார்.
ஸ்டாலின் என்று பெயர் இருப்பதாலேயே, தன்னை, ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலின் என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது!
இது
ஜனநாயக நாடு; மக்கள் நினைத்தால், எந்த நேரத்திலும் ஆட்சியை துாக்கி
எறிந்து விடுவர் என்பதை முதல்வர் மனதில்வைத்துக் கொள்ள வேண்டும்!
இவர்கள் தலைவர்களா?
அ.யாழினிபர்வதம்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பாகிஸ்தான்
பிரிவினைக்கு பின், 'இந்தியாவே எங்கள் தாய்நாடு' என்று தங்கிய முஸ்லிம்கள்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற கட்சியை துவங்கி, தமிழகத்தை சேர்ந்த
காயிதே மில்லத்தை, அதன் தலைவராக்கினர்.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்
கட்சியினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பங்காக, 17 லட்சம்
ரூபாய் வழங்கிய போது, அதை வாங்க மறுத்தவர், காயிதே மில்லத்!
அதுமட்டுமா...
பிரிவினைக்கு பின், முகமது அலி ஜின்னா விடுத்த அழைப்பை ஏற்று, பாகிஸ்தான்
சென்ற காயிதே மில்லத்திடம், 'இந்திய முஸ்லிம்களுக்கு ஹிந்துக்களால் பிரச்னை
ஏற்பட்டால் சொல்லுங்கள்... நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்றார்,
ஜின்னா.
உடனே முகத்தில் அடித்தாற்போல், 'எங்கள் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து, நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என்று பதிலடி கொடுத்தார்!
கடந்த
1962 சட்டசபை தேர்தலுக்கு முன், குரோம்பேட்டையில் காயிதே மில்லத்தை
சந்தித்த அண்ணாதுரை, 'தி.மு.க.,வுடன், முஸ்லிம் லீக் கூட்டணி சேர
வேண்டும்' என்று தன் விருப்பத்தை கூறியபோது, 'தி.மு.க.,வுடன் கூட்டணி சேர
வேண்டுமானால், திராவிடநாடு கோரிக்கையையும், நாத்திகப் பிரசாரத்தையும் கைவிட
வேண்டும்' என்று அதிரடியாக கூறினார்.
'நாங்கள் இஸ்லாத்தை எந்த இடத்திலும் விமர்சிப்பது இல்லையே!' என்றார் அண்ணாதுரை.
அதற்கு காயிதே மில்லத் என்ன சொன்னார் தெரியுமா...
'இஸ்லாத்தை
மட்டுமல்ல, ஹிந்து, கிறிஸ்துவம், பவுத்தம் என்று எந்த மதத்தையும்
விமர்சிக்கும், எவரோடும் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம்; எனவே, நாத்திக
பிரசாரத்தை கைவிட்டால், கூட்டணிக்கு தயார்' என்றார்.
இதை அண்ணாதுரை ஏற்றுக் கொண்டதால் தான், அன்று கூட்டணி மலர்ந்தது.
ஆனால், இன்று நடப்பது என்ன?
அண்ணாதுரை
கொடுத்த உறுதிமொழியை கைவிட்டு, சிறுபான்மையினரின் ஓட்டுக்காக, நாத்திகம்
என்ற பெயரில், ஹிந்து மதத்தை அநாகரிகமாக விமர்சிக்கிறது தி.மு.க.,
காயிதே மில்லத் போன்றவர்களால் கட்டமைக்கப்பட்ட கட்சி, அதை ஆதரிக்கிறது!
நாட்டு
நலனிலும், சமுதாய ஒற்றுமையிலும் அக்கறை கொண்ட அந்த தலைவர்கள் எங்கே...
ஓட்டுக்காகவும், 'சீட்'டுக்கா வும் கொள்கையை அடமானம் வைக்கும் இந்த
தலைவர்கள் எங்கே!