தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ விஜயை பின்பற்றுங்கள் மற்ற கட்சி தலைவர்களே!

 விஜயை பின்பற்றுங்கள் மற்ற கட்சி தலைவர்களே!

 விஜயை பின்பற்றுங்கள் மற்ற கட்சி தலைவர்களே!

1


PUBLISHED ON : ஆக 29, 2026 01:03 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2026 01:03 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொ.ருக்மணி, கூடங்குளம், நெல்லை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் சட்டசபையில், மக்களுக்காக பேசவேண்டும்; ஆனால், சபையில் வாழ்த்தி பேசுவது, துதிபாடுவது என, பாதி நேரம் செல்கிறது' என்று கூறியுள்ளார், தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலர் பிரேமலதா.

சட்டசபை ஒரு நிமிடம் நடத்துவதற்கு மக்களின் வரிப்பணத்தில், 35,000 ரூபாய் செலவிடப்படுகிறது. அப்படி நடத்தப்படும் சபையில் மக்கள் பிரச்னை குறித்து பேசாமல், தலைவரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக துதிபாடிக் கொண்டிருப்பது சரியல்ல.

சட்டசபையில் எல்லா உறுப்பினர்களுக்கும் பேச வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படியே பேச வாய்ப்பு கிடைத்தாலும், 10 நிமிடங்கள் கிடைக்கலாம். அதில், அவர்களது கட்சித் தலைவரை புகழ்வதற்கே நேரம் போதாத சூழ்நிலையில், மக்கள் பிரச்னை குறித்து எப்படி பேசுவர்?

உதாரணமாக, தி.மு.க., உறுப்பினர்களை பேச அழைத்தால் முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின், இப்போதைய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி போன்றோரை புகழ்ந்து விட்டுத் தான் அடுத்த விஷயத்தை பேச துவங்குகின்றனர்.

அதேபோல், அ.தி.மு.க., உறுப்பினர்களை பேச அழைத்தால், அவர்கள், முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெய லலிதா, பழனிசாமி ஆகியோரை புகழ்ந்து விட்டு தான் மக்கள் பிரச்னை தொடர்பாக பேச ஆரம்பிக்கின்றனர்.

அவ்வளவு ஏன்... சபையில் வாழ்த்தி பேசுவதும், துதிபாடலும் தான் நடக்கிறது என்று மற்றவர்களின் தவறை சுட்டிக்காட்டியுள்ள பிரேமலதாவும், 'ஊருக்கு மட்டும் தான் உபதேசம்; உனக்கும் எனக்கும் இல்லையடா ஆண்டி' என்பது போல், 'கேப்டன் அதை சொன்னார், இதைச் சொன்னார்; கேப்டன் அப்படி செய்தார், இப்படி செய்தார்' என்று தன் கணவர் விஜயகாந்தின் புராணம் பாடிவிட்டுத் தான் மக்கள் பிரச்னைகள் குறித்து பேச ஆரம்பிக்கிறார்.

அதேநேரம், 'என்னை புகழாமல் மானியக் கோரிக்கை தொடர்பாக மட்டும் பேச அனுமதியுங்கள்' என்று சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டுள்ளார், முதல்வர் விஜய்.

அவரை பின்பற்றி, பிற கட்சி தலைவர்களும் நடந்து கொண்டால், சட்டசபை, மக்கள் பிரச்னைக்கான தீர்வு கிடைக்கும் ஆரோக்கியமான களமாகும்!

மறுபரிசீலனை செய்ய வேண்டும்!


எஸ்.ஸ்ரீனிவாசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

பரந்துார் புதிய விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக, தமிழக முதல்வர் விஜய், சட்டசபையில் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.

மத்திய அரசு மற்றும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் முறையான ஆய்வுக்குப் பின், இத்திட்டம் இறுதி செய்யப்பட்டது. 1,500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு சந்தை விலையை விட, மூன்று மடங்கு வரை இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், திடீரென இத்திட்டத்தை ரத்து செய்வது, மாநிலத்தின் எதிர்காலத்திற்கே பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்!

விவசாய நிலங்கள், நீர் நிலைகள் மற்றும் மக்கள் பாதிப்பு காரணங்களைக் கூறி, இத்திட்டம் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எங்கு திட்டம் துவங்கினாலும், நிலங்களும், நீர்நிலைகளும் இருக்கவே செய்யும்.

வளர்ந்து வரும் சென்னைக்கு, மாற்று விமான நிலையம் என்பது பயணியர் போக்குவரத்திற்கு மட்டுமின்றி, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான அடிப்படைத் தேவை.

உள்கட்டமைப்பு வளர்ச்சி தடைபட்டால், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறைந்தது, 10 ஆண்டுகள் பின்நோக்கிச் செல்லும்!

ஏற்கனவே, தமிழகத்தில் மதுரை, சேலம் போன்ற இரண்டாம் கட்ட நகரங்களின் விமான நிலையங்கள் போதிய வளர்ச்சியின்றி இருக்கும் சூழலில், தலைநகரின் மாற்று விமான நிலைய திட்டத்தைக் கைவிடுவது பெரும் இழப்பாகும்.

இதுமட்டுமின்றி, ஏற்கனவே நிலம் கையகப்படுத்த மத்திய அரசு செலவிட்ட பல கோடி ரூபாய் நஷ்டத்தை, மாநில அரசு எவ்வாறு ஈடுசெய்யப் போகிறது? மாற்றியமைக்கப்படும் புதிய இடத்திலும் இதேபோன்ற சவால்கள் எழத்தானே செய்யும்?

கடந்த காலங்களில் எட்டு வழிச்சாலைத் திட்டம், பெரிய தொழிற்சாலைத் திட்டங்கள் போன்ற பல உள்கட்டமைப்பு செயல்பாடுகள் அரசியல் காரணங்களுக்காகவும், சுற்றுச்சூழல் சாக்குப் போக்குகளாலும் எதிர்க்கப்பட்டு முடக்கப்பட்டன; இப்போது, பரந்துார் விமான நிலைய திட்டமும் முடக்கப்பட்டு விட்டது.

அண்டை மாநிலங்களான ஆந்திராவும், கர்நாடகாவும் புதிய விமான நிலையங்கள், தொழில் பூங்காக்களை அமைத்து, தொழில் துறையில் முந்திச் செல்லும் நிலையில், தமிழகத்தின் இத்தகைய அரசியல் முடிவுகள் முதலீட்டாளர்களை வேறு மாநிலங்களுக்கு திருப்பிவிடும்.

எனவே, முதல்வர் விஜய், பரந்துார் விமான நிலைய திட்டத்தை கைவிடும் முன், இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

சபாநாயகருக்கு சபாஷ் போடலாம்!


வி.மோகன், நெல்லிக்குப்பம், கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபை நிகழ்வு, நேரலையில் ஒளிபரப்பப்படுவதால், பொதுமக்கள் தொலைகாட்சிகளில் சீரியல்கள் பார்ப்பது போல் ஆர்வமுடன் சட்டசபை நிகழ்வுகளை பார்க்கின்றனர்.

வீடுகளில் சமையல் செய்யும் பெண்கள் கூட, அவ்வப்போது ஹாலில் வந்து சட்டசபை நிகழ்வுகளை எட்டிப் பார்த்துவிட்டு செல்கின்றனர்.

ஆனால், அங்கோ நம்மால் தேர்வு செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள், ஆக்கப்பூர்வமாக, தங்கள் தொகுதிக்கு என்ன தேவை என்பது குறித்து பேசாமல், இதுவரை தங்கள் ஆட்சியில் என்ன செய்தோம் என்பதை பட்டியலிட்டு, தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர்.

இதுவரை, பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ., சவுமியா மட்டுமே, தன் தொகுதி பிரச்னைகள் குறித்து முறையாக பேசுகிறார்.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரை புகழ்ந்து பேசுவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். மேலும், அமைச்சர்கள் தப்பித் தவறி ஏதாவது திட்டம் குறித்து பேசினால், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் எழுந்து நின்றும், இருக்கையை விட்டு பத்தடி துாரம் முன்னேறி வந்தும் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

சபாநாயகருக்கு, 'உட்காருங்கள்... உட்காருங்கள்...' என, கூறுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. சட்டசபை துவக்கத்தில் இருந்து, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரை பார்த்து, சபாநாயகர் எத்தனை முறை, 'உட்காருங்கள்' என்ற வார்த்தையை சொன்னார் என்று கணக்கில் எடுத்தால், அது எண்ணிக்கையில் அடங்காது.

அந்த அளவிற்கு அவர், எம்.எல்.ஏ.,க்களிடம் போராடுகிறார்; இதற்காகவே, சபாநாயகருக்கு சபாஷ் போடலாம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us