PUBLISHED ON : ஜூலை 08, 2024 12:00 AM

பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி
மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'கட்சி துவங்கி 35 ஆண்டுகளாகியும் ஆட்சிக்கு வர முடியாததை நினைக்கும் போது
மனம் வலிக்கிறது. மக்களாட்சியில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள் .
பா.ம.க.,வின் பணிகளை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான
வெகுமதியை உரிய நேரத்தில் தருவர்' என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்
தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
தன் குடும்ப
வளர்ச்சிக்காக வன்னியர் சங்கத்தை துவக்கியது; இட ஒதுக்கீடு கேட்டு ஏகப்பட்ட
மரங்களை வெட்டி போராட்டம் நடத்தியது; பின் அது கலவரமாகி, துப்பாக்கிச்
சூட்டில் பலர் உயிர் இழந்தது; வன்னியர் சங்கம் வளர்ந்ததும் அதை பா.ம.க.,
என்ற அரசியல் கட்சியாக்கியது...
'நானோ, என் குடும்பத்தினரோ
தேர்தலில் போட்டியிட மாட்டோம். அப்படி ஒரு வேளை நிகழ்ந்தால் என்னை
முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்' என, யோக்கிய சிகாமணி போல்
வசனம் பேசியது, பிறகு அதை மக்கள் மறந்திருப்பர் என்று நினைத்து, தன் மகன்
அன்புமணியை எம்.பி.,யாகவும், மத்திய அமைச்சராகவும் ஆக்கி அழகு பார்த்தது,
சமீபத்திய லோக்சபா தேர்தலில் மருமகள் சவுமியாவை போட்டியிட வைத்தது,
அடிக்கடி கூட்டணி தாவுவது என, ராமதாசின் செயல்பாடுகளை மக்கள் நன்றாக
கவனித்து தான், இந்த இடத்தில் வைத்துள்ளனர். இனிமேல் கவனிக்க என்ன
இருக்கிறது?
'வன்னியர் ஓட்டு, அன்னியருக்கு இல்லை' என்று கூறி
நீங்களே, 'பா.ம.க., ஒரு ஜாதிக் கட்சி' என்ற முத்திரையை, மக்கள் மனதில்
ஆழமாக பதிய வைத்து விட்டீர்கள். கட்சி ஆரம்பித்து, 35 ஆண்டுகள் ஆன போதும்,
வடமாவட்டங்களில் சில தொகுதிகளில் மட்டுமே செல்வாக்குள்ள கட்சி என்று
கூறும் அளவிற்கு தான், பா.ம.க., வளர்ந்துள்ளது.
இதுவரை கிடைத்த
வெற்றிகள் கூட, கூட்டணி பலத்தால் கிடைத்தவை தானே தவிர, சுய பலத்தால்
கிடைத்தவை அல்ல. எனவே, 35 ஆண்டுகள் அல்ல; 3,500 ஆண்டுகள் ஆனாலும்,
தமிழகத்தில் பா.ம.க., வின் ஆட்சி மலர வாய்ப்பே இல்லை.
ஆட்சி
அதிகாரத்தில் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் கற்பனையாக, 'நிழல் பட்ஜெட்'
வெளியிட்டு மகிழ்வது, பா.ம.க.,வின் வாடிக்கை. அதே போல், தைலாபுரம்
தோட்டத்தில், கற்பனையாக ஒரு சட்டசபை கட்டி, அதில் தொண்டர்களை அமர வைத்து,
முதல்வராக ராமதாஸ், துணை முதல்வராக அன்புமணி, நிதியமைச்சராக சவுமியா
ஆகியோர் பதவி ஏற்று, ஆட்சி செய்து மகிழுங்கள்.
ஆட்சியமைக்க இப்போதைக்கு இதைத் தவிர வேறு வழியே இல்லை.
அரசியலமைப்பு சட்டத்தை மறந்து விட்டனர்!
ராமானுஜதாஸன், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மது விலக்கை நாடு முழுதும் அமல்படுத்தியாக வேண்டும் என்ற திட்டம், நம் அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலான, 'டைரக்டிவ் பிரின்சிபிள்ஸ்'சில் கொள்கையாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதை இத்தனை ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆண்டு வந்திருந்த எந்த ஓர் அரசியல் கட்சியும், சீரியஸாக எடுத்துக் கொள்ளவே இல்லை.
காந்தி பிறந்த பிரதேசம் என்பதால் மட்டுமே, குஜராத்தில், 1947ல் ஏற்படுத்தப்பட்ட மது விலக்குச் சட்டம், விலக்கிக் கொள்ளப்படாமலிருக்கிறது.
சுதந்திரத்துக்காகப் போராடிய காங்கிரஸ் பேரியக்கம், மஹாத்மா காந்தியின் தலைமை காரணமாகவே தன் செயல் திட்டங்களில் மது விலக்குக்கு முக்கிய இடம் அளித்தது. இன்று விரல் விட்டு எண்ணி விடக்கூடிய சில மாநிலங்களில் மட்டுமே மதுவிலக்குச் சட்டம் பெயரளவுக்கு அமலில் இருக்கிறது.
குஜராத்தில் மது விலக்குச் சட்டம் அமலில் இருந்த போதிலும், அங்கே உலகின் எல்லாவித வின்டேஜ் மதுபானங்களும், வீட்டிற்கே டோர் -டெலிவரி செய்கின்றனர் என்றும், விலை தான் மூன்று மடங்கு என்றும், குஜராத் சென்று வரும் வணிக முகவர்கள் சொல்கின்றனர்.
எனவே, அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தைக் கும்பிடுவதும், அந்தப் புத்தகத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டு, ஊடகக் காணொளிகளில் வெளியிடுவதும், தேர்தல் அரசியல் அரங்கங்களில், அமோக வெற்றி பெறுவதற்கான நடிப்பு மட்டுமே.
இப்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உயிருடன் இருந்தால், பார்த்து வெட்கித் தலை குனியக்கூடிய காட்சிகள் இவை.
பா.ஜ., ஆளும் மாநிலங்களிலும், வீட்டுக்கு வீடு சொந்தமாக, 'பார்' வசதி செய்து கொள்ளலாம். உதாரணம், உத்தரகண்ட்! உண்டா இல்லையா என்று, திருவண்ணாமலையாரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
தி.மு.க., போலவே அ.தி.மு.க., ஆட்சிக் காலத்திலும், டாஸ்மாக் சாராயத்துடன், கள்ளசாராயமும் இருந்ததை யாரும் மறந்து விட வேண்டாம்!
ஒரே மேடை விவாதம் அவசியம்!
மரகதம் சிம்மன், கலிபோர்னியா, அமெரிக்காவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் அமெரிக்காவின் ஜியார்ஜியாவில், அதிபர் தேர்தலுக்காக, குடியரசு கட்சியின் டிரம்பும், ஜனநாயக கட்சிக்காக தற்போதைய அதிபர் ஜோ பைடனும் ஒரே மேடையில் காரசாரமாக விவாதித்தனர்.
தாங்கள் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், நாட்டிற்கு, மக்களுக்கு என்ன சேவை செய்யப் போகிறோம் என்று தெளிவாக பேசினர்.
இதில், இருவரும் ஆவேசமாக ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். அதே நேரம், ஒருவர் ஆட்சியில் செய்த குறையை மற்றவர்கள் சொல்லும்போது துள்ளிக் குதிக்காமல், பொறுமையாக கேட்டு, பதில் அளித்தனர். மக்களும் இவர்கள் என்ன செய்யப் போவதாக வாக்களிக்கின்றனர் என்பதை புரிந்து கொள்கின்றனர்.
நம் நாட்டிலும், இப்படி பொது மேடையில் இரண்டு தலைவர்கள் பேசுவரா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மேடையிலேயே ஒருவருக்கொருவர் ஏசி, நாற்காலிகளை துாக்கி எறிந்து ரணகளமாக்கி விடுவர்.
ஆனால், இந்த மாதிரி தேசத்தின் உயர் பதவிக்கு போட்டியிடுபவர்கள், ஒரே மேடையில் தோன்றி பேச வேண்டும். தங்கள் ஆட்சியில் சாதித்தது என்னென்ன, இனிமேல் சாதிக்கப் போவது என்னென்ன? என்று மக்கள் முன் உறுதி அளிக்க வேண்டும்.
எதிர்க்கட்சியில் இருப்பவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். சரியாக பதில் அளிக்கத் தவறினால் மக்களும் விழித்துக் கொள்வர்.