/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
உத்தமர் காந்தி ஆகிவிட்டாரோ ஊழல்வாதி?
/
உத்தமர் காந்தி ஆகிவிட்டாரோ ஊழல்வாதி?
PUBLISHED ON : செப் 29, 2024 12:00 AM

உத்தமர் காந்தி ஆகிவிட்டாரோ ஊழல்வாதி?
வி.பத்ரி, கிளாம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: -பணமோசடி வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
செந்தில் பாலாஜி எதற்காக சிறை சென்றார்என்பது, அரசியலுக்கு அப்பாற்பட்ட நாட்டு மக்களுக்கு தெரியும். ஆனால், அவர் என்னவோ நாட்டின் நலனுக்காக, மக்கள் நலனுக்காக போராடி சிறை சென்றது போல், 'அவருடைய தியாகம் பெரிது' என்று போற்றிப் பாடுகிறார் முதல்வர்.
தி.மு.க.,வின் தோழமை கட்சிகளும், செந்தில் பாலாஜிக்குப் புகழாரம் சூட்டுகின்றன.
ஏனென்றால், சிறைவாசத்தின்போது செந்தில் பாலாஜி மரம் அறுத்தார், கல் உடைத்தார், கசையடி வாஙகினார், கஞ்சியும் கூழும் சாப்பிட்டு கட்டாந்தரையில்படுத்துறங்கினார் அல்லவா!
எமர்ஜென்சி காலத்தில் கூட இத்தனை நாட் கள் யாரும் சிறையில் இருந்ததில்லையாம்.தோழமைக் கட்சி என்பதற்காக, இந்திராவுக்கும்புகழாரம் சூட்டுகிறார் முதல்வர்; கலிகாலம்!
செந்தில் பாலாஜி உத்தமர் என்றால், இதே முதல்வர், எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது, கரூர் பொதுக் கூட்டத்தில் எதற்காக அவர் மீது அடுக்கடுக்கானப் புகார்களைக் கூறினார்? அந்த வீடியோ காட்சியை முதல்வர் இப்போது ஒரு முறைபோட்டுப் பார்த்தால், அவமானம் மனதைப் பிளக்கும்!
அ.தி.மு.க.,வில் இருந்த போது ஊழல்வாதி;தி.மு.க.,வில் இணைந்த பின்பு உத்தமர் காந்தியாகி விட்டார் செந்தில் பாலாஜி.
இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் நடக்கப் போகிறதோ!
உங்களுக்கு தான் அந்த பொறுப்பு, கமல்!
அண்ணா
அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ -- மெயில்'
கடிதம்: கமல்ஹாசன் மிகச்சிறந்தநடிகர் என்றால் அதை மறுப்பவர் எவரும்
இருக்கமுடியாது. ஆனால், அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி என்றால், அதைக் கேட்டு
சிரிக்காமல் எவரும் இருக்க முடியாது.
தேர்தலில் ஜெயிக்க முடியாத
கமல், டார்ச் லைட்டால், 'டிவி'யை உடைத்ததை மறந்து விட்டு, தி.மு.க.,விடம்
கட்சியை அடமானம் வைத்தபோதே, அரசியல் தகுதியை இழந்து விட்டார்.
மீண்டும்
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட, ம.நீ.ம., பொதுக்குழுவில், 'நான் எவ்வளவு
பெரிய ஆள் என்பதை, காட்ட வேண்டிய இடத்தில் காட்டுகிறேன்' என்று முழங்கி
இருக்கிறார். சினிமாவில் பெரிய ஆள் என்பதை நிரூபித்து விட்டீர்கள் கமல்...
அதற்கு வாழ்த்து; ஆனால் அரசியலில் நீங்கள் எவ்வளவு பெரிய ஆள் என்பதை
நிரூபிக்க வேண்டிய இடம், மக்கள் களம் தான்!
வரும் 2026 சட்டசபை
தேர்தலில், கடைசி வாய்ப்பாக தனித்து நின்று, முதல்வர் பதவியை பிடிக்க
வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். எனவே, தி.மு.க., கூட்டணியிலிருந்து
விலகி, விஜய் கட்சியுடன் மோதி ஜெயித்தால் தான், உங்கள் கட்சிக்கு
எதிர்காலமே!
கூடவே, 20 ஆண்டுகளுக்கு முன், 'தமிழர் ஏன் பிரதமராக
கூடாது!' என்று நீங்கள் பேசியது, சிலருக்கு கோபமூட்டியது என்றும்
பொதுக்குழுவில் சொல்லியிருக்கிறீர்கள்;ஜெயலலிதாவுக்கு தான் கோபம் வந்தது.
அதில் என்ன தப்பு?
அன்று நீங்கள் வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வேண்டும் என்று தானே பேசினீர்கள்!
ஏன் சேலை கட்டிய தமிழச்சி பிரதமராக கூடாதா!முடியாதா? இன்றைக்கும் அதே கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறீர்கள்.
காமராஜரால்
பிரதமராகி இருக்க முடியும்; ஆனால்அதை அவர் விரும்பவில்லை.அடுத்து
மூப்பனார் பிரதமராக வாய்ப்பு வந்தபோது, அதைக் கெடுத்து தேவகவுடாவுக்கு வழி
விட்டது யார் என்பது உங்களுக்கு தெரியுமா, தெரியாதா?
முதலில் ஒரு தமிழன் பிரதமராவதை, தமிழனே விரும்புவானா?
விசாரித்துப் பாருங்கள்...எட்டப்பன்கள் இன்றும் உண்டு!
நீங்கள்
செய்வது முழுநேர அரசியலோ, பகுதிநேர அரசியலோ... மக்களுக்கு மறுவாழ்வு தர
ஆட்சியைப் பிடிக்கும்அரசியலாக இருக்க வேண்டுமல்லவா! தோல்விநிரந்தரமல்ல
தான்; ஆனால் தோற்றுக் கொண்டே இருப்பது அவமானமல்லவா!
நீங்கள் கட்சி நடத்துவது தமிழகத்தில் தான்; ஆனால் எதிர்த்துக் கொண்டே இருப் பது மத்திய அரசை தான்!
பூரண
மதுவிலக்கு கேட்டு விடுதலை சிறுத்தை கள் மாநாடு நடத்துகின்றனர்; பெண்கள்
பாதுகாப்பை வலியுறுத்தி கம்யூனிஸ்டுகளும் போராட்டம் நடத்தப் போகின்றனர்;
உங்கள் கண்களுக்கு மட்டும் தமிழக அரசிடம் எந்த குறையும் தெரியாதது எப்படி?
பொதுக்குழுவில்பேசியபடி,
ம.நீ.ம., எவ்வளவு பெரிய கூட்டம் என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை,
தொண்டர்களுக்குரியது அல்ல; அதை வழிநடத்தும் தலைவருக்கு தான் முழு
பொறுப்பும் உண்டு!
ஆக, 2026 சட்டசபைதேர்தலில் அதை நிரூபிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடும் பெண்கள்!
கே.ரங்கராஜன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆன்மிக சொற்பொழிவாளர்
மகாவிஷ்ணு கைதுக்கு தீவிரம் காட்டிய காவல்துறை, கோவை மாவட்டத்தில்,
தி.மு.க., பிரமுகர் வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு காட்டவில்லை.
கோவை
மாவட்டத்தில் வடவள்ளியைச் சேர்ந்த மணிகண்டனின் மனைவி, தி.மு.க., பிரமுகர்
கதிரேசன்வீட்டில், காலை 6:00 முதல் மாலை 6:00 வரை, கடந்த இரண்டரைஆண்டுகளாக
வேலை செய்து வருகிறார்.
இவருக்கு, கதிரேசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதை வீடியோ எடுத்து, அவ்வப்போது மிரட்டியுள்ளார்.
'வெளியே
சொன்னால், வீட்டில் உள்ள நகைகளைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில்
புகார் சொல்லி விடுவோம்' என்றும், 'உன் குழந்தைகளை கொன்று விடுவோம்'
என்றும் மிரட்டி உள்ளனர்.
கடைசியாக மணிகண்டனின் பெண்ணுக்கும்,கதிரேசன் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
பொறுத்துப்
பொறுத்து பார்த்த அந்த பெண், வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தார்;
காவல் நிலையத்தினர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பின், கோவை
கமிஷனர்அலுவலகத்தில் புகார் கொடுத்து உள்ளார், மணிகண்டனின் மனைவி. இதற்கு,
கதிரேசன்குடும்பத்தினர் அவரை, அளவுக்கு அதிகமாக மிரட்டியுள்ளனர்.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற மேடைப் பேச்சாளர் பெண்களை இழிவாக பேசினால், மற்றவர்களை சமாதானப்படுத்த கட்சியிலிருந்து நீக்கம்
பெண் காவலரின் இடுப்பை சக போலீசார் கிள்ளினால், காவலரை புகார் கொடுக்காத மாதிரி மிரட்டி வைப்பது
காலில் சலங்கைக் கட்டி, 'டாஸ்மாக்' ஆட்டம் தலைக்கு மீறுகிறது
'உனக்கு சளைத்தவர்களா நாங்கள்?' என, புதுப்புது போதை வஸ்துக்கள் பல்கிப் பெருகி விட்டன
தினசரி பெருகும் கொலைகள், பாலியல் சீண்டல்கள்.
மது அரக்கன் துரத்தியது;கஞ்சா துரத்தியது; மெத்தாம்பேட்டமைன் துரத்தியது; பதவியும், அதிகாரமும் துரத்தியது...
ஓடுகிறாள்... ஓடுகிறாள்...வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடுகிறாள் பெண்.
கருணாநிதியின், பராசக்தி பட வசனம், எப்படி கைகொடுக்குது பாருங்க!