PUBLISHED ON : மே 24, 2026 12:00 AM

பா.பரத்வாஜ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: சுற்றும், முற்றும் எதிரிகளும், காலை வாரி விடத் தயாராக இருக்கும் நய வஞ்சகர்களும் நிறைந்ததுமான சூழலில் நீங்கள் முதல்வர் பதவி ஏற்றிருக்கிறீர்கள், சபாஷ் விஜய்!
வாழ்க்கை, எளிதாக இருந்து விட்டால், சுவாரசியம் இருக்காது அல்லவா! காடும், மேடும், கல்லும், முள்ளும் நிறைந்துள்ள, சிக்கலான பதவியில், குறைந்த வயதில் அமர்வது எளிதான காரியம் அல்ல. அதுவும் ஒரே, 'ஸ்ட்ரோக்'கில் கிரிக்கெட் மேட்சையே வெற்றி பெற்றது போன்று நீங்கள் வாகை சூடி விட்டீர்கள்.
அரசியலில் பழம் பெருச்சாளிகள் அனைவரையும், கண் சிவக்க, பருத்த உடல் வியர்க்க, மீசை துடிக்க, மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க, ஓரமாய் கட்டாந்தரையில், களைப்புடன் அமர வைத்து விட்டீர்கள். சும்மா இருப்பரா... ஒவ்வொரு நொடியும் நேரடியாகவும், மறைமுகமாகவும் உங்களுக்கு குடைச்சல் ஒரு பக்கம்; குழி தோண்டுவது மறு பக்கம் என, சீரியசாக வேலை பார்த்துக் கொண்டிருப்பர்.
இத்தனை நாளாக ஏனோ தானோவென வேலை பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகள் ஒரு பக்கம், வேலையே தெரியாமல், திண்டாடும் அமைச்சர்கள் ஒரு பக்கம் என, அனைவரையும் கண்காணித்து, உங்கள் துறையையும் கவனித்துக் கொண்டு, கண்கொத்திப் பாம்பாக செயல்பட வேண்டிய நேரமிது. இதற்கெல்லாம் கிஞ்சிற்றும் அஞ்ச வேண்டாம். காடு, மலை, மேடு, பள்ளம், கல், முள் தானே இவை.
துாற்றல்களையும், போற்றல்களையும் சொந்தமாக்கிக் கொண்டால் தான், நம் தலை தெறிக்கத் துவங்கும். எதையும் சொந்தம் கொண்டாடாமல், 'லேசா லேசா' எடுத்துக் கொண்டு, மனம் நிறைய மகிழ்ச்சியையும், முகம் நிறைய சிரிப்பையும் தேக்கியபடி, 'ஜம்'மென வேலை செய்யுங்கள்.
சந்தோஷமாக வாழவே பிறந்திருக்கிறோம் நாம். அதுவும், மக்களுக்கு துாய்மையான சேவைகளைச் செய்வதென்பது, மிகவும் கொடுப்பினையான விஷயம். ஜமாய்ங்கள். முகத்தில் புன்னகையை, சிரிப்பை நிலைநிறுத்துங்கள்; வெற்றி உங்களுக்கே!
lll
அப்துல் கலாம் கனவை நிறைவேற்றுங்கள்! முனைவர் கணேசன், சிகாகோ,
அமெரிக்காவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியலில், 60
ஆண்டுகளாக மாற்று அரசியல் எடுபடாத நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர்
விஜய், இரு திராவிட கட்சிகளையும் வீழ்த்தி, வெற்றி பெற்றுள்ளது மிகப்பெரிய
சாதனை என்றே கூற வேண்டும்.
அதேநேரம், மாநிலம் மற்றும் நாட்டின் மீது அக்கறை கொண்ட குடி மகனாக, முதல்வர் விஜயிடம் சில கோரிக்கைகள்...
l கழகங்களும், அதற்கு, 'ஆமாஞ்சாமி' போடும் உதிரிக்கட்சிகளும் புலம்பி
வரும், 'நீட்' தேர்வு ரத்து, மும்மொழிக் கல்விக்கு எதிர்ப்பு,
தொட்டதற்கெல்லாம் மத்திய அரசை குறை கூறுவது போன்ற தவறுகளை தவிருங்கள்!
l மதச்சார்பற்ற நிலை என்று கூறிக்கொண்டே, பெரும்பான்மை மதத்தை வசைபாடுவது
என்பது, சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது போன்றது என்பதை,
தி.மு.க.,வின் இன்றைய நிலையை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்!
l
கோவில் நிர்வாகம், நீர்நிலைகள், மணல் குவாரிகள், மழைநீர் சேமிப்பு, மழைக்
காலத்தில் ஏற்படும் இடர்பாடுகள், சாலைகள் பாதுகாப்பு போன்ற பிரச்னைகளுக்கு
தீர்வு காண்பதுடன், பள்ளிக்கல்வித் திட்டத்தில், கழகங்களின் தேவையற்ற
கருத்துகளை நீக்கி, பாரதியின் புதிய ஆத்திசூடி, திருக்குறள், அறம் சார்ந்த
நீதி நுால்களை பாடங்களாக சேர்க்க வேண்டும்
l மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டிருப்பது, நீங்கள் அவர்களுக்கு நல்லது செய்வீர்கள் என்ற நம்பிக்கையால் தானே!
அதனால், உளுத்துபோன தி.மு.க.,வின் பழைய பஞ்சாங்கமான மொழி அரசியலை
கைவிட்டு, இன்றைய காலத்திற்கு மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை யோசித்து,
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் முதல்வர் காமராஜர் கண்ட
கனவுகளை நனவாக் குங்கள்! lll
கைப்புண்ணுக்கு எதற்கு
கண்ணாடி? எம்.கலைவாணி, அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: 'கொளத்துார் தொகுதியின் கேடுகெட்ட மக்கள், ஸ்டாலினை
தோற்கடித்துவிட்டனர்' என்று தி.மு.க., முன்னாள் அமைச்சர் அனிதா
ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
இவரது கட்சி தலைவர், பொதுச்செயலர்,
முக்கியமான அமைச்சர்கள் என, கூண்டோடு காலியாகி இருக்கின்றனர்; இருந்தும்
முன்னாள் அமைச்சருக்கு திமிர் பேச்சு அடங்கவில்லை.
இந்நிலையில், குழு அமைத்து தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்யப்போகிறாராம் தி.மு.க., தலைவர் ஸ்டாலின்!
கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்வதைப்போல், ஐந்து ஆண்டுகாலம் மாய உலகில் இருந்து, தோற்றபின் காரணத்தைத் தேடுகிறார்.
தி.மு.க.,வின் தோல்விக்கு நுாறு காரணங்களைப் பட்டியலிடலாம்; அவற்றில் ஒரு சிலவற்றையாவது ஸ்டாலின் தெரிந்துகொள்வது அவசியம். அவை:
l அமைச்சர் மற்றும் கட்சி நிர்வாகிகளின் திமிர் பேச்சை, கட்சித் தலைமை கண்டிக்காதது
l ஊழல்வாதிகள் என்று பெயரெடுத்த அமைச்சர்களுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுத்தது
l போதைப்பொருள் கடத்தல், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களோடு அமைச்சர்கள் ஒட்டி உறவாடியது
l பெண்கள் தனித்து எங்கும் செல்ல முடியாத அளவுக்கு, சட்டம் - ஒழுங்கு சந்தி சிரித்தது
l கனிம வளங்களை கட்சியினர் கொள்ளையடிப்பதை கண்டு கொள்ளாததுடன், தட்டிக் கேட்கும் சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுவது!
l தி.மு.க., என்ற கட்சியை, தங்கள் பரம்பரை சொத்துபோல் முதல்வரின்
குடும்பத்தார் கையில் வைத்துக்கொண்டு, ஒரு கம்பெனியை போல் நடத்தியது
l ஹிந்துக்களை சூடு சொரணையற்ற இளிச்சவாயர்களாக கருதி, தொடர்ந்து இழிவு படுத்தி வந்தது
l திருப்பரங்குன்றம் தீபத்துாணில் விளக்கேற்றும் விவகாரத்தில், ஹிந்துக்களுக்கு எதிராக நாடகம் நடத்தியது
- இவையெல்லாம் தான், தி.மு.க., தோல்வியடைய காரணம் என்பது கடைக்கோடியில்
உள்ள சாமானியனுக்கும் தெரியும் எனும் போது, ஸ்டாலினுக்கு தெரியவில்லை
என்பது ஆச்சரியம் தான்!
கைப்புண்ணுக்கு எவரா வது கண்ணாடி தேடுவரா?
lll
