PUBLISHED ON : நவ 08, 2024 12:00 AM

எஸ். உதயம் ராம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: போதை, கடத்தல், வன்முறை, ஜாதியின் பெயரில்கருத்துத் திணிப்பு, வியாபாரத்திற்காக சதை தொங்கிய கதாநாயகர்களின் முகத்தை நம்பி புளித்துப்போன கதைகள், காட்சிகள், அமானுஷ்யம் என்றெல்லாம் திக்குத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த தமிழ் சினிமா தற்போது கொஞ்சம் தலை நிமிரத் துவங்கியிருக்கிறது.
கதாநாயகனுக்கு, 200 கோடி, 300 கோடிசம்பளம் கொட்டிக் கொடுத்து, 'இந்தியா முழுதும்' என்ற பெயரில், எல்லா மொழி நடிகர் - நடிகையரையும் திரைக்குள் திணித்து, கதையே இல்லாமல் வெறும் ஆட்டம் பாட்டங்களுடன், ரசிகர்களை திரையங்குகள் பக்கம் வரவிடாத வருத்தமான சூழல், இன்று கொஞ்சம் மாறியிருக்கிறது.
பக்கத்திலுள்ள குட்டி மாநிலமான கேரளாவில் இருந்து, சிறந்த கதையம்சங்களுடன் குறைந்த பொருட்செலவில் படங்கள்வெளிவந்து வெற்றி பெறுவதைப் பார்க்கும்போது, தமிழ் சினிமா மட்டும் ஏன் இப்படி தரமின்றி சீரழிந்து வருகிறது என்று இருந்த ஏக்கமும் கவலையும், மெல்ல மெல்ல விலக ஆரம்பித்திருக்கிறது.
கிராமத்து வாழ்வியலை வலியுடன் சொன்ன வாழை திரைப்படம், அந்த காலத்து கிரிக்கெட் நினைவுகளோடு எளிய மனிதர்களின் மன உணர்வுகளோடு நம்மைப் பயணப்பட வைத்த லப்பர் பந்து படம், உறவுகளின் உணர்வை நம் நாடிகளில் ஓடவிட்ட மெய்யழகன் படம், நம் கண் முன் வாழ்ந்து மறைந்த போர்வீரன் முகுந்தனின் வாழ்க்கையைப் படமாக்கி தேசப் பற்றைத் துாண்டி விட்ட அமரன் போன்ற படங்களால் தமிழும், தமிழ் சினிமாவும் சற்றே தலை நிமிர்ந்திருக்கிறது.
அதேசமயம், இந்த புதிய இயக்குனர்களை உச்ச நடிகர்கள் தங்கள் பக்கம் இழுத்து, தங்கள் சுயலாபத்திற்காக இவர்களின் உரத்த சிந்தனைகளை மழுங்கடித்து விடக் கூடாதே என்ற பயமும்,கூடவே ஏற்படுகிறது.
புதிய சிந்தனைகளுடன் புதிய கதை களத்தில் தடம் பதிக்க வரும் வித்தியாசமான இயக்குனர்களை நம்பி, பெரிய திரை நிறுவனங்கள் முதலீடு செய்தால், தமிழ் சினிமா, உலக அரங்கில் பல விருதுகளைப் பெற்று பெருமையுடன் கம்பீர நடை பயிலும் என்பது உறுதி!
கனடாவுக்கும் கடிவாளம் தேவை!
வெ.சீனிவாசன்,
திருச்சியில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: மாலத்தீவு
ஆட்சியாளர்கள், சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து,
சீனாவுடன் கொஞ்சிக் குலாவினர். மாலத்தீவு அதிபர் சீனாவுக்கு சென்று வந்தார்.
மாலத்தீவின் சில அமைச்சர்கள் இந்தியாவை துச்சமாகப் பேசினர்.
இதைக்
கண்டு, தேசபக்தியுள்ள நம் நாட்டுமக்கள் கொதித்தெழுந்தனர். மாலத்தீவுக்கு
சுற்றுலா செல்வதை தவிர்த்தனர். மாலத்தீவு ஆட்சியாளர்களுக்கு வயிற்றில் அடி
விழுந்தவுடன், இப்போது இந்தியாவை தாஜா செய்ய முயன்று வருகின்றனர்.
இதேபோல,
கனடாவில் கடுமையான மக்கள் தொகை பற்றாக்குறை உள்ளது; குடியுரிமை வழங்கி பல
நாட்டினரையும் வரவேற்கின்றனர். குடிபெயர்ந்து செல்பவர்களில் பலர்
இந்தியர்களே. இதேபோல், கனடாவில் உயர்கல்வி படிக்க வரும் வெளிநாட்டவர்களில்
கிட்டத்தட்ட, 40 சதவீதத்தினர் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது.
இந்தியர்கள்
கனடாவுக்கு குடிபெயர்வதை தவிர்த்தால், வேலை செய்வதற்கு போதிய ஆட்கள் இல்லாத
நிலை கனடாவுக்கு ஏற்படலாம். இதேபோல், இந்திய மாணவர்கள் கல்விக்காக கனடா
செல்வதை தவிர்த்து,பிற நாடுகளுக்கு சென்றால், கனடா பல்கலைக் கழகங்களுக்கு
கடும் நிதி பற்றாக்குறை ஏற்படலாம்.
வாடகைக்கு ஆட்கள் கிடைக்காமல்
வீடுகளின் உரிமையாளர்கள் தவிக்கலாம். அவ்வளவு ஏன்... கனடாவின் ஒட்டுமொத்த
பொருளாதாரமும் பெருமளவில் பாதிக்கப்படலாம்.
கனடா
ஆட்சியாளர்களும் தொடர்ந்து, தனிநபர் சுதந்திரம் என்ற பெயரில், அரசியல்
காரணங்களுக்காக, கனடா மண்ணில் இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத போக்கை
ஊக்குவிப்பது, கண்டு கொள்ளாமல் இருப்பது ஏற்புடையதல்ல.
எனவே,
மாலத்தீவுக்கு நாம் செய்து காண்பித்ததைப் போலவே, கனடாவுக்கும் செய்து
காட்டிவிட வேண்டும். நம் மத்திய அரசும், வெளியுறவுத் துறையும்,
முன்பிருந்ததைவிட, இப்போது உறுதியாக உள்ளன.
'கனடா அரசு, அவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில், வழக்கில் சிக்கிக் கொண்டுள்ள
கனடாவில் வாழும் இந்திய வம்சாவழி பிரிவினைவாதிகளை காலம் தாழ்த்தாமல்
இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். தவறினால் நாங்கள் களத்தில் இறங்க
நேரிடும்' என்று உறுதிபடக் கூற வேண்டும்.
கூடவே, கனடாவுக்குஆதரவாக
கருத்து தெரிவிக்கும், அவர்களது அண்டை வீட்டுக்காரர் அமெரிக்காவிற்கும்
இந்தியாவின் நிலைப்பாட்டை புரிய வைக்க வேண்டும்.
இப்படி,
ஒன்றிணைந்துஉறுதியுடன் செயல்பட்டால், சீனா, மாலத்தீவு போல, கனடாவும் நம்
நிலைப்பாட்டை, உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்பட வாய்ப்புள்ளது.
மேஜர் முகுந்த் இந்திய ஜாதிக்காரர்!
சி.கார்த்திகேயன்,
சாத்துார்,விருதுநகர் மாவட்டத்தில்இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:
இந்திய ராணுவத்தில் பணியாற்றியபோது உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜன்
வாழ்க்கை, அமரன் என்ற திரைப்படமாக வெளியாகி,அதிக பாராட்டுகளைப் பெற்று
வருகிறது.
ஆனால், முகுந்தின் சொந்த ஜாதியை வேண்டுமென்றே மறைத்து விட்டதாக சிலர் அங்கலாய்க்கின்றனர்.
இந்த
படத்தை தயாரித்த கமல்ஹாசனே, முகுந்தின் ஜாதிக்காரர் தான் என்பதை மறைக்க
முடியுமா? அவர், தன்னை அப்படிக் காட்டிக்கொள்வதில் தயங்குகிறாரே தவிர,
அவரால் அதை முற்றிலும் மனதில் இருந்து நீக்க முடியாது!
அதே போல்,
மணிரத்னம், ஷங்கர் போன்ற, 'பேன்சி, பேன்டசி, ப்ரியாரிட்டி' இயக்குனர்களின்
ஹீரோவே, முகுந்த் ஜாதிக்காரர்களாகத் தான் பெரும்பாலும் இருப்பர். எந்த
வகையிலும், இது மட்டம் தட்டக்கூடிய செயல் இல்லை.
ஒரு ராணுவ வீரர்
என்பவர், 100 சதவீத இந்தியன் என்ற நிலையில், அமரன் பட இயக்குனர், முகுந்த்
ஜாதியை காட்டாமல் விட்டிருக்கலாம். முகுந்தின் தனிப்பட்ட வாழ்க்கையைவிட, நம்
நாட்டிற்காக உயிர்நீத்த விஷயத்தை தான், இயக்குனர் கதைக் களமாக
எடுத்திருக்கிறார்.
மேஜர் முகுந்த் அந்த ஜாதி, இந்த ஜாதி என்று சொல்வதை விட, வீரம் நிறைந்த இந்திய ஜாதிக்காரர் என்று சொல்லிக் கொள்ளலாமே!
ராணுவ
வீரரின் உயிர் தியாகம், வருங்கால இளைய சமுதாயத்திற்கு ஒரு
எடுத்துக்காட்டு மட்டுமின்றி, நாட்டை காக்க முயல வேண்டும் என்ற
உத்வேகத்தை ஏற்படுத்தும் என்பதே உண்மை.