PUBLISHED ON : மே 17, 2025 12:00 AM

பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளா மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சில ஊடகங்கள் விமர்சிப்பதில் காட்டும் ஆர்வத்தை, நல்ல திட்டங்களை பாராட்டுவதில் காண்பிப்பது இல்லை. பாராட்ட வேண்டியதை பாராட்டினால் தான், விமர்சனத்திற்கான மரியாதையும், மதிப்பும் கிடைக்கும். எனவே, தயங்காமல் விமர்சிப்பது போன்று, தயங்காமல் பாராட்டவும் வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார், முதல்வர் ஸ்டாலின்.
பாராட்டு, புகழ்ச்சியை எல்லாம் கேட்டு வாங்கக் கூடாது; அவைகள் தானாக கிடைக்க வேண்டும். அதுதான் பெருமை. அது மட்டுமின்றி, காரணமே இல்லாமல் பாராட்டிக் கொண்டே இருக்க, ஊடகங்கள் எல்லாம், தி.மு.க., வின் அடிவருடிகள் அல்லவே!
காமராஜர் இறந்து, 50 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால், இன்றும் ஊடகங்கள் அவரையும், அவரது ஆட்சியையும் புகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்கு காரணம், அவரது எளிமை, நேர்மை, துாய்மையான வாழ்க்கை மற்றும் பொற்கால ஆட்சியும் தான்!
அது, திராவிட மாடல் ஆட்சியில் இருக்கிறதா?
கடந்த நான்காண்டு ஆட்சியில், பூரண மதுவிலக்கை அமல்படுத்தி இருந்தால், போதைப்பொருட்களின் விற்பனையை தடுத்திருந்தால், கள்ளச்சாராயம், லஞ்சம் ஊழலை ஒழித்திருந்தால், ஊழல் வழக்குகளில் சிக்காத நேர்மையானவர்களை அமைச்சர்களாக்கி இருந்தால்...
கனிம வளக் கொள்ளையை தடுத்திருந்தால், மழைநீர் வீணாவதை தடுக்க நீர்நிலைகளை மேம்படுத்தியிருந்தால், டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடக்காமல் இருந்திருந்தால் கண்டிப்பாக எல்லா ஊடகங்களும் பாராட்டி இருக்கும்.
ஆனால், தி.மு.க.,வின் நான்காண்டு ஆட்சியில் நடந்தது என்ன? கருணாநிதிக்கு சிலைகள் வைத்ததும், அரசு கட்டடங்களுக்கும், திட்டங்களுக்கும் அவர் பெயரை சூட்டியதும், கருணாநிதியின் சமாதியை, 40 கோடி ரூபாயில் புதுப்பித்தலும் தானே நடந்தது!
கருணாநிதி நுாற்றாண்டு விழாவை கொண்டாடுவதில் இருந்த ஆர்வம், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வெளிப்படவில்லையே... பின் எப்படி, அனைத்து ஊடகங்களும் பாராட்டும்?
முதல்வர் ஆசைப்படலாம்; பேராசைப் படக்கூடாது!
மிரட்டலுக்கு அடிபணிந்த பாகிஸ்தான்!
எஸ்.அனந்தராமன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பாகிஸ்தான் ராணுவ
ஜெனரல் ஆசிம் முனீர் என்பவர் தான், அந்நாட்டின் சர்வ வல்லமையுள்ள
ஆட்சியாளர். ஷெபாஸ் ெஷரீப் வெறும் பொம்மை பிரதமர் மட்டுமே!
இப்போது மட்டுமல்ல... பல ஆண்டுகளாகவே அந்நாடு, ராணுவ ஜெனரல்களின் பிடியில் தான் அகப்பட்டுள்ளது.
மக்களாட்சி என்பது அங்கு வெறும் வாய் வார்த்தை மட்டுமே!
ஜனநாயக
முறையில் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஒரு பயனும் இல்லை. 'டம்மி'
பிரதமர்களாக, நிர்வாக அதிகாரம் இல்லாமல், நாற்காலியை தேய்த்துக்
கொண்டிருக்க வேண்டியதுதான்!
உண்மையில் அதிகாரம் எல்லாம் ராணுவ ஜெனரல்கள் வசமே உள்ளன.
அவர்களை பகைத்துக் கொண்டதால் தான், முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தற்போது ஜெயிலில் களி தின்று கொண்டிருக்கிறார்!
இந்தியா
- பாகிஸ்தான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் நிறுத்தம் கூட, அமெரிக்க
அதிபர் டொனால்டு டிரம்ப், ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோளுக்கிணங்க, ஆசிம் முனீரை
மிரட்டியதாலே அரைகுறையாக செயலுக்கு வந்துள்ளது.
அந்நாட்டில் உள்ள,
'லித்தியம்' போன்ற பல கனிம வளங்களை, அடிமாட்டு விலைக்கு அமெரிக்காவுக்கு
விற்கவேண்டும் என்பது டிரம்ப்பின் நிபந்தனை!
எப்படி ரஷ்யா - உக்ரைன்
பிரச்னையில், உக்ரைனிடம் உள்ள கனிம வளங்களை அமெரிக்காவுக்கு விற்க
வேண்டும் என்று மிரட்டல் விட்டு, ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதோ, அதுபோன்ற மிரட்டலே, தற்போது பாகிஸ்தானை பணிய
வைத்துள்ளது!
கடைசியில், பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்க புறப்பட்ட கதையாக போய் விட்டது, பாகிஸ்தானுக்கு!
வியூகம் வெற்றி பெறுமா?
எஸ்.ஆறுமுகம்,
கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும் சட்டசபை
தேர்தலில், 200 தொகுதிகளில் வெல்வோம் என்று இதுவரை கூறிக் கொண்டிருந்த
முதல்வர் ஸ்டாலின், 234 தொகுதிகளிலும் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
என்று சமீபகாலமாக கூறத் துவங்கியுள்ளார்.
ஆனால், அ.தி.மு.க.,
பொதுச்செயலர் பழனிசாமியும், பிற எதிர்க்கட்சிகளும், 'கடந்த நான்கு
ஆண்டுகளாக தமிழக மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டிருக்கும் திராவிட
மாடல் அரசு, 20 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே அதிசயம்' என்கின்றனர்.
இந்நிலையில்
சமீபத்தில், மாவட்ட செயலர்கள் கூட்டம் அறிவாலயத்தில் நடந்தது. இதில், 234
தொகுதிகளிலும் வெற்றிக் கனியை கொய்ய வேண்டும் என்றால், இவ்வளவு காலம்
வெறும் 200 ரூபாயை வாங்கிக் கொண்டு, கொடி பிடித்து, ஊர்வலங்களில் கோஷம்
போட்டு, போராட்டங்களில் பங்கேற்று, போஸ்டர் ஒட்டி காலம் கழித்துக்
கொண்டிருக்கும் உடன்பிறப்புகளை, அவரவர் தகுதிக்கேற்ப, அரசு பணிகளில்
உடனடியாக பணியமர்த்த சொல்லி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறுகின்றனர்.
ஏற்கனவே
பணியில் இருக்கும் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும் கழக அரசு தங்கள்
கோரிக்கைகளை நிறைவேற்றாமல்ஏமாற்றி கொண்டிருப்பதாக கூறி, 'தி.மு.க., அரசை
அப்புறப்படுத்தாமல் விடமாட்டோம்' என்று கறுவி கொண்டிருக்கின்றனர்.
அதேநேரம்,
இன்று அவர்கள் அரசுக்கு எதிராக முழங்கினாலும், போராடினாலும், தேர்தல் தேதி
அறிவிப்புக்கு பின், தி.மு.க., அளிக்கும் பொய் வாக்குறுதிகளை நம்பி,
ஓட்டுப்பதிவு அன்று முதல் ஆளாக ஓட்டளித்து விட்டு வருவர் என்பதில் சந்தேகம்
இல்லை!
அவர்களோடு தற்போது காலியாக உள்ள அரசு பணிகளில்
நியமிக்கப்படும் உடன் பிறப்புகளும் இணைந்து விட்டால், தி.மு.க., அதிக
தொகுதிகளில் வெற்றி பெறுவது சாத்தியமே!
இதை மனதில் வைத்தே, 234
தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறிக் கொண்டிருக்கிறார், ஸ்டாலின்.
பார்ப்போம்... முதல்வரின் தேர்தல் வியூகம் கோட்டையில் கொடியை ஏற்றுகிறதா,
குப்புற விழுகிறதா என்று!