PUBLISHED ON : மே 28, 2025 12:00 AM

எஸ்.பெரியசாமி, திருநெல்வேலியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நடந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி, 'தமிழகத்தின் நிதி உரிமையை நிலை நாட்டவும், அதை உரிமையோடு கேட்டுப் பெறவும், முதல்வர் டில்லியில் நடந்த, 'நிடி ஆயோக்' கூட்டத்துக்கு சென்றார்.
'அங்கு நம் உரிமையை நிலைநாட்டி பேசியுள்ளார். தமிழக நலனுக்கு எதுவும் செய்யாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தி.மு.க.,வை பார்த்து கேள்வி மட்டும் கேட்பார். தி.மு.க.,வை யாரும் மிரட்டவும் முடியாது; அடிமையாக்கவும் முடியாது. அமலாக்கத் துறைக்கு ஒருநாளும் பயப்பட மாட்டோம். ஏன்... பிரதமர் மோடிக்கு கூட பயப்பட மாட்டோம்' என்று பேசியுள்ளார்.
இவரது பேச்சுக்கும், வளர்ச்சி திட்ட ஆய்வு பணிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
திருமண மேடையாக இருந்தாலும் சரி... இறந்தவர் வீடாக இருந்தாலும் சரி... எதற்கு வந்தோம், என்ன நிகழ்வு என்பதை பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார், தமிழக முதல்வர் ஸ்டாலின்.
நான்கு பேரை கூட்டமாக பார்த்து விட்டாலே போதும்; எதிரில், 'மைக்' இருப்பது போல் கற்பனை செய்து, தொண்டையை செருமிக் கொண்டு, 'எந்த கொம்பனாலும் கேள்வி கேட்க முடியாத திராவிட மாடல் ஆட்சி இது. மத்திய அரசின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் நாம் அஞ்ச மாட்டோம்...' என்று வீர உரையாற்ற துவங்கி விடுவார்.
அதைபோன்று தான், துணை முதல்வர் உதயநிதியும் பேசி வருகிறார்.
மடியில் கனம் இல்லை என்றால், அமலாக்கத் துறையிடம், 'தாராளமாக சோதனை செய்து கொள்ளுங்கள்' என்று சொல்ல வேண்டியது தானே... 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல், எதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு ஓட வேண்டும்... இடைக்கால தடை பெற வேண்டும்?
ஆட்சிக்கு வந்த இந்த நான்கு ஆண்டுகளில் ஒருமுறை கூட, 'நிடி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்காத முதல்வர், டாஸ்மாக் ஊழல் விசாரணை சூடுபிடிக்க ஆரம்பித்ததும், கல்வி நிதியை கேட்டுப் பெறப் போவதாக கூறி, டில்லிக்கு ஓடியது ஏன்?
கடந்த மாதம், ராமேஸ்வரம் - பாம்பன் துாக்கு பாலத்தை திறக்க வந்த பிரதமரை சந்தித்து கல்விக்கான நிதியை கேட்டு பெற்றிருக்கலாமே? ஏன் செய்யவில்லை?
அத்துடன், அதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையில், நிதி உரிமையை பெற டில்லி சென்றதாக கூறினால், அதை நம்புவதற்கு மக்கள் முட்டாள்கள் இல்லையே!
சட்டம் அனைவருக்கும் சமமா?
எஸ்.ஜம்புநாதன்,
சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபகாலமாக
நீதித்துறையின் தீர்ப்புகள், 'சட்டத்தின் முன் அனைவரும் சமமா' என்ற
கேள்வியை எழுப்புகிறது.
முன்னாள் மின்சார துறை அமைச்சர் செந்தில்
பாலாஜி ஊழல் குற்றச்சாட்டில், சிறையில் இருந்த போதும் அமைச்சர் பதவி
வகித்தார்; பின் ராஜினாமா செய்தார். ஜாமின் கிடைத்ததும் திரும்பவும்
அமைச்சரானார்.
ஓர் ஆழ்ந்த துாக்கத்திற்கு பின், திடீரென்று
விழித்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், 'உங்களுக்கு ஜாமின் முக்கியமா, அமைச்சர்
பதவி முக்கியமா' என்றதும், திரும்பவும் ராஜினாமா நாடகம் அரங்கேறியது.
அதேநேரம், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு அவரை ஒத்துழைக்க சொன்னதாகத் தெரியவில்லை.
சொத்து
குவிப்பு வழக்கில், அமைச்சர் பொன்முடிக்கு மூன்றாண்டுகள் சிறைத்
தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது, சென்னை உயர்
நீதிமன்றம். பொன்முடி அமைச்சர் பதவியை இழந்தார்.
அதேநேரம், உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியதுடன், மீண்டும் அமைச்சரானார்.
பின், வேறு ஒரு வழக்கில் பதவியை துறந்தார்.
டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் ஊழல்... ஆனால், விசாரிக்கும் அமலாக்கத்துறைக்கு, வரம்பு மீறியதாக குட்டு!
இப்படி பெரும் ஊழல் பெருச்சாளிகள் சட்டத்தின் ஓட்டை வழியில் நுழைய, நீதிமன்றமும் அவர்களை எப்படியோ காப்பாற்றி விடுகிறது.
அதேநேரம், சாதாரண வி.ஏ.ஓ., கிளார்க் போன்றவர்கள் ஊழல் செய்யும்போது மட்டும் உடனே அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது ஏன்?
சட்டம் அனைவருக்கும் சமம் என்பது பொய்யா?
ராகுலுக்கு தகுதி இல்லை!
எஸ்.பெருமாள்,
சிவகங்கை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சர்வதேச
விவகாரங்கள் குறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின்
எம்.பி., ராகுல் ஆகியோருக்கு சிறிதும் புரிதல் இல்லை. காங்., கட்சியை
சிரிப்பு கூட்டமாக மாற்றி வைத்துள்ள இவர்களுக்கு சொல்புத்தியும் இல்லை;
சுயபுத்தியும் இல்லை' என்று ஒரே போடாக போட்டுள்ளார், உத்தரபிரதேச துணை
முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா.
காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப்
பயணியர், 26 பேரை ஈவு இரக்கமின்றி, அவர்கள் ஹிந்துக்கள் தானா என்று கேட்டு
கொன்று குவித்தனர், பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.
அத்துடன், 'போய்
உங்கள் மோடியிடம் சொல்லுங்கள்' என்று தெனாவெட்டாக கூறிய பயங்கரவாதிகளின்
முகாம்களை, மிக துல்லியமாக கண்டறிந்து, 24 நிமிடங்களில், 'ஆப்பரேஷன்
சிந்துார்' என்ற பெயரில், நம் விமானப்படை மகளிர் விமானிகளை வைத்தே துவம்சம்
செய்த சாகசத்தை, உலகமே வியந்து பாராட்டுகிறது.
ஆனால், காங்., -
எம்.பி., ராகுல், 'பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய நம் ராணுவ விமானங்கள்
எத்தனை?' என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அவர் கொள்ளு
தாத்தா நேரு ஆட்சிக் காலத்தில், 1947ல் ஜம்மு - காஷ்மீரில் மூன்றில் ஒரு
பகுதியை பாகிஸ்தானிடமும், 1962ல் சீனாவுடன் ஏற்பட்ட போரில், 32,000 சதுர
மைல் பரப்பளவை சீனாவிடமும் இழந்தது போல், மோடி அரசு, எதையாவது இழந்து
இருந்தால், அதை வைத்து அரசியல் செய்து, மக்களை தம் பக்கம் திருப்பலாம்
என்று தவியாய் தவிக்கிறார் ராகுல்.
நாட்டின் நலனைக் காட்டிலும், மோடிக்கு நற்பெயர் கிடைத்து விடக் கூடாது என்பதே ராகுலின் எண்ணம்.
அதனாலேயே மோடி ஆட்சியை கேள்வி கேட்பதாக நினைத்து, நம் ராணுவத்தின் மீதான தன் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தி உள்ளார்!
இவர் போன்றவர்கள் இந்த நாட்டை ஆள்வதற்கு மட்டுமல்ல; பார்லிமென்டுக்குள் நுழையவே தகுதி அற்றவர்கள்!