/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
விதி கெட்டு போனால் மதி வேலை செய்யாது!
/
விதி கெட்டு போனால் மதி வேலை செய்யாது!
PUBLISHED ON : டிச 27, 2025 03:15 AM

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
திருப்பரங்குன்றம் வழக்கில், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், 'தீபத்துாணில்
தீபம் ஏற்ற விட மாட்டோம்' என்று கூறி, நீதிமன்ற அவமதிப்பையும் எதிர்கொள்ள
தயாராக இருந்த தி.மு.க., அரசு, திண்டுக்கல் மாவட்டம் ஆலமரத்துப்பட்டியில்
சட்டவிரோத சர்ச் கட்டுமானத்திற்கு எதிராக நீதிமன்றம் உத்தரவிட்டும், சட்டம்
- ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி, நடவடிக்கை எடுக்க மறுக்கிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், 144 தடை உத்தரவு பிறப்பித்து,
ஹிந்துக்களை தீபம் ஏற்றவிடாமல் தடுத்த அரசு, சர்ச் விஷயத்தில் மட்டும்
கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இங்கும் 144 தடை உத்தரவு போட்டு, தடையை மீறியவர்களை கைது செய்து, சட்டவிரோத கட்டுமானத்தை தடுத்திருக்க வேண்டியது தானே?
சிறுபான்மை ஓட்டுக்காக இவ்வளவு கீழ்த்தரமாக அரசியல் செய்யும்
ஆட்சியாளர்களை பார்க்கும் போது, அக்கட்சியினர் துாக்கி பிடித்து கொண்டாடும்
பகுத்தறிவு பகலவன் ஈ.வெ.ராமசாமி, 'பெரியாரின் இறுதி பேருரை' என்ற நுாலில்,
பக்கம் 21ல் தி.மு.க.,வினர் ஓட்டுக்காக எந்தளவு தரம் இறங்கி நடந்து
கொள்வர் என்பது குறித்து கூறியது தான், நினைவுக்கு வருகிறது.
இந்த
லட்சணத்தில் இவர்கள் மதசார்பின்மை குறித்தும், அரசியல் சாசனத்தை காப்பாற்ற
பிறந்தவர்கள் போன்று மாய்மாலம் செய்கின்றனர். எத்தனை காலம் இந்த பொய்
நாடகத்தை அரங்கேற்றுவர்?
விதி கெட்டுப் போனால் மதி வேலை செய்யாதாம்... தி.மு.க., அரசும் தற்போது அந்த நிலையில் தான் உள்ளது!
வக்கீல்களுக்காக விரயமாகும் வரிப்பணம்!
வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இந்தியாவின் செல்வம், 10 கோடீஸ்வரர்கள் கையில் தான் உள்ளது; அவர்கள் தான் நாட்டின் அரசியலையே தீர்மானிக்கின்றனர்' என்று காம்ரேடுகள் அடிக்கடி முழங்குவது உண்டு. ஆனால், சத்தம் இல்லாமல் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் கில்லாடிகள் பல துறைகளில் உண்டு.
அவ்வகையில், தமிழ்நாடு கூடுதல் அட்வகேட் ஜெனரல் பணியில் உள்ளவர்களுக்கு, தி.மு.க., அரசு அதீத ஊதியம் வழங்கி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மதுரை காமராஜ் பல்கலையில், ஓய்வு பெற்ற ஊழியர்கள் 12 பேர், அரசு மீது தொடுத்த வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, 'வழக்குகளில் ஆஜர் ஆகும் மூத்த வழக்கறிஞருக்கு ஒரு வாய்தாவுக்கு, 4 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தியுள்ளது, அரசு. ஓய்வு பெற்ற ஊழியர்களின் பண பயன்களை வழங்க பணம் இல்லாத அரசு, தேவை இல்லாமல் அதிகமான வழக்கறிஞர்களை நியமிக்கிறது.
'கூடுதலாக நியமிக்கப்பட்டவர்களுக்கு வேலை தர வேண்டும் என்பதற்காக, தேவைப்படாத விஷயங்களுக்கு கூட, அவர்களை அனுப்புகிறது. எனவே, அரசு வழக்கறிஞர்களின் ஊதியத்தை தணிக்கை செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது' என்று கூறியுள்ளது, நீதிமன்றம்.
இந்நிலையில், கடந்த 14 ஆண்டுகள் மதுரை மாநகராட்சி வக்கீலாக பணிபுரிந்த திருமலை என்பவர், அரசு தனக்கு, 13 லட்சத்து, 5,770 ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக வழக்கு தொடர்ந்து இருப்பது குறிப்பிடத் தக்கது!
ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள், இ.எஸ்.ஐ., - பி.எப்., ஓய்வூதிய பணப்பயன்கள் கிடைக்காமல் போராடுகின்றனர். ஆனால், அரசோ டாட்டா, பிர்லா, அதானி, அம்பானி தான் நாட்டை ஆட்டி படைக்கின்றனர் என்று முழக்கமிட்டுக் கொண்டே, சட்டத்தை தன் இஷ்டத்திற்கு வளைக்க, மக்களின் வரிப்பணத்தை எடுத்து, விரயம் செய்கிறது.
நாட்டின் செல்வம் தேவைப்படுவோருக்கு சீராக வினியோகம் செய்ய வேண்டும் என்பது தான் ஜனநாயகமே தவிர, தங்கள் தவறுகளில் தப்புவிக்க, ஒரு சட்டக் கூட்டத்தை உருவாக்குவதற்கு அல்ல!
மதுரையின் பரிதாப நிலை!
ஜ.கு.சுஜிதா, கல்லுாரி மாணவி, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தால் நடத்தப்படும், 'ஸ்வச்சர்வேக் ஷன் 2025' எனும் துாய்மை கணக்கெடுப்பில், இந்தியாவிலேயே துாய்மையற்ற நகரங்களில், மதுரை முதல் இடத்தை பிடித்துள்ளதை அறிந்தபோது, மனதில் மிகுந்த வேதனை ஏற்பட்டது.
புராண காலத்தில், தேவர்களின் தலைவன் இந்திரன் நிர்மாணித்த மதுரை மாநகரம், இன்று குப்பை நிறைந்த அழுக்கு நகரமாக, துாய்மையற்ற நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எத்தனை பெரிய அவமானம்?
இந்நிலையை மாற்ற, 'ஸ்மார்ட் மதுரை' செயலியை சமீபத்தில் அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. செயலியை உருவாக்கினால் மட்டும் போதாது; அதை முறையாக பராமரித்து, மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், அந்தந்த பகுதி மக்கள் ஒன்றிணைந்து சாலை சீரமைப்பில் பங்கெடுக்கலாம்; பெரிய வணிக நிறுவனங்கள் சமூக பொறுப்புடன் அடிப்படை வசதிகளை உருவாக்க உதவலாம்; அரசு துறைகள், சமூக பிரச்னைகளுக்கு மாணவர்கள் வாயிலாக தீர்வுகள் காணும், 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' போன்று, 'ஸ்மார்ட் தமிழ்நாடு ஹேக்கத்தான்' எனும் பெயரில் மாணவர்களை ஒருங்கிணைத்து, புதுமையான யோசனைகளை நடைமுறைப் படுத்தலாம்.
அதேநேரம், பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு கடுமையான அபராதம் விதிப்பதுடன், சரியான நிறுத்தங்களில் குப்பை வாகனங்கள் நிறுத்தப்பட்டு குப்பையை சேகரிக்க வழிவகை செய்ய வேண்டும்.
அத்துடன், கழிவுநீர் கால்வாய் அடைப்பு, உடைப்பு, குப்பை தேக்கம், குடிநீர் வீணாகுதல், 'செப்டிக் டேங்க்' உடைந்து வீதிகளில் கழிவுநீர் தேங்குதல் போன்ற புகார்களுக்கு, உடனடி தீர்வு வழங்கப்பட்டால் மட்டுமே மக்களிடம் நம்பிக்கை ஏற்படும்.
மதுரையை துாய்மையான நகரமாக்க பல வழிகள் உள்ளன; ஆனால், அவற்றை செயல்படுத்த அரசு சட்டத்தை கடுமையாக்க வேண்டும்; மக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து, மாற்றத்தை தங்களிடமிருந்து தொடங்க வேண்டும்!

