தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ மடியில் கனமில்லை என்றால் பயம் ஏன்?

 மடியில் கனமில்லை என்றால் பயம் ஏன்?

 மடியில் கனமில்லை என்றால் பயம் ஏன்?


PUBLISHED ON : ஆக 10, 2026 12:34 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 10, 2026 12:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ப.கமலா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

எப்.சி.ஆர்.ஏ., எனும் வெளிநாட்டு நிதி ஒழுங்கு முறை சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்த நினைக்கிறது, மத்திய அரசு. அதேநேரம், இச்சட்ட திருத்தம் நிறைவேற்றுவதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, பார்லிமென்ட்டை செயல்பட விடாமல் முடக்கி வருகின்றனர், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்.

தொண்டு நிறுவனங்கள், மத அமைப்புகள், கல்வி நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி தருபவர்கள் யார், என்ன நோக்கத்திற்காக அவர்கள் நிதி அளித்துள்ளனர், அந்த நிதி இந்தியாவில் எந்த வழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து, அதை முறைப்படுத்துவது தான், எப்.ஆர்.சி.ஏ.,சட்டத்தின் நோக்கம்.

இதில் எதிர்க்க என்ன இருக்கிறது?

சாதாரணமாக, ஒரு குடும்பத்தில் சம்பாதிப்பவர் ஆண் - பெண் யாராக இருந்தால், எந்த வழியில் சம்பாதிக்கிறார், அதை நல்ல வழியில் செலவு செய்கிறாரா, தீய பழக்கங்களுக்கு செலவு செய்கிறாரா என்று கண்காணித்து, அவர்களை ஒழுங்குபடுத்துவது அக்குடும்பத்தின் தலைவன் - தலைவியின் கடமை.

அப்படி கண்காணிக்காமல் விட்டால், ஒன்று, பிள்ளைகள் வழி தவறி போய் விடுவர்; மற்றொன்று, குடும்பத்தின் நிதி நிலைமை கவலைக்கிடமாக மாறி, குடும்பத்தின் நிம்மதி பறிபோகும்.

ஒரு குடும்பத்திற்கே அதன் நிதி வரவு குறித்த கண்காணிப்பு அவசியம் எனும் போது, நாட்டிற்கு அது எவ்வளவு முக்கியமாக இருக்க வேண்டும்!

ஆனால், 'இச்சட்ட திருத்தத்தால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தங்களின் சமூக ஊடகக் கணக்குகள், இணையதளங்கள் மற்றும் வெளியீடுகளின் விவரங்களை அரசுக்கு தரவேண்டியது கட்டாயமாகிறது; இதனால், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியாது. இது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்' என்று கூறி, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இச்சட்டத்தை எதிர்க்கின்றனர்.

தொண்டு நிறுவனங்களோ, கல்வி மற்றும் மதரீதியான அமைப்புகளோ நேர்மையாக செயல்படும் போது, எப்படி பாதிக்கப்படும்?

வெளிநாட்டில் இருந்து நிதியே வரக்கூடாது என்று சட்டம் வரப்போவது இல்லையே... எவர் பணம் அனுப்புகிறார், எதற்காக அனுப்பியுள்ளார், அந்தப் பணம் எந்த வழியில் செலவு செய்யப்படுகிறது என்பதை தானே மத்திய அரசு அறிய விரும்புகிறது.

மடியில் கனமில்லை என்றால், எதற்கு பயம் கொள்ள வேண்டும்?

மக்கள் மனங்களை வெல்ல கற்றுக் கொள்ளுங்கள்!


கே.ரமேஷ் பாபு, கே.வடமதுரை, கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை பார்த்த போது, எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களை எதிர்கொள்ளும் கடினமான பாடத்தில், தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், வெற்றி பெற்று விட்டனர் என்றே சொல்லலாம்!

முன்னாள் சட்டத் துறை அமைச்சர் ரகுபதியின் கேள்வியை எதிர்கொண்ட நிதியமைச்சர் மரியம் வில்சன் ஆகட்டும், 'பார்ட்டி பண்ட்' விவகாரத்தை கையில் எடுத்து, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை வாயடைத்து உட்கார வைத்த, பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவாகட்டும் அருமையாக கேள்விகளை எதிர்கொண்டு பதில் அளித்தனர்.

சட்டசபைக்கு தாங்கள் சீனியர்கள் என்ற மனநிலையில், கேள்விகளை முன் வைத்து, ஜூனியர்களான த.வெ.க.,விடம், 'மொக்கை' வாங்கியுள்ளனர், தி.மு.க.,வினர்.

எதிர்க்கட்சியினர் கேள்விகளை எதிர்கொள்ள கற்றுக் கொண்டது போல், ஊழலற்ற நிர்வாகத்தை தரவும், மக்கள் நல திட்டங்களை எந்த இடையூறும் இன்றி மக்களிடம் சேர்க்கவும், த.வெ.க.,வினர் கற்றுக் கொள்ள வேண்டும்.

மக்கள் மனங்களை வெல்லக் கற்றுக் கொண்டால் தான், ஆட்சிக்கு இடையூறாக எத்தனை பெரிய தேர்வுகள் வந்தாலும் எளிதில் வெற்றி பெறலாம்!

எனவே, த.வெ.க., அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அதிகார வளையத்திற்குள் இருக்காமல், மக்களுக்குள் ஒருவராக இருந்து மக்கள் பணி செய்து, மக்களின் மனங்களில் உங்களுக்கென்று ஓர் இடத்தை பெறும், ஜனநாயக பாடத்தையும் கற்றுக் கொள்ளுங்கள்!

விஜய் ஜோசப் விஜய் ஆகக் கூடாதா?



சி.ஷிவானி செங்கோட்டை, தென்காசி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சென் னை, பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் முதல்வர் விஜய் போட்டியிட்டதற்கு ஜாதியும், மதமுமே காரணம். சினிமாவில் நடித்த போது, ஜோசப் விஜய் என்று பெயர் வைக்காமல், முதல்வர் ஆன பின், ஜோசப் விஜய் என்று சொல்ல காரணம் என்ன?' என்று கேள்வி எழுப்பியுள்ளார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

விஜய் கட்சி ஆரம்பிக்க போவதாக சொன்னவுடன், அதை, மகிழ்வுடன் வரவேற்றவர் தான் சீமான்.

ஆனால், அந்த மகிழ்ச் சிக்கு பின் ஒரு, 'டுவிஸ்ட்' இருந்தது.

'என் தம்பி அரசியலுக்கு வருகிறான்; அவனை துணை முதல்வர் ஆக்கி விடுவோம்' என்று கூறியது தான், அந்த, 'டுவிஸ்ட்!'

அதாவது, விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் தன்னுடன் கூட்டணி வைப்பார்; அவரது செல்வாக்கை பயன்படுத்தி, நாம் ஆட்சியை பிடித்து முதல்வர் ஆகிவிடலாம்; விஜயை நமக்கு கீழ் துணைமுதல்வராக டம்மியாக வைத்துக் கொள்ளலாம் என்று கனவு கண்டார், சீமான்.

ஆனால், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கிய விஜய், என் தலைமையில் தான் கூட்டணி என்று அறிவித்தவுடன், சீமானின் முதல்வர் கனவு துாள் துாளாகி போனது.

அதனால், விஜயின் கொள்கை தலைவர்களை வைத்து, 'இந்தப் பக்கம் போ, இல்ல அந்தப் பக்கம் போ; நடுவில போய் லாரியில சிக்கி அடிபட்டு சாகாத' என்று, கடுமையாக விமர்சிக்க துவங்கினார்.

அதிலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் முத்துவின் மரணத்திற்கு, ஸ்டாலினை சந்தித்து துக்கம் விசாரித்து விட்டு வந்தபின், விஜய் நின்றால் குற்றம்; நடந்தால் குற்றம்; சிரித்தால், பேசினால், தும்மினால் கூட, நாள்தோறும் குற்றம் கூறி லாவணி பாடிக் கொண்டிருக்கிறார், சீமான்.

அவ்வரிசையில் இப்போது, 'விஜய் ஏன் ஜோசப் விஜய் ஆனார்?' என்று கேள்வி கேட்கிறார்!

சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் புனைப் பெயருடனோ, சுருக்கப் பெயருடனோ நடிக்கின்றனர்.

அதேநேரம், அவர்கள் தேர்தலில் போட்டியிட்டால், சான்றிதழ்களில் உள்ள பெயரைத்தான் குறிப்பிட வேண்டுமே தவிர, புனைப்பெயரை பயன்படுத்த முடியாது.

இது சீமானுக்கு தெரியாதா?

ஜாதி, மதம், மொழி கடந்து, யார் தங்கள் தொகுதி வேட்பாளர்கள் என்பதைக் கூட அறியாமல், விஜய் என்ற ஒற்றை மனிதருக்காக மக்கள் ஓட்டுப் போட்டுள்ளனர் என்றால், அது அந்த மனிதருக்கான ஓட்டுகளே தவிர, அவர் சார்ந்த மதத்திற்கு கிடைத்த ஓட்டு அல்ல.

செபாஸ்டியன் சைமன், சீமானாகி முருகனை முப்பாட்டன் எனலாம்; விஜய், ஜோசப் விஜய் ஆகக் கூடாதா?

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us