PUBLISHED ON : ஆக 09, 2026 12:39 AM

அ.சேகர், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
கடந்த தி.மு.க., அரசு, 10.98 லட்சம் கோடி ரூபாய் கடனை, தமிழக மக்கள் மீது சுமத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசின் பட்ஜெட் தாக்கலில், அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளான, 2,500 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை, ஆண்டுக்கு, ஆறு இலவச சிலிண்டர், வேலை இல்லாத இளைஞர்களுக்கு, 4,000 ரூபாய் உதவி தொகை போன்றவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டது என்று, எதிர்க்கட்சியினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இன்றைய நிலையில், த.வெ.க., அரசு தன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நினைத்தால், அது, வரவு எட்டணா; செலவு பத்தணா என்ற நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டு, இப்போது உள்ளதை விட, மாநிலத்தின் கடன் பல மடங்காக உயர்ந்து விடும்.
இதை உணர்ந்து தான், 'தமிழக நிதி நிலை சீராக இரண்டு ஆண்டுகள் ஆகும்; அதன்பின் படிப்படியாக வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்' என்று கூறியுள்ளார், நிதியமைச்சர்.
ஆனாலும், 'தேர்தல் வாக்குறுதி கொடுத்தாய் அல்லவா... இப்போதே நிறைவேற்று' என்பது போல், அறிக்கை வெளியிடுகின்றனர், எதிர்க்கட்சியினர்.
இது மக்கள் மீதான அக்கறையில் வெளியான அறிக்கை போல் இல்லை. 'எனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை; உனக்கு ஒரு கண் போகணும்' என்ற வன்மத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது.
அதிலும், இலவச திட்டங்களுக்கு எதிராக போர்க் கொடி துாக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட, இந்த அறிக்கை வெளியிட்டு இருப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது.
த.வெ.க., அரசு தேர்தல் வாக்குறுதி கொடுத்தது தான்; அதை நிறைவேற்ற வேண்டும் தான்; ஆனால், சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் அள்ளிப் போட முடியும்?
ஆட்சியில் அமர்ந்ததும், உடனே நிதி நிலை சரியாகி, உபரி பட்ஜெட் போட தமிழக முதல்வர் விஜய் என்ன மந்திரவாதியா?
தமிழகத்தை, 50 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட திராவிட கட்சிகளே ஆட்சிக்கு வந்த உடனே தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதில்லை. ஏன்... கடந்த தி.மு.க., அரசு கூட, இரண்டாண்டுக்கு பின் தானே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றியது... அப்படியிருக்கும் போது புதிதாக ஆட்சிக்கு வந்த கட்சியிடம் மட்டும் மல்லுக்கு நிற்பது ஏன்?
அனுபவம் தந்த பாடமா அறிவுரை?
பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'முதல்வர் விஜய் தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்; ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்' என்று கூறியுள்ளார், முன்னாள் முதல்வர் ஸ்டாலின்.
கூட்டணி பலத்தால் தான், 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்த பின், கூட்டணி கட்சிகளை மதிக்காமல், அடிமை போல் நடத்தினர், தி.மு.க.,வினர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கூட, கூட்டணி கட்சியினர் கேட்ட தொகுதிகளை கொடுக்காததுடன், சில கட்சியினருக்கு ஏற்கனவே வழங்கிய தொகுதிகளை விட குறைவாக வழங்கினர்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளை அழிக்க வேண்டும் என்பதற்காகவே, அவர்களை தங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிட அனுமதிக்காமல், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தனர்.
அதுமட்டுமா... நம்மை கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற ஆணவத்தில், மன்னராட்சி மனப்பான்மையுடன் தன் மகன் உதயநிதிக்கு அமைச்சர், துணை முதல்வர் என்று பதவிகளை வாரி வழங்கி மகிழ்ந்தார், ஸ்டாலின்.
அதிகாரத்தில் இருக்கும் ஆணவத்தில், மக்களின் வரிப்பணத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதி யை, 40 கோடி ரூபாயில் புதிப்பித்ததுடன், மாவட்டந்தோறும் கருணாநிதிக்கு சிலைகள் வைத்தார்.
கூடவே, சிறுபான்மையினர் ஓட்டுகள் தி.மு.க., கூட்டணிக்கு கிடைக்கும் ஆணவத்தில், ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களை தொடர்ந்து அவமதிப்பு செய்தனர், தி.மு.க.,வினர்.
எவ்வளவு மோசமாக ஆட்சி நடத்தினாலும், தங்களிடம் உள்ள பணபலத்தால் ஓட்டுகளை விலைக்கு வாங்கி விடலாம் என்று ஆணவத்துடன், கடந்த ஐந்து ஆண்டுகளும் ஆட்டம் போட்டனர், தி.மு.க.,வினர். விளைவு, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை இழந்தனர்.
அந்த அனுபவம் தந்த பாடத்தில் தான் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், இன்னாள் முதல்வர் விஜய்க்கு இப்படி ஓர் அறிவுரை கூறுகிறார் போலும்!
குளிர் காயும் மாநில அரசுகள்!
கே.ஆர்.பிரேம்குமார், பெங்களுரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரங்களில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகள் பல ஆண்டுகளாக பிரச்னையை சரியான கோணத்தில் அணுகாமல், இரண்டு மாநில மக்களிடம் தேவையற்ற பதற்றத்தை உண்டாக்கி வருகின்றன.
குடிநீர் மற்றும் விவசாயம் இரண்டுமே இரு மாநில மக்களின் ஜீவாதாரம் என்ற சிந்தனையில் பிரச்னையை அணுகி, விட்டுக்கொடுத்து போயிருந்தால் என்றோ இதற்கு தீர்வு கிடைத்திருக்கும்.
ஆனால், இரண்டு மாநில அரசுகளுமே இதை வைத்து அரசியல் செய்ய நினைக்கின்றனவே தவிர, பிரச்னையை தீர்ப்பதாக தெரியல்லை.
அணையை கட்டுவோம் என்று ஒரு தரப்பும், அதை தடுப்போம் என்று மற்றொரு தரப்பும் முட்டி மோதி, மக்களை உணர்வு ரீதியாக துாண்டி விட்டு, அதில் குளிர் காய்கின்றனரே தவிர, இரு மாநில மக்களும் பாதகமில்லாமல் பயன்பெறும் வகையில், பிரச்னையை தீர்க்க மறுக்கின்றனரே!
அம்பேத்கர் பெயரை உச்சரிக்கலாமா?
வி.கோபாலன், சென்னையில் இருந்து எழுதுகிறார்:
கடந்த 1949, நவ.,26ம் தேதி இந்திய அரசியல் சாசன சட்டத்தை நிறைவேற்றிய சட்டமேதை அம்பேத்கர், பார்லிமென்டில் தான் ஆற்றிய உரையில், 'இந்தியனாக இருப்பதில் நமக்குள்ள பற்று, மதம், கலாசாரம் மற்றும் மொழி சார்ந்த வேறு எந்த காரணத்திற்காகவும் குறைந்துபோக நான் விரும்பவில்லை. அனைவரும் முதலில் இந்தியர்களாகவும், கடைசியாக இந்தியர்களாகவும், இந்தியர்களைத் தவிர வேறு எவர்களாகவும் இருக்கக்கூடாது என்பதையே நான் விரும்புகிறேன்' என்று குறிப்பிட்டார்.
இன்று, அம்பேத்கரின் பெயரை சொல்லி, அரசியல் பிழைப்பு நடத்தும் சில அரசியல் கட்சி தலைவர்கள், இந்தியர் என்றால் அவர்கள் வடமாநிலத்தவர் என்பது போல் பேசி வருகின்றனர். அதேநேரம், வடமாநிலத்தை சேர்ந்த அம்பேத்கரை மட்டும் தங்கள் ஒன்று விட்ட அண்ணன் போல், அவருக்காக உரிமைப் போர் நடத்துகின்றனர்.
அம்பேத்கரின் வார்த்தையை, அவரது கொள்கையை காற்றில் பறக்க விட்டு, எந்த அம்பேத் கரியத்தை இவர்கள் பின்பற்றுகின்றனர்?
படிப்பது ராமாயணம்; இடிப்பது ராமர் கோவிலாம்!
