PUBLISHED ON : ஆக 08, 2026 12:44 AM

பொ.ருக்மணி, கூடங்குளம், நெல்லை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆட்சி அமைத்த குறுகிய காலத்தில் , 20,000 கோடி ரூபாய் கடன் வாங்கியது தான், த.வெ.க., அரசின் சாதனை. கடன் வாங்கிக் கொண்டே சென்றால் எப்படி அரசை நடத்த முடியும்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி.
முன்னாள் முதல்வரின் கேள்வி நியாயமானது தான்.
காமராஜர் முதல்வராக இருந்த போது, தமிழக அரசுக்கு கடன் இல்லை. ஆனால், அதன்பின் ஆட்சிக்கு வந்த திராவிட கட்சி ஆட்சியாளர்கள் போட்டி போட்டு கடன் வாங்கியது மட்டுமின்றி, அவற்றை மாநில வளர்ச்சிக்கு முதலீடு செய்யாமல், ஓட்டு வாங்குவதற்கு மட்டுமே உதவக்கூடிய இலவச திட்டங்களுக்காக செலவு செய்து கடன் சுமையை ஏற்றி வைத்தனரே தவிர, எவரும் உபரி பட்ஜெட் போட்டதில்லை.
எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த, 1984- - 85ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் சுமை, 2,129 கோடி ரூபாயாகத் தான் இருந்தது. ஆனால், கருணாநிதி ஆட்சியில், 2000 -- 2001ம் நிதியாண்டில், 28,685 கோடி ரூபாயாக பல மடங்கு உயர்ந்தது.
அதன்பின், 2006ல் ஜெயலலிதா ஆட்சியில் அக்கடன் இரு மடங்காகி, 57,457 கோடி ரூபாயாக உயர்ந்தது. அடுத்து வந்த கருணாநிதி ஆட்சியில், 1,01,439 கோடி ரூபாயாக அதிகரித்தது.
கடந்த 2015 -- 2016ல் ஜெயலலிதா ஆட்சியில் 2,11,483 கோடி ரூபாயாக இருந்த கடன், 2021ல் பழனிசாமி ஆட்சியின் இறுதியில், 5.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து, ஸ்டாலின் ஆட்சியில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகியது.
இப்படி இரு திராவிட கட்சிகளும் வாங்கி குவித்த கடனுக்கான வட்டி மட்டுமே ஆண்டிற்கு, 78,683 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய அவலநிலையில் தற்போது தமிழகத்தின் நிதிநிலை உள்ளது.
த.வெ.க., அரசு பதவியேற்றதே, 2026, மே மாதம் 10ம் தேதி; இப்போது வாங்கப்பட்டதாக கூறப்படும், 20,281 கோடி ரூபாய் கடன், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வாங்கப்பட்டது.
அப்பணத்தில் கிட்டத்தட்ட, 14,000 கோடி ரூபாய், திராவிட ஆட்சியாளர்கள் வாங்கிய கடனுக்காக வட்டிக்கு செலவிடப்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசு இப்போது கடன் வாங்கியுள்ளதற்கு ஏற்கனவே ஆண்ட இரு திராவிட கட்சிகள் தான் காரணமே தவிர, ஆட்சிக்கு வந்து மூன்று மாதமே ஆன கைக்குழந்தையான த.வெ.க., அரசு அல்ல!
ஊருக்கு இளைத்தவர்களா ஹிந்துக்கள்?
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
கடந்த சில நாட்களுக்கு முன், வேளாண்துறை அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட்டின் முன்னுரையை திருப்பதி கோவிலில் வைத்து வழிபாடு செய்து, எடுத்து வந்தார்.
உடனே, இங்குள்ள மதச்சார்பின்மை காவலர்கள், 'குய்யோ முறையோ' என கூவ ஆரம்பித்து விட்டனர். கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.பி., வெங்கடேசன், 'இது இறைவனுக்கு அளிக்கக்கூடிய காணிக்கை அல்ல' என்றார்.
இந்திய கம்யூ., கட்சியின் தமிழக செயலர் வீரபாண்டியனோ, 'இதுபோன்ற ஆன்மிக சடங்குகளுக்கு, அரசு ஆவணங்களைப் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல' என்றார்.
இத்தனைக்கும் அமைச்சர் பட்ஜெட்டின் முன்னுரையை தான் எடுத்துச் சென்றுள்ளார். அதற்கே இந்த மதச்சார்பின்மை பிழைப்பாளர்கள், கண் டன கணைகளை வீசினர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசின் பட்ஜெட் தாக்கலின் போது, பட்ஜெட் புத்தகத்தையே ஜெப மாலையோடு சேர்த்து எடுத்து வந்தார், நிதியமைச்சர் மரிய வில்சன். அதுகுறித்து எவரும் விமர்சிக்கவில்லை என்பதுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 'இது அமைச்சருடைய தனிப்பட்ட மதம் சார்ந்த நம்பிக்கை; இதை நாம் தவறாகவோ, எதிர் மறையாகவோ அணுக வேண்டிய அவசியம் இல்லை' என்று முட்டுக் கொடுத்துள்ளார்.
வில்சனுக்கு இருக்கும் மத நம்பிக்கை, வேளாண் துறை அமைச்சர் வினோத்துக்கு இருக்கக் கூடாதா?
என்னே... இந்த அரசியல் பிழைப்பாளர்களின் மதச்சார்பின்மை!
இதேபோன்று தான், பார்லிமென்ட்டில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி குறித்து, காங்., - எம்.பி., பிரியங்கா பேசும் போது, 'கோ மூத்ர மனிதர்' என்றார். அதற்கு இந்த மதச்சார்பின்மை காவலர்கள் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை.
இதே காமகோடி வேறு மதத்தை சார்ந்தவராக இருந்திருந்தால், பிரியங்கா அப்படி பேச துணிந்திருப்பாரா; அப்படியே பேசியிருந்தாலும், எதிர்க்கட்சிகள் பிரியங்கா மன்னிப்பு கேட்கும் வரை விட்டு வைத்திருப்பரா?
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல், இவர்களது மதச்சார்பின்மை எல்லாம் ஹிந்து மதத்திற்கு தான் போலும்!
ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் !
முனைவர் செ.அ.ராகுல் கோல்டன், உதவி பேராசிரியர், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து ஆபாசமாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அண்மைக் காலமாக தமிழக அரசியலில் தனிநபர் தாக்குதல்கள், தரக்குறைவான வார்த்தைகள் அதிகரித்து வருகின்றன. இது ஜனநாயக விவாதத்தின் தரத்தை உயர்த்தாமல், மக்களிடையே வெறுப்பையும், பிளவையும் உருவாக்குகின்றன.
'ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்' என்பது தமிழர் வாழ்வியல் ஞானம். அரசியலில் இதன் முக்கியத்துவம் இன்னுமே அதிகம் என்று சொல்லலாம்!
இதை உதயநிதி போன்ற இன்றைய தலைமுறை அரசியல்வாதிகள் நினைவில் கொள்ள வேண்டும்.
ஓர் அரசியல் தலைவரின் பேச்சு, அவருடைய தனிப்பட்ட கருத்தாக இல்லாமல், அவரது கட்சியின் நிலைப்பாடாகவும், சமூகத்திற்கு வழங்கப்படும் செய்தியாகவும் இருக்க வேண்டும்.
கருத்துக்கு, கருத்தால் பதிலளிப்பதே ஜனநாயகத்தின் மாண்பு; தனிநபர் குறித்து இழிவுகள் அல்லது உணர்ச்சிகளைத் துாண்டும் பேச்சுகள் ஜனநாயகத்தை பலவீனப் படுத்தும்.
இது, சமூகவலைதள காலம்; முறை தவறிய ஒரு பேச்சு, சில நிமிடங்களில் கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்து விடும். பின், அதற்காக எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் மக்கள் மத்தியில் எடுபடாது. எனவே, அரசியல் தலைவர்கள் பொது இடங்களையும், மேடைகளையும் ஆக்கப்பூர்வமான விஷயங்களை பேசுவதற்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, தங்கள் மன வக்கிரங்களை அரங்கேற்றும் இடமாக மாற்றக் கூடாது!
