தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ 'வேண்டாம்' என்பதற்கு, 'மாற்று' வேண்டும்!

 'வேண்டாம்' என்பதற்கு, 'மாற்று' வேண்டும்!

 'வேண்டாம்' என்பதற்கு, 'மாற்று' வேண்டும்!

2


PUBLISHED ON : ஜூலை 05, 2026 12:23 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 05, 2026 12:23 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.ரேவதி பாலு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

கடந்த சில ஆண்டுகளாகவே போதை கலாசாரம் அதிகரித்து வருகிறது. பள்ளி - கல்லுாரி மாணவர்கள் கூட இதற்கு அடிமையாகி, வாழ்வை அழித்துக் கொள்கின்றனர்.

இதற்கெல்லாம் டாஸ்மாக் கடைகளும், தாராளமாக கிடைக்கும் போதைப் பொருட்களும் தான் காரணம் என்றாலும், மாணவர்களுக்கு பள்ளிகளிலும், வீடுகளிலும் சரியான வழிகாட்டுதல் இல்லாததும் ஒரு காரணம்!

முன்பெல்லாம் பள்ளியில் நீதிபோதனை வகுப்பு இருக்கும்; மாணவர்களுக்கு கல்வியோடு, ஒழுக்கத்தையும் கற்பித்தனர், ஆசிரியர்கள். இப்போது அதுபோன்ற வகுப்புகள் இல்லாத நிலையில், குழந்தைகளுக்கு நல்லொழுக்கமும், நல்ல நடத்தையும் கற்பிக்கப்படுவதில்லை.

புலவர் உலகநாதன் எழுதிய, 'உலகநீதி' எனும் நுாலில் 'ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்; ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்; மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்' என்று பாடல்களில், 'வேண்டாம்; வேண்டாம்' என்று எதிர்மறையில் இருப்பதால், அதை படிக்க மறுத்த ராமலிங்க அடிகளார், தான் தினமும் செல்லும் கந்தக்கோட்டம் கந்தசுவாமி கோவிலுக்கு சென்று, 'ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்; உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' என்று, 'வேண்டும்; வேண்டும்' என்று நேர்மறையில் அமைந்த பாடலை பாடினாராம்.

'தெய்வமணி மாலை' எனும் நுாலில் உள்ள அப்பாடல்களை வள்ளலார் பாடிய போது, அவருக்கு 9 வயது தான்!

வள்ளலார் காட்டிய வழியின்படி, 'டாஸ்மாக் வேண்டாம்; போதை பொருட்கள் வேண்டாம்' என்று சொல்வதற்கு பதில், பள்ளி பருவத்திலிருந்தே குழந்தைகளுக்கு யோகா, உடற்பயிற்சி, தியானம் ஆகிய நல்ல பழக்கங்களை பழக்கப் படுத்த வேண்டும்.

மாணவர்கள் இவற்றை கற்றுக் கொள்வதன் வாயிலாக, அவர்கள் தவறான வழிகளில் செல்ல மாட்டார்கள்.

இருளை அகற்றுவது குறித்து பேசும்போதெல்லாம், நாம் ஒளியை பற்றி பேசுகிறோம். ஒவ்வொரு மாணவனின் இதயத்திலும், ஒரு விளக்கை ஏற்றி நம்பிக்கை ஒளியூட்டுவதன் வாயிலாக, தமிழகத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு, புதிய அரசு வித்திட வேண்டும்!

மின் பற்றாக்குறை ஏற்படாது!


ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தமிழகத்தில் மழைக்காலம் என்பது இரண்டரை அல்லது மூன்று மாதங்கள் என்ற அளவுக்கு போய், வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், 150 துணை மின் நிலைய வளாகங்களில், 750 மெகாவாட் சூரியசக்தி மின்நிலையம் திட்டத்தை முன்னெடுத்துள்ளது, தமிழக அரசு.

தமிழகத்தில் மின்தேவை அதிகம் உள்ள இடங்களில், அங்கேயே மின்நிலையம் அமைத்து, மின் தேவையை பூர்த்தி செய்ய, பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க மின் திட்டத்தை, மின் வாரியம் செயல்படுத்த உள்ளது.

இதற்காக, மாநிலம் முழுதும், 33 கிலோ வோல்ட் மற்றும் 110 கிலோ வோல்ட் திறன் உடைய, 150 துணை மின்நிலைய வளாகங்களில், தலா ஐந்து மெகாவாட் என மொத்தம், 750 மெகாவாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், 50 கிலோவாட் வரையிலான சோலார் கருவிகளை நிறுவுவதற்காக, குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு, 25 சதவீத மூலதன மானியம் தமிழக அரசு வழங்க வேண்டும் என, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

மேலும், இத்திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக, அனைத்து வீடுகளுக்கும் சோலார் பேனல் அமைப்பது குறித்து, தமிழக அரசு திட்டமிட வேண்டும்.

தற்போது சில தனி வீடுகளில் மட்டுமே சோலார் பேனல் அமைத்து, சூரியசக்தி மின்சாரத்தை உபயோகப்படுத்துகின்றனர். அனைத்து வீடுகளிலும் சோலார் பேனல் அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்தால், தமிழகத்தில் மின் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமிருக்காது!

போலீசார் மீது குற்றஞ்சாட்டலாமா?


கோ.பாண்டியன், காவல் துணைக் கண்காணிப்பாளர் (பணி நிறைவு), செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'பாலியல் குற்றங்களுக்கு, கிழக்கு ஆசிய நாடான மங்கோலியா மன்னன் செங்கிஸ்கான் செய்தது போல், கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்.

'கண்களை பறித்தல், உயிருடன் புதைத்தல், விலங்குகளுக்கு உயிரோடு உணவாக்குதல் போன்ற கொடூரமான தண்டனை அளித்தால் மட்டுமே, பாலியல் குற்றங்கள் குறையும். அதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்' என்று, இப்பகுதியில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் எழுதி இருந்தார்.

ஒருவர் எத்தனை பெரிய குற்றம் செய்தாலும், அதிகபட்சமாக அவருக்கு விதிக்கப்படுவது துாக்கு தண்டனை தான்!

அந்த துாக்கு தண்டனைக்கே இன்று பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பழைய கற்கால தண்டனை முறைகளான கழுவேற்றுதல், கண்களை பறித்தல், உயிருடன் புதைத்தல் போன்றவற்றை சட்டமாக இயற்ற வேண்டும் என்று, ஒரு நீதிபதி கூறுவது விசித்திரமாக உள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டம், அம்பேத்கர், அல்லாடி கிருஷ்ணசாமி, கோபாலசாமி அய்யர் உள்ளிட்ட ஏழு சட்ட மேதைகளால் வடிவமைக்கப்பட்டது. இச்சட்டங்கள் இந்நாட்டின் சனாதன தர்மத்திற்கு உட்பட்டே இயற்றப்பட்டுள்ளன; அரேபிய நாடுகளின் தண்டனைகளை இங்கே நிறைவேற்ற முடியாது என்பதே நிதர்சனம்.

மேலும், பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தால், அதற்கு அந்தந்த ஏரியா காவல் துறை அதிகாரிகளை பொறுப்பாக்க வேண்டும் என்று கூறியுள்ளார், நீதிபதி.

ஒரு நாட்டில் அமைதியான சூழல் இருந்தால் தான், மக்கள் நிம்மதியாக வாழ முடியும். அந்த சூழ்நிலையை ஏற்படுத்தி தருவது, காவல் துறையினரின் கடமை என்பது மறுப்பதற்கில்லை.

அதேநேரம் சட்டம் - ஒழுங்கை சரியாக பராமரிக்க, போதுமான காவலர்கள் இருக்க வேண்டும் அல்லவா?

தமிழகத்தில் தற்போது, எட்டு கோடி பேர் வசிக்கின்றனர். ஆனால், மொத்த காவல் துறையினரின் எண்ணிக்கையோ, ஒரு லட்சத்து, 50,000; இதில், 90,000 பேர் தான் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் பிரிவில் வேலை பார்க்கின்றனர். மீதம் உள்ள, 60,000 பேர் காவல் துறையின் மற்ற 35 சிறப்பு பிரிவுகளில் பணி செய் கின்றனர்.

தமிழகத்தின் நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகையின் விகிதாசார அடிப்படையில் போதுமான காவலர்களை அரசு நியமிக்கவில்லை எனும் போது, பெருகி வரும் குற்றங்களுக்கு காவல் துறை எப்படி பொறுப்பாக முடியும்?

காவல் துறையின் பணியானது நான்கு சுவருக்குள் உட்கார்ந்து செய்வது இல்லை; அதன் பணி, 100 - 200 பேருடன் முடிந்து விடுவதில்லையே!

சொற்ப காவலர்களை வைத்து, எத்தனை இடங்களுக்கு பாதுகாப்புகொடுக்க முடியும்?

மக்கள் தொகைக்கு ஏற்ப, காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதைவிடுத்து, பொத்தாம் பொதுவாக காவலர்கள் மீது குற்றஞ்சாட்டுவது நியாயமில்லையே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us