sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

முதலீடு எனும் வாய்ப்பந்தல்!

/

முதலீடு எனும் வாய்ப்பந்தல்!

முதலீடு எனும் வாய்ப்பந்தல்!

முதலீடு எனும் வாய்ப்பந்தல்!

3


PUBLISHED ON : செப் 05, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 05, 2025 12:00 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.தர்மலிங்கம், புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின், எட்டு நாள் பயணமாக, ஜெர்மன் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சென்றுள்ளார்.

ஆனால், 2022, மார்ச் மாதம் ஆறு நாள் பயணமாக துபாய் சென்ற முதல்வர், அங்குள்ள நிறுவனங்களிடம் பேச்சு நடத்தி, லுாலுா நிறுவனம் வாயிலாக, 3,500 கோடி ரூபாய், நோபுள் ஸ்டீல்ஸ் - 1,000 கோடி ரூபாய், ஒயிட் ஹவுஸ் - 500 கோடி ரூபாய் உட்பட மொத்தம், 6,100 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும், இதன் வாயிலாக, 15,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறினார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

அதன்பின், 2023, மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றார். இப்பயணத்தில், 1,342 கோடி ரூபாய்க்கான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும், அவற்றின் வாயிலாக, 2,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறினர். அப்படி எந்த நன்மையும் தமிழகத்திற்கு ஏற்படவில்லை.

கடந்த 2024, ஜனவரி இறுதியில், 14 நாள் பயணமாக ஸ்பெயின் சென்றவர், ஹபக் லாய்டு நிறுவனம் - 2,500 கோடி ரூபாய், எடிபன் நிறுவனம் - 540 கோடி ரூபாய், ரோக்கா நிறுவனம் - 400 கோடி ரூபாய் என மொத்தம், 3,440 கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் கையெழுத்தானதாக கதை கூறினார். அதில், 1 ரூபாய் கூட தமிழகம் வரவில்லை; யாருக்கும் எந்த வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை.

அதே 2024, ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா சென்ற முதல்வர், மொத்தம் 17 நாள் பயணத்தில், 7,616 கோடி ரூபாய் முதலீடுகள் திரட்டப்பட்டதாகவும், அதன் வாயிலாக, 11,516 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும் கூறினார். அதுபோன்று எதுவும் நிகழவில்லை.

இப்படி, நான்கு கட்டங்களாக, ஐந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர், '18,498 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும்; ஸ்பெயின் தவிர்த்த பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் முதலீடுகளின் வாயிலாக மட்டும் 28,516 பேருக்கு வேலை கிடைக்கும்' என்று கூறியிருந்தார். ஆனால், அவர் உறுதியளித்தவாறு எதுவும் நடக்கவில்லை.

அதுமட்டுமின்றி, உள்நாட்டில் திரட்டப் பட்டதாகக் கூறப்படும் முதலீடுகளின் நிலையும் திருப்தியளிப்பதாக இல்லை.

அண்மையில், துாத்துக்குடியில் நடத்தப்பட்ட மண்டல முதலீட்டாளர்கள் மாநாடு உட்பட கடந்த நான்கரை ஆண்டுகளில் மொத்தம், 10.62 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், அவற்றின் வாயிலாக, 32.78 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் 10 சதவீதம் கூட தொழில் திட்டங்களாக மாற்றப்படவில்லை. 5 விழுக்காடு அளவுக்குக் கூட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.

மேலும், தமிழக அரசு கூறும் தரவுகளின் அடிப்படையில் பார்த்தாலும் கூட, கடந்த நான்கரை ஆண்டுகளில் மொத்தம், 10.62 லட்சம் கோடி ரூபாய் தொழில் முதலீடுகளை ஈர்க்க ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

ஆனால், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் வாயிலாக ஈர்க்கப்பட்ட முதலீடு, வெறும் 18,498 கோடி ரூபாய் தான்!

இது, மொத்தமாக கையெழுத்திடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களின் மதிப்பில் வெறும், 1.72 சதவீதம் மட்டும் தான்!

'தமிழக அரசு வெளியிட்ட தரவுகளின்படி பார்த்தாலும் கூட முதல்வர் மக்களின் வரிப்பணத்தில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் படுதோல்வி என்பது உறுதியா கிறது' என்கிறார், பா.ம.க., தலைவர் அன்புமணி.

இந்நிலையில், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க இப்போது, ஜெர்மன், இங்கிலாந்து சென்றுள்ளார்.

பார்ப்போம்... இந்தப் பயணத்திலாவது உண்மையில் முதலீட்டை ஈர்த்து வருகிறாரா இல்லை வாயால் பந்தல் போடுகிறாரா என்று!



மாணவர்களை தவறாக வழிநடத்தலாமா? ஏ.வி.ராமநாதன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், 'எங்கள் கல்வி, எங்கள் உரிமை' என்ற தலைப்பில் மாணவர்களோடு நடந்த உரையாடல் நிகழ்ச்சியில், மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன், வழக்கம் போல் தெளிவின்றி பேசி, மாணவர்களைக் குழப்பியுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கைப்படி, பள்ளி மாணவர்கள் கற்க வேண்டிய மும்மொழிகள், அவரவர் தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் மாணவருக்கு விருப்பமான பிற இந்திய மொழி ஒன்று!

ஆனால், பிறமொழிகள் என்றால் என்னவென்று அறியாதவர் போல் கேட்கிறார் கமல்ஹாசன்! பஞ்சதந்திரம் என்ற திரைப்படத்தில், அனைத்து தென்மாநில மொழிகள் பேசும் நண்பர்களுடன் சேர்ந்து நடித்து கோடிகளை ஈட்டியவருக்கு, பிறமொழிகள் என்றால் என்னவென்று தெரியாதா?

ஏக் துஜே கே லியே படத்தில், பல வட்டாரங்களில் புழங்கும் ஹிந்தி மொழியையும், மரோசரித்ரா படத்தில் பல வட்டாரங்களில் பேசப்படும் தெலுங்கு மொழியையும் பேசியவர், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து கல்லா கட்டியவருக்கு தெரியவில்லையாம் பிறமொழிகள் என்றால் என்னவென்று!

வித்தார கள்ளி விறகு எடுக்கப் போனாளாம்... கற்றாழை முள் கொத்தோடு குத்தியதாம்!

அதுபோன்று இருக்கு கமல்ஹாசனின் வித்தார பேச்சு!

மொழி திணிப்பு கூடாது என்கிறார். 'மூன்றாவது மொழி ஹிந்தி' என்ற பழைய கொள்கைக்கு மாற்றாக, விருப்பமான ஏதாவது ஓர் இந்திய மொழியைக் கற்கலாம் என்ற புதிய கொள்கையில், மொழி திணிப்பு எங்கிருந்து வந்தது?

தமிழக அரசுப்பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் தவிர, மாணவர்கள் வேறு மொழி கற்கக்கூடாது என தடை போடுவதுதான் திணிப்பு. கூடுதல் மொழி அறிவுடன், தமிழக இளைஞர்கள் பல துறைகளில் தொடர்பாற்றலைப் பெருக்கி முன்னேற வழி செய்யும் மும்மொழிக் கல்வி, வாய்ப்பே அன்றி எப்படி திணிப்பு ஆகும்?

'மொழி பெயர்ப்பு சாதனங்கள் நிறைய வந்துவிட்டதால், மொழி திணிப்பு தேவையில்லை' என்கிறார். அப்படியெனில், ஆங்கிலம் மட்டும் எதற்கு கற்க வேண்டும்? அதற்கும் மொழி பெயர்ப்பு சாதனத்தை பயன்படுத்திக் கொள்ளலாமே!

'பள்ளிக்கு வெளியே இருந்துதான் கூடுதலாக ஆறு மொழிகளைக் கற்றுக்கொண்டேன்' என்று சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறார். அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் சாதாரண ஏழை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்குமா?

'என் தட்டு, என் உணவு, என் உரிமை' என்று தன் விருப்பத்தை பிறர் மதிக்க வேண்டும் என்று சொல்லும் கமல், 'என் கல்வி, என் மொழி, என் உரிமை' என்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் விருப்பத்தையும் மதிக்க வேண்டும் அல்லவா?

தன்னை ராஜ்ய சபா எம்.பி., ஆக்கியதற்கு நன்றிக் கடனாக, தான் ஆதரிக்கும் கட்சியின் கொள்கைகளுக்கு கமல் காவடி துாக்கட்டும் ஏன்... வாயில் அலகு கூட குத்திக் கொள்ளட்டும்.

ஆனால், பன்மொழி ஆற்றலால் திரை உலகில் சாதனை படைத்து, பெரும் புகழ் ஈட்டிய ஒரு நடிகர், மொழி விஷயத்தில் தமிழக மாணவர்களைத் தவறாக வழி நடத்தக்கூடாது!








      Dinamalar
      Follow us