மொழிப் பிரச்னையில் அவசரம் காட்டலாமா? ஆணவம் அழிவை தரும்!
மொழிப் பிரச்னையில் அவசரம் காட்டலாமா? ஆணவம் அழிவை தரும்!
PUBLISHED ON : அக் 10, 2026 12:00 AM
வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: கடந்த 1965ல் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை எந்த கட்சியும் துாண்டவும் இல்லை; துணை நிற்கவும் இல்லை. ‘நீட்’ தேர்வு விடைத்தாள் வெளியானதை கண்டித்து கரப்பான் ஜனதா கட்சி போராட்டம் நடத்தியது போன்று, அன்று, தமிழகத்தில் மாணவர்கள் சுயமாக திரண்டு நடத்தியது தான், ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்.
மாணவர்களின் உணர்வுகளை புரிந்து, அவர்களை அழைத்து பேசி இருந்தால், ஆட்சியை பறிகொடுத்து இருக்காது, அன்றைய காங்கிரஸ் அரசு. ஆனால், மாணவர் போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, 1967 ல் ஆட்சியை பிடித்தது, தி.மு.க.,
ஆட்சிக்கு வந்த பின், தங்கள் அரசியலுக்கு ஒரு கொள்கை வேண்டுமே... அதற்காக, ஹிந்தி எதிர்ப்பையே கொள்கையாக வைத்துக் கொண்டது, தி.மு.க.,
அதேசமயம், ஹிந்தி கட்டாய பாடமாக உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளிகளை அதிக அளவில் நடத்தி வருவதும், இந்த ஹிந்தி எதிர்ப்பு போராளிகள் தான்!
இதுதான் இவர்களது மொழிக் கொள்கையின் லட்சணம்!
இன்று கட்டுமானம், விவசாயம், நெடுஞ்சாலை, ஹோட்டல், எலக்ட்ரானிக்ஸ், பிளாஸ்டிக் உற்பத்தி என அனைத்து துறைகளிலும், வடமாநில தொழிலாளர்கள் தான் மிகுந்துள்ளனர். தொழிலும், முதலீடும் கூட அவர்களின் கைகளில் தான் உள்ளன.
தமிழ் நாளிதழில் ஹோட்டல் வேலைக்கு ஆட்கள் தேவை என்று, ஹிந்தியில் விளம்பரம் வெளியிடப்படுகிறது. பள்ளியில் ஹிந்தி படிக்காத தமிழ் வியாபாரிகள், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற கோவில் நகரங்களில் வடமாநிலத்தவரிடம் ஹிந்தியில் பேசி வியாபாரம் செய்கின்றனர்.
சிவகாசி, விருதுநகர் வர்த்தகர்கள் வடமாநில வியாபாரிகளுடன் ஹிந்தியில் உரையாடி, தங்கள் வியாபாரத்தை பெருக்குகின்றனர். ஏன்... சென்னை போன்ற பெருநகரங்களில், சாதாரண காய்கறி மார்க்கெட்டில் கூட வியாபாரிகள் ஹிந்தி பேசுகின்றனர்.
உண்மை இவ்வாறு இருக்க, நெடுஞ்சாலை தொலைவு காட்டும் பலகையில் ஊர் பெயர் ஹிந்தியில் இருந்த காரணத்துக்காக, இரண்டு பேரை பணியிட நீக்கம் செய்துள்ளது, தமிழக அரசு.
மும்பை, டில்லி, பெங்களூரில் சில பகுதிகளிலும், உ.பி.,யில் உள்ள காசியில் தாராளமாகவே தமிழ் பெயர் பலகைகள் மின்னுகின்றனவே... இங்குள்ள திராவிட கட்சியினர் அதற்கு என்ன பதில் கூறுவர்?
சொந்த ஊர்களில் இருந்து பேருந்து, ரயில், விமானம் வாயிலாக தமிழகம் வரும் வடமாநிலத்தவர், தமிழகத்தின் ஊர்களை தெரிந்து கொள்ள, ஹிந்தி பெயர் பலகைகள் அவர்களுக்கு பயன்படுகின்றன. அதை அழிப்பதால், தமிழ் வளர்ந்து விடுமா, இல்லை தமிழர்களின் வாழ்க்கை தரம் தான் உயர்ந்து விடுமா?
தி.மு.க., அரசியல் அவியல் செய்கிறது என்பதற்காக, த.வெ.க., அரசும் மொழிப் பிரச்னைகளை கையாள்வதில் அவசரம் காட்டுவது நல்லதல்ல!
lll
ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: இரவு பகல் பாராமல், 24 மணி நேரமும் மக்கள் பணியாற்றும் அரசு பணியாளர்கள் எவர் என்று கேட்டால், அது மருத்துவர்கள், காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து துறையினர் மட்டுமே!
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், இரவு நேரங்களில் மருத்துவ பணிகளுக்கிடையே மருத்துவர்கள் ஓய்வெடுத்துக் கொள்வதற்காக, ஓய்வு அறைகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாமல், நள்ளிரவில் ஆய்வு செய்ய வந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ., சரவணன், பணியிலிருந்த மருத்துவரை ஏக வசனத்தில் பேசி அவமானப்படுத்தியுள்ளார்.
தமிழகம் முழுதும் வீசிய விஜய் அலையால் அடித்து வரப்பட்டு, வெறும் 1,186 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் தான், இந்த சரவணன்.
பள்ளிப்படிப்பைக் கூடத் தாண்டாத சரவணன், விஜயின் தயவால், எம்.எல்.ஏ., பதவி கிடைத்ததும், தன் உண்மையான தகுதி என்னவென்பதை மறந்து, உயர் பதவிகளில் இருப்போரை, ஒருமையில் பேசி அவமானப்படுத்தியுள்ளார்.
எம்.எல்.ஏ., என்ற ஆணவத்தின் வெளிப்பாடு அல்லவா இது!
கடந்த தி.மு.க., ஆட்சியில் ஆணவத்தால் தலைகால் புரியாமல் ஆடியதால், 15 அமைச்சர்கள் படுதோல்வியடைந்து விட்டனர்.
தற்போது குறுநில மன்னர் போல வலம் வந்து கொண்டிருந்த பொன்முடி தன் திமிர் பேச்சால் இன்று, வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்.
கட்சித் தலைவரான ஸ்டாலின் இவர்களது அடாவடித்தனத்தைக் கண்டிக்கத் தவறியதால், வெறுப்படைந்த மக்கள், அவரையும் சேர்த்து வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.
த.வெ.க., ஆட்சியில் முதன்முறையாக எம்.எல்.ஏ.,க்களாகவும், அமைச்சர்களாகவும் தேர்வு செய்யப்பட்டிருப்போர், தி.மு.க.,விற்கு நேர்ந்த கதியைப் பார்த்து, பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். எம்.எல்.ஏ., என்ற ஆணவத்தில் ஆடினால், அடுத்த தேர்தலில் மக்கள் வீட்டுக்கு அனுப்பி விடுவர் என்பதை மறந்து வி டக் கூடாது!
lll
