PUBLISHED ON : அக் 10, 2026 12:00 AM
ஜனநாய மரபுக்கு குழிதோண்டுகிறார் ராகுல்!
அ.அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: மூன்றாவது முறையாக மோடியின் ஆட்சி வெற்றிகரமாக தொடர்கிறது. அதை தாங்க முடியவில்லை காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு!
ஏதாவது ஒரு குற்றச்சாட்டைக் கூறி, எப்படியாவது பா.ஜ., அரசை வீழ்த்தி, ஆட்சியைப் பிடிக்க, குறுக்கு சால் ஓட்டுகிறார்.
தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிரான போராட்டத்தில், பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், நாட்டை தவறான பாதையில் வழிநடத்துவதாக, காங்., – எம்.பி., ராகுல் கூறியதிலிருந்தே அவரது உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாகி விட்டது!
அதிலும், ‘இவர்கள் மீது தேச விரோத நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வெறும் எம்.பி.,யான ராகுல் மிரட்டியுள்ளதை பார்க்கும் போது, அவரது உள்ளத்தில் புதைந்து கிடக்கும் காழ்ப்புணர்ச்சி வெளிப்பட்டு விட்டது.
தேர்தல் முறைகேடு, சந்தேகங்கள் தொடர்பாக, தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் மீது முறைப்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது; தலைமை நீதிபதி சூரியகாந்த்தும் விசாரணை நடத்தி வருகிறார்.
உண்மையில், ஞானேஷ்குமார் தேர்தல் கமிஷனை தவறாக வழிநடத்தி இருந்தால், அதற்கான தண்டனை அவருக்கு கிடைக்கத்தான் போகிறது. ஆனால், அதுவரை கூட பொறுக்க முடியாமல், ‘48 மணி நேரத்திற்குள் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்; இல்லையெனில், மக்கள் புரட்சியாக மாறும்’ என்று மிரட்டுவதற்கு காரணம் என்ன ?
இதன்வாயிலாக, நாடு முழுதும் தொடர் போராட்டங்களை ஊக்கப்படுத்தி, தேசத்தில் குழப்பத்தையும், சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டையும் ஏற்படுத்தி, ஆட்சியே கவிழ்ப்பது தான் அவரது நோக்கம்!
தேர்தல் கமிஷன் மீதான குற்றச்சாட்டுகள் நீதி மன்றத்தால் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே, ஞானேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று ராகுல் கூறியிருப்பது, முதிர்ச்சி அற்ற பேச்சு.
ஜனநாயக மரபையே குழிதோண்டிப் புதைக் கிறார், ராகுல்!
lll
சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கும் ‘வீடியோ’க்கள்
தேவையா?
அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: இன்று இளைஞர்கள் முதல் முதியோர் வரை, சமூக வலைதளத்தில் மூ ழ்கிக் கிடக்கின்றனர். ஆடுவது, பாடுவது, சமைப்பது, ருசிப்பது, வீட்டை பெருக்குவது என்று அனைத்தையும் குறு வீடியோக்களாக காட்சிப்படுத்தி, தங்கள் வீட்டு பெட்ரூம் வரை உலகத்திற்கே வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அதிலும் சிலர் எந்த மாதிரி, ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்தால் பிரபலமாகலாம் என, மூளையைப் போட்டு கசக்கி, கரணம் தப்பினால் மரணம் என்ற இடத்தில் கூட ஆபத்தை உணராமல், ‘ரீல்ஸ்’ எடுக்கின்றனர்.
இதனால், பலர் உயிரிழந்திருந்த போதும், ரீல்ஸ் மோகம் மட்டும் குறையவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், பாதுகாக்கப்படும் பறவையான நீர் காகத்தை வேட்டையாடி, அதை சமையல் செய்து சாப்பிடும் வீடியோவை சமீபத்தில் இணையத்தில் பதிவிட்டார்.
இக்காட்சியை பார்த்தவர்கள், வனத் துறையினருக்கு புகார் தெரிவிக்க, இப்போது, அந்த வாலிபர் சிறையில் கம்பி எண்ணிக் கொண் டிருக்கிறார். தேவையா இது?
தெரியாமல் தப்பு செய்பவர்களே, எப்போது பிடிபடுவோமோ என்று பயந்து நடுங்கும் போது, ஊர் உலகம் பார்க்க, நரியைக் கொன்று நளபாகம் வைப்பது எப்படி என்றும், சிறுத்தையை கொன்று, ‘சிக்ஸ்டி பைவ்’ போடுவது எப்படி என்றும், ‘ரீல்ஸ்’ வெளியிட்டு வியப்பை ஏற்படுத்தும் மோகத்தில், வாழ்க்கையை தொலைப்பவர்களின் அறியாமையை என்னவென்பது?
lll
எம்.ஜி.ஆரை பின்பற்றுங்கள் விஜய்!
டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ –மெயில்’ கடிதம்: ‘எம்.ஜி.ஆர்., போன்று, முதல்வர் விஜயும் சுயமாக முடிவுகளை எடுக்க வேண்டும்’ என்று இப்பகுதியில் வாசகர் ஒருவர் எழுதியிருந்தார். அவர் கூறியிருப்பது உண்மை தான்.
கடந்த 1985ல், பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்த எம்.ஜி.ஆர்., 1987ல் ஏழை பெண்களுக்கும் இலவச காலணி கொடுக்க வேண்டும் என்று நினைத்து, அதற்கான புள்ளி விவரங்களை வழங்குமாறு, தன் தனி செயலரான பரமசிவம் மற்றும் துணை செயலர் பிச்சாண்டியிடம் உத்தர விட்டார்.
அவர்களும் அன்றைய தமிழகத்தில் உள்ள பெண்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, ‘50 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்குள் கீழ் உள்ளனர். அவ்வகையில், 60 லட்சம் கிராமப்புற பெண்களுக்கு காலணி வழங்க வேண்டி இருக்கும்; ஒரு ஜோடி காலணி, 10 ரூபாய் என வைத்துக் கொண்டால், 60 லட்சம் மகளிருக்கு ஆண்டுக்கு, 6 கோடி ரூபாய் செலவாகும்’ என்ற புள்ளி விவரங்களை, எம்.ஜி.ஆரிடம் வழங்கினர்.
மேலும், ‘பள்ளி குழந்தைகளுக்கு மூன்று விதமாக காலணி வழங்கப்படுவதால், அது அவர்களுக்கு பொருந்தி விடுகிறது; ஆனால், பெண்களுக்கான கால் அளவுகள் மாறுபட்டு இருக்கும்’ என, அத்திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கலையும் கூறினர்.
உடனே, ‘பாட்டா கடையில், 6 மற்றும் 7 அளவில் காலணிகள் இருக்கும் அல்லவா...அதை வாங்கி கொடுப்போம்; அது பெண்களுக்கு பொருந்தி விடும்’ என்று கூறிவிட்டார், எம்.ஜி.ஆர்.,
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முன், எத்தனை பெண்கள் காலணி அணியாமல் நடக்கின்றனர் என்பதை நேரில் அறிய எண்ணினார், எம்.ஜி.ஆர்.,
அதற்கேற்ப, நாமக்கல்லில் ஒரு கட்சி நிகழ்ச்சி இருக்கவே, சேலத்திலிருந்து காரில் புறப்பட்டவர், பிச்சாண்டியை டிரைவர் இருக்கைக்கு அருகில் அமர வைத்து, சாலையில் இடதுபுறம் நடக்கும் பெண்களின் கால்களை கணக்கிட சொன்னார்.
டிரைவர் 30 கி.மீ., வேகத்தில் காரை செலுத்த, 20 கி.மீ., வரை காலணி அணியாத பெண்களை எண்ணி, அதை இரட்டிப்பாக கணக்கிட்டு, ‘70 சதவீதம் பெண்கள் காலணி அணியவில்லை; 30 சதவீதம் பெண்கள் அணிந்திருக்கும் காலணியும் தேய்ந்து போய் உள்ளது’ என்றார், பிச்சாண்டி.
‘சுகாதாரத்திற்காகத் தான் காலணி அணிகிறோம் என்பது பெண்களுக்கு புரிவதில்லை. அவர்களை பொறுத்து வரை இதை ஆடம்பர செலவாக கருதுகின்றனர். இதனாலேயே, செருப்பு வாங்க வசதியிருந்தாலும் அவர்களுக்கு வாங்கும் எண்ணம் வருவதில்லை. அதனால், அரசு தன் சொந்த செலவில், அவர்களை செருப்பு அணிய பழக்கப்படுத்தி விட்டால், ஓராண்டு கழித்த பின், அவர்களே தங்கள் பணத்தில் வாங்கி கொள்வர்.
‘நாமும் படிப்படியாக இத்திட்டத்தை விலக்கி கொள்ளலாம்; அரசுக்கும் நிதிச்சுமை இருக்காது. பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதும் அரசின் கடமை தான்’ என்று கூறி, அத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார், எம்.ஜி.ஆர்.,
அவர் எண்ணப்படியே, அடுத்த சில ஆண்டுகளில் பெண்கள் தங்கள் சொந்த பணத்தில் காலணி வாங்கி அணிய ஆரம்பித்தனர். அரசும் அத்திட்டத்தை நிறுத்தி விட்டது.
எனவே, முதல்வர் விஜய் தான் செயல்படுத்த நினைக்கும் ஒவ்வொரு மக்கள் நலத் திட்டம் குறித்தும், அதிகாரிகளின் ஆலோசனைகளை பெற்றாலும், சுயமாக சிந்தித்து, முடிவு எடுக்க வேண்டும். அப்போதுதான், அத்திட்டம் மட்டுமல்ல; விஜயின் ஆட்சித் திறனும்’ காலம் கடந்தும் பேசப்படும்!
lll
பெயர் பலகையில் ஹிந்தி இருந்தால் என்ன நஷ்டம்?
ச.ஜெ.ரவி, காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தமிழக நெடுஞ்சாலைகளில் பெயர் பலகைகளில் தமிழ், ஆங்கிலத்துடன் ஹிந்தியும் இடம்பெறுவதால் தமிழகத்திற்கு என்ன நஷ்டம் வந்து விடப் போகிறது?
தற்போது அனைத்து மாநிலங்களிலும் அனைத்து மாநிலத்தவரும் இரண்டற கலந்து வாழ்ந்து வரும் நிலையில், இப்படி தொட்டதற்கெல்லாம் மொழி துவேஷம் பார்த்தால், தமிழர்கள் தமிழ்நாட்டை தாண்டி வேறு எந்த மாநிலத்திலும், ‘இது நம் நாடு’ என்ற மனநிலையில் வாழ முடியாது.
இன்று உலகமே உள்ளங்கையில் இருக்கும் போது, தமிழக அரசியல்வாதிகளின் இந்த மொழி வெறுப்பு அரசியல், சம்பந்தப்பட்ட மாநிலத்தவரிடம் எதிரொலித்து, அந்த வெறுப்பு, அப்படியே நம்மை நோக்கியும் திரும்பக் கூடும்!
வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் இந்நாட்டின் தாத்பரியம்!
அதற்கு வேட்டு வைக்கும் விதமாக அரசியல்வாதிகள் நடந்து கொள்வது, தமிழகத்தின் நலனுக்கு நல்லது அல்ல! lll
