PUBLISHED ON : ஜன 17, 2025 12:00 AM

வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசு தயார் செய்து கொடுக்கும் ஆண்டு அறிக்கையை, கவர்னர் வாசிக்க வேண்டும் என்பது மரபாம்...
கவர்னர் சுயமாக ஓர் அறிக்கை தயார் செய்து, அதை சட்டசபையில் வாசிக்க கூடாது!
தமிழக அரசு எழுதித் தரும் அரசின் சாதனைகளை, வார்த்தை பிசகாமல், அப்படியே வாசிக்க வேண்டும்; முதல்வரையும், அரசையும் புகழ்ந்து தள்ளுவதை அப்படியே படிக்க வேண்டும்.
அறிக்கையில் இல்லாதவற்றை கவர்னர் தன் உரையில் குறிப்பிடக் கூடாது; அரசை விமர்சித்தோ, குறைகளைக் கூறியோ உரை நிகழ்த்தக் கூடாது.
அப்படிச் செய்தால் அது மரபை மீறிய செயலாம்!
இதை எல்லாம் கேட்கும்போதும், பார்க்கும்போதும் அக்காலத்து மன்னராட்சிதான் நினைவிற்கு வருகிறது!
மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், சபையில், மன்னரைப் புகழ்ந்து பாட வேண்டும், புலவர்கள்; மறுக்கும் பட்சத்தில், அப்புலவரை நாட்டை விட்டு துரத்தி விடுவர்.
அதைப் போன்றுதான், ஆளுவோர் குறித்த புகழ்ச்சி உரையை, கவர்னர் படிக்க மறுத்ததால், 'கவர்னர் தமிழகத்தை விட்டுப் போக வேண்டும்' என்று கூக்குரல் எழுப்புகின்றனர், கழக கண்மணிகள்.
இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், அக்காலத்தில் மன்னரைப் புகழ்ந்து, புலவர்கள் சுயமாக பாடல் இயற்றிப் பாட வேண்டும். இன்றோ, அந்தக் கஷ்டம் கவர்னருக்கு இல்லை; ஆட்சியாளர்களின் அடிபொடிகளே, முதல்வரை இந்திரனே, சந்திரனே என்று புகழ்ந்து, ஒரு பொய்யுரையை தயாரித்துக் கொடுத்து விடுவர்.
அதை, கவர்னர் கஷ்டமே இல்லாமல் வாசித்து விட்டுச் செல்ல வேண்டும்!
ஆக மொத்தம், கவர்னர் என்பவர் அரசையும், முதல்வரையும் புகழ்ந்து பாடும் புலவராக பணிபுரிய வேண்டும். இது ஒரு மரபாம்... உலகத்தில் எந்த நாட்டிலாவது இப்படி ஒரு ஜால்ரா மரபு உண்டா?
வாய் இல்லா ஜீவன் வழக்கு போடுமா?
தேவ்.பாண்டே,
செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருச்சி -
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், கடந்த 2021ல் சென்னை
உயர்நீதிமன்றத்தில், 'ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி
யானைகளுக்கு, கொள்ளிடம் ஆற்றங்கரையிலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு இடத்தில்,
10 ஏக்கர் நிலம் ஒதுக்கி, அங்கு யானைகளை பராமரிக்க வேண்டும்' என்று வழக்கு
தொடுத்திருந்தார்.
சமீபத்தில், இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
மனுதாரரிடம்,
நீதிபதிகள், 'தங்களுக்கு இந்த வசதிகள் வேண்டும் என யானைகள்
உங்களிடம்புகார் அளித்ததா? இந்த வழக்கை தொடர உங்களுக்கு என்ன உரிமை
உள்ளது?' என கேள்வி எழுப்பியுள்ளனர்.
கோவில்களில் வழிபாட்டிற்காக
வளர்க்கப்படும் யானைகளை, ஒரே இடத்தில் கட்டி வைத்திருப்பதால், அவை உளவியல்
ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதனால், திடீரென கோபமடைந்து பக்தர்களை
தாக்குகின்றன.
யானைகள் புத்துணர்வு பெற்றால், அவை பக்தர்களை தாக்காது!
இதை அறிந்து தான், ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், யானைகளுக்கு புத்துணர்வு முகாம்களை ஏற்படுத்தினார்.
இதை
கருத்தில் வைத்து, ரங்கராஜன் நரசிம்மனும் யானைகள் புத்துணர்வு பெற,
அவைகளுக்கு விசாலமான இடம் வேண்டும் என, பொது நல வழக்கு தொடர்ந்திருக்கலாம்.
நீதிமன்றம்
மனுதாரரின் வழக்கில் உள்ள உண்மைத் தன்மையை ஆராயாமல், 'யானைகள் உங்களிடம்
புகார் அளித்ததா?' என்று கேள்வி எழுப்புவது வேடிக்கையாக உள்ளது.
'லாரிகளில்
அடைத்து கேரளாவுக்கு ஏற்றிச் செல்லும்போது, வேதனை அடைகிறோம்' என்று எருமை
மாடுகள் புகார் அளித்து தான், காவல்துறையினரும், விலங்குகள் நல வாரியமும்
நடவடிக்கை மேற்கொள்கின்றனரா?
'சினிமா படப்பிடிப்பின்போது நாங்கள்
துன்புறுத்தப்படுகிறோம்; அதனால், எங்களை வைத்து சினிமா படம் எடுக்கக்
கூடாது' என்று எந்த பாம்பு, ஆடு, மாடு அளித்த புகாரின் அடிப்படையில்,
சினிமா துறையில் விலங்குகளை வைத்து படம் எடுப்பதை தவிர்த்து வருகின்றனர்.
'ஜல்லிக்கட்டு நிகழ்வால் நாங்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகிறோம்' என்று எந்த ஜல்லிக்கட்டு காளையாவது புகார் அளித்ததா?
'விலங்குகள்
வந்து புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்போம்' என்றால்,
விலங்குகளுக்காக அமைக்கப்பட்ட நல அமைப்புகள் மற்றும் விலங்குகள் நல
செயல்பாடுகள் எல்லாம் கேலிக்கூத்தாக மாறிவிடும்!
யானைகள் தான்
நீதிமன்றம் வந்து புகார் தர வேண்டுமானால், அவைகளுக்கு பஸ் பிடித்து
நீதிமன்றங்களுக்கு வரத் தெரியாது; நீதிமன்றங்களின் படிக்கட்டில் ஏறத்
தெரியாது. வாயில்லா ஜீவன்களான அவைகளுக்கு வக்கீல் வைத்து வாதாட தெரியாதே!
வியப்பில்லை!
அ.ரவீந்திரன்,
குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய
மாட்டேன்' என்று சபதம் எடுத்த அண்ணாமலை, 'ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அவலத்தை
தடுக்க முடியாமல், தானும் ஒரு பார்வையாளனாக இருக்க வேண்டி உள்ளதே...' என்ற
ஆதங்கத்தில், தன்னை தானே சவுக்கால் அடித்து, தண்டித்துக் கொண்டார்.
இது ஓர் உணர்வுப்பூர்வமான விஷயம்!
அதை,
துாத்துக்குடி சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், 'தமிழக மாநில தலைவர்
பதவியை தக்க வைக்க, அண்ணாமலை விரதம் இருந்து வித்தை காட்டுகிறார்' என,
நக்கலாக பேசியுள்ளார்.
நோட்டுக்காவும், 'சீட்'டுக்காவும்
நேரத்துக்கு ஒரு கட்சி மாறும், தமிழக அரசியல்வாதிகளுக்கு அண்ணாமலையின்
நடவடிக்கைகள் விந்தையாகவும், வித்தையாகவும் தான் தெரியும்!
அந்த
சாட்டை அடியின் பின், ஒரு நேர்மையாளனின் கோபம் மறைந்துள்ளதை, நேர்மை
உள்ளவர்களால் தானே அறிய முடியும்... ஊழல்வாதிகளால் எப்படி அறிய முடியும்?
பெட்டிக்கு
கையேந்தி நிற்கும் கூட்டத்திற்கு, ஒரு பெண் பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டது, அவளின் தனிப்பட்ட விவகாரங்கள் கசிந்தது, குற்றவாளி
காப்பாற்றப்படுவது இது எல்லாம் கண்களுக்கு தெரியவில்லை; ஆனால், 'ஒரு
பெண்ணின் அவமானத்தை கோடான கோடி பேர்களில் தானும் ஒருவனாக வேடிக்கை
பார்க்கும் நிலையில் உள்ளோமே' என்று மனம் நொந்து, தன்னை தானே தண்டித்துக்
கொண்டால், அது காட்டுமிராண்டித்தனமான செயலாக தெரிகிறது.
அதுசரி...
ஈழத்தில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டபோது, மெரினா பீச்சில்,
தலைக்கு ரெண்டு, காலுக்கு ரெண்டு 'ஏசி'யுடன், பஞ்சு மெத்தையில், மனைவி,
துணைவியுடன், அரை நாள் உண்ணாவிரதம் இருந்த தமிழின தலைவரின் தொண்டர்களுக்கு,
அண்ணாமலையின் செயல் காட்டுமிராண்டித்தனமாக தெரிவதில் வியப்பில்லை!