sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

சி.பி.எஸ்.இ., பள்ளி திறந்து வசூலிப்பவர் காமராஜரா?

/

சி.பி.எஸ்.இ., பள்ளி திறந்து வசூலிப்பவர் காமராஜரா?

சி.பி.எஸ்.இ., பள்ளி திறந்து வசூலிப்பவர் காமராஜரா?

சி.பி.எஸ்.இ., பள்ளி திறந்து வசூலிப்பவர் காமராஜரா?

2


PUBLISHED ON : ஜூன் 05, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 05, 2025 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: த.வெ.க., சார்பில், சமீபத்தில் நடந்த கல்வி விருது வழங்கும் விழாவில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவியருக்கு அக்கட்சி தலைவர் நடிகர் விஜய் பரிசு வழங்கினார். இப்படி விழா எடுத்து, மாணவர்களை ஊக்கப்படுத்துவது நல்ல செயல் தான்.

அதேநேரம், அவ்விழாவில் பங்கேற்ற ஒருவர், 'கல்விக்கு இவ்வளவு பெரிய தொண்டு செய்வதால், விஜயை,'இளைய காமராஜர்' என அழைக்கலாம்' என்று ஒரு,'பிட்'டைப் போட்டார்.

உடனே, அதை ஏற்று, புன்னகையுடன் அவரது தோளில் விஜய் தட்டிக் கொடுத்ததும், தொண்டர்கள் சமூக வலைதளங்களில், 'இளைய காமராஜர் விஜய்' என்று, புகழ்பாடி வருவதை சகிக்க முடியவில்லை.

நடிகர்கள் புகழ்ச்சிக்கு ஏங்குவர், மயங்குவர் என்பது நாடறிந்த விஷயம் தான்... அதற்காக இப்படியா?

வாட் ப்ரோ? வெரி ராங் ப்ரோ!

தமிழக பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' பாத யாத்திரை நடத்தியபோது அவரிடம், 'உங்களை வாழும் காமராஜராக பார்க்கிறேன்' என்று ஒருவர் புகழ்ந்தார். அதை அண்ணாமலை ரசிக்கவில்லை.

அடுத்த நொடியே, 'அண்ணா... அப்படி புகழாதீர்கள். முன்னாள் முதல்வர் காமராஜருக்கு இணையாக இந்த உலகத்தில் இப்போது எவருமே இல்லை. காமராஜருக்கு நிகர் அவர் மட்டுமே' என்று அந்த இடத்திலேயே மறுப்பு தெரிவித்தார்.

ஆனால், விஜய் என்ன செய்தார்... அப்பட்டத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறார்.

ஏழை பிள்ளைகள் கல்வி அறிவு பெற வேண்டுமே என்பதற்காக, அரசிடம் நிதி இல்லாத நிலையிலும், கையேந்தி நிதி பெற்று, பட்டிதொட்டி எங்கும் கல்விக் கூடங்களை திறந்தவர் காமராஜர்.

ஆனால், கோடிக்கணக்கில் சம்பளம் பெற்றும் ஏழை பிள்ளைகளுக்கு என்று பள்ளிக்கூடம் திறக்காமல், பணம் சம்பாதிக்க, சி.பி.எஸ்.இ., பள்ளி திறந்த விஜய், இளைய காமராஜரா?

கடந்த 1992 முதல் இன்று வரை கதாநாயகனாக நடித்து வரும் விஜய், இத்தனை காலங்களில் எத்தனை பேருக்கு கல்வி உதவி செய்துள்ளார்?

'கழக கல்வி தந்தைகள்' போல், தேர்தலுக்காக, 'கல்வி கொடை வள்ளல்' ஆகியுள்ள விஜய், முதலில் தேர்தலில் நின்று வெற்றி பெறட்டும்... அவரது ஆட்சியைப் பார்த்த பின், மக்கள் சொல்லட்டும் விஜய் காமராஜரா, கருணாநிதியா என்று!

அதுவரை காமராஜரை விட்டு விடுங்களேன்!



காங்கிரஸ் எடுத்த நடவடிக்கை என்ன?


எஸ்.கண்ணம்மா, விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ் மூத்த தலைவர் உதித்ராஜ், 'பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு ஆதரவாக, பா.ஜ., தலைவர்கள் கூட பேசாதவற்றை எல்லாம் சசி தரூர் பேசுகிறார்.

'அவர், பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளராகி விட்டார். நம் படையினருக்கு சேர வேண்டிய பெருமைகளை எல்லாம், பிரதமர் மோடியை குறிப்பிட்டு பேசி வருகிறார்' என்று கூறியுள்ளார்.

சசி தரூர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது... ஆப்பரேஷன் சிந்துாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் நாடே மோடியை புகழ்கிறது. அந்த வயிற்றெரிச்சல் தான் உங்களை இப்படி புலம்ப வைக்கிறது.

கடந்த காலத்தில் மும்பை, பெங்களூரு, டில்லி போன்ற இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

ஏன்... பார்லிமென்ட் வளாகத்திலேயே தாக்குதல் நடத்தப்பட்டது. 2008ல் சர்வ சாதாரணமாக படகுகளில் மும்பை வந்த, 10 பாகிஸ்தான் பயங்கரவாதிகள், எட்டு இடங்களில் நான்கு நாட்கள் தொடர் தாக்குதல் நடத்தினர். இதில், 164 பேர் கொல்லப்பட்டனர்; 308 பேர் படுகாயமடைந்தனர்.

அப்போது, காங்., கட்சி ஆட்சியில் இருந்தது; இதே திறமைமிக்க ராணுவமும் நம் கையில் இருந்தது. ஆனால், பயங்கரவாதிகளுக்கு எதிராக காங்., அரசு ஆற்றிய எதிர்வினை என்ன?

பிடிபட்ட அஜ்மல் கசாப் துாக்கிலிடப்பட்டாலும், அவன் அம்பு மட்டும் தான். அவனை ஏவியவர்களுக்கு காங்.,அரசு என்ன தண்டனை கொடுத்தது?

நம் ராணுவத்தின் வீரம் அளப்பரியது; அதில், மக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், காங்., கட்சிக்கு எப்போதும் சந்தேகம் உண்டு.

அதனால் தான் நம்மைவிட பொருளாதாரத்தில், ராணுவ பலத்தில் பலமடங்கு பின்தங்கிய பாகிஸ்தானுக்கு எதிராக விரல் நுனியைக் கூட காங்கிரஸ் அசைக்கவில்லை. சிறந்த ராணுவ பலத்தை பயன்படுத்தத் தெரியாத மங்குனியாக இருந்தது, காங்., அரசு.

ஆனால், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், உரி, புல்வாமா தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதலுக்கு கொடுக்கப்பட்ட அடி பாகிஸ்தானுக்கு வாழ்வில் மறக்க முடியாத மரண அடியாக இருந்தது. இதைத் தான் நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அப்பாவிகளை பயங்கரவாதிகள் கொல்வர். ஆனால், 140 கோடி மக்களும், சிறந்த ராணுவ கட்டமைப்பு இருந்தும் அவர்களுக்கு எதிராக காங்., அரசு விரலைக் கூட அசைக்காது. அதேநேரம், பா.ஜ., பதிலடி கொடுத்தால், அதை விமர்சிக்க துடிக்கிறது. வெட்கமாக இல்லையா?



வங்கிகள் முன்வருமா?


எஸ்.ஷிவானி சிவகுமார், செங்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதவர்களுக்கு, இனிமேல் எந்த அபராதமும் விதிக்கப்படாது' எனக் கூறி, வங்கி வாடிக்கையாளர்கள் மனதில் பாலை வார்த்துள்ளது, கனரா வங்கி.

பொதுவாக, அனைத்து வங்கிகளிலுமே, சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்படி இல்லாவிட்டால், அதற்கென தனி அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த அபராத தொகை, 2024 நிதியாண்டில் மட்டும் 2,331 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், 8,500 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இதை வசூல் என்று கூறுவதை விட, மறைமுக கொள்ளை என்றால் அது மிகையில்லை!

பண முதலைகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடன் கொடுத்து ஏமாறுவதும், அதை ஈடுகட்ட அப்பாவி வாடிக்கையாளர்களிடம் இப்படி கொள்ளையடிப்பதும் எந்த வகையிலும் ஏற்புடைய செயல் அல்ல!

முன்பு போல் அல்லாமல் இப்போது வங்கியை உபயோகிக்கும் பழக்கமும், கட்டாயமும் அதிகரித்துள்ளதால், நியாயமான கட்டணங்கள் வாயிலாகவே, வங்கிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. அப்படி இருக்கும் போது, இத்தகைய அபராத கொள்ளை எதற்கு?

எனவே, கனரா வங்கியின் செயலை பின்பற்றி மற்ற வங்கிகளும் அபராதம் விதிக்கும் நடைமுறையை ரத்து செய்ய முன்வர வேண்டும்!








      Dinamalar
      Follow us