PUBLISHED ON : ஆக 22, 2026 02:40 AM

எல்.சுப்பு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசுக்கு இன்று பெரும் தலைவலியாக இருப்பது இளைஞர்களிடையே பரவியுள்ள போதை கலாசாரம்!
முதல்வர் விஜய் இது குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினார்; ஆனால், வெறும் விழிப்புணர்வு பிரசாரத்தால் மட்டும் போதையை ஒழித்து விட முடியாது. இளைஞர்களிடம் ஏற்படும் மன மாற்றம் ஒன்றே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும்!
இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து தடுக்க வேண்டும் என்றால், கிராமங்கள் தோறும் பள்ளி - கல்லுாரி மாணவர்களிடம் ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை சில எளிய திட்டங்களை செயல்படுத்தினாலே போதும்!
ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலிருந்தும் வார இறுதியில், பள்ளி - கல்லுாரி மாணவர்களுக்கு என்று இலவசப் பேருந்து வசதி செய்து, அருகிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க கோவில்களுக்கு ஒரு நாள் சுற்றுலாவாக அழைத்துச் செல்லலாம்.
அக்கோவில்கள் குறித்த வரலாற்று தகவல்களை அறிய, 'ஆலயம் செயலி'யை உருவாக்கி, கோவில் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளுக்கு அருகில், 'எ ஆர்' குறியீடுகளை அமைத்து, அவற்றை, 'ஸ்கேன்' செய்தால், அந்த இடத்தின் வரலாறும், பதிகங்களும் ஆடியோவாகக் கேட்கும் வசதியை உருவாக்கலாம்.
இதன் வாயிலாக, நம் நாட்டின் தொன்மையான கலாசாரத்தையும், பராம்பரியத்தையும் மாணவர்கள் அறிந்து கொள்வதுடன், பள்ளி பாடங்கள், தேர்வுகள் என்று அழுத்தங்கள் இல்லாமல், ஒரு மாறுபட்ட சூழ்நிலையை உள்வாங்கிக் கொள்வர்.
இது, மது, போதைப்பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இருந்து அவர்களை மாற்றி, வேறு திசையில் சிந்திக்க வைக்கும்.
கூடவே, பள்ளிகளில் என்.சி.சி., சாரணர் இயக்கம் இருப்பது போல், ஒவ்வொரு கிராமத்திலும், பள்ளி - கல்லுாரி மாணவர்களை ஒருங்கிணைத்து, 'உழவாரப்பணி மாணவர் தன்னார்வலர் படை' என்ற ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
இதில் இணையும் மாணவர்களை மாதம் ஒருமுறை கிராமப்புறங்களில் சிதிலமடைந்த சிறிய கோவில்களுக்கு இலவசப் பேருந்துகளில் அழைத்துச் சென்று, சுற்றுப்புறத் துாய்மை பணிகளில் ஈடுபடுத்தலாம். பங்கேற்போருக்கு, 'பாரம்பரியப் பாதுகாப்பு வீரர்' என்ற சான்றிதழ் வழங்கி, அவர்களை ஊக்கப்படுத்தலாம்.
இதன்வாயிலாக, நம் நட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும், சுற்றுப்புற துாய்மை குறித்த பொறுப்புணர்வும் ஏற்படும்.
இவை அனைத்தையும் விட, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ஹிந்து கோவில்களில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திவ்ய பிரபந்தம் போன்ற திருமறைகள் கற்பிக்கப்படுவது போல், தமிழக கோவில்களில் தமிழ் பக்தி இலக்கிய வகுப்புகளை வார இறுதியில், ஓதுவார்கள் வாயிலாக இலவசமாக நடத்த வேண்டும்.
இதில் மாணவர்கள் மட்டுமல்ல; உள்ளூர் இளைஞர்களையும் ஜாதி பேதமற்று பங்கேற்கச் செய்ய வேண்டும். இதனால், ஒழுக்கமும், கட்டுப்பாடும் நிறைந்த ஓர் இளம் தலைமுறை உருவாகும்!
மனித மனம் கட்டுப்பாடற்ற குதிரை போன்றது; அதற்கு பக்தி என்ற கடிவாளம் இட்டால் மட்டுமே, சரியான வழியில் செலுத்த முடியும்.
டாஸ்மாக் வருமானம் அரசுக்கு கிடைக்கும் மிகப் பெரிய வருவாயாக இருக்கும் நிலையில், மதுவிலக்கை தமிழக அரசால் அமல்படுத்த முடியாது. ஆனால், போதையின் பின் செல்லும் மனங்களை பக்தியால் கட்டுப்படுத்த முடியும் அல்லவா?
ஹிந்து அறநிலையத்துறை இதை உடனடியாக பரிசீலிக்குமா?
நம்பிக்கையூட்டும் நடவடிக்கை!
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தலில் வெற்றி பெற, ஆட்சியைத் தக்க வைக்க, இலவசங்கள் என்ற தவறான குறுக்கு வழியைப் பின்பற்றி, தமிழகத்தை பெரும் கடன் சுமைக்குள் தள்ளியுள்ளனர், கடந்த திராவிட கட்சி ஆட்சியாளர்கள்!
இந்நிலையில், புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில், தமிழகத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆலோசிக்க முடிவு செய்துள்ள து.
முந்தைய திராவிட கட்சிகளின் ஆட்சியில், கட்சி ஆதரவு நிலைப்பாடு உடையவர்களையே இதுபோன்ற கமிட்டிகளின் தலைவர்களாக நியமனம் செய்வது வழக்கம்.
உதாரணம், கடந்த ஆட்சியில், 'நீட்' தேர்வு குறித்து கமிட்டி அமைக்கப்பட்டு, மக்கள் கருத்துக் கேட்புகள் என்ற பெயரில், கட்சியினரின் கருத்துகளை பதிவு செய்து, அதுதான் தமிழக மக்களின் எண்ணம் என்பது போல் சித்தரித்தது, தி.மு.க.,
அதுபோன்று புளித்துப் போன நாடகங்களையே பார்த்து பழகியிருந்த தமிழக மக்களுக்கு, கட்சி சார்பற்ற, பொருளாதார நிபுணரான மான்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது, நம்பிக்கையூட்டுவதாக உள்ளது!
பழனிசாமியின் புதுவகை நியாயம்!
சி.சுருதி, செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'டெல்டா விவசாயிகள் காய்ந்து கொண்டிருக்கின்றனர்; ஆனால், தலைமைச் செயலகத்தில் தன் அறையை நவீன மயமாக்கிக் கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய்' என்று குற்றஞ்சாட்டியுள்ளார், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி.
முதல்வர், தன் அறையை மட்டும் ஐந்து கோடி ரூபாய் செலவில் புதுப்பித்தால், அது ஆடம்பர செலவு என்று சொல்லலாம்; ஆனால், தன் அறையுடன், தனிச் செயலர்கள், உதவியாளர்கள், ஆலோசகர்கள் அறைகள் என, நுாற்றுக்கணக்கானோர் பணியாற்றும் ஓர் அலுவலகத்தை புதுப்பிப்பதற்கு செலவு செய்வதில் என்ன தவறு உள்ளது?
கடந்த 2018ல் மக்கள் வரிப்பணம், 50 கோடி ரூபாய்க்கும் மேல் எடுத்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியை எழுப்பியபோது, அது பழனிசாமிக்கு ஆடம்பர செலவாக தெரியவில்லையா?
அதேபோன்று, கடந்த தி.மு.க., ஆட்சியில், மக்கள் வரிப்பணத்தை வைத்து, தன் தந்தையின் சமாதியை, 40 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்தாரே அன்றைய முதல்வர் ஸ்டாலின்... அதற்கு பழனிசாமி ஆற்றிய எதிர்வினை என்ன?
மக்களின் வரிப்பணம், 50 கோடி, 40 கோடி ரூபாய் என்று எடுத்து, தங்கள் கட்சி தலைவர்களின் சமாதிகளை எழுப்பலாம்; ஆனால், தலைமை செயலகத்தில் அதிகாரிகள் பணிபுரியும் அலுவலகத்தை புதுப்பிக்க, ஐந்து கோடி ரூபாய் செலவு செய்தால், அது ஆடம்பரமா?
என்னே... பழனிசாமியின் புதுவகை அரசியல் நியாயம்!
