தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ கணக்கெடுப்பில் இத்தனை குழப்பமா?

 கணக்கெடுப்பில் இத்தனை குழப்பமா?

 கணக்கெடுப்பில் இத்தனை குழப்பமா?


PUBLISHED ON : ஆக 30, 2026 01:37 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 30, 2026 01:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.நடராஜன், வழக்கறிஞர், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

அரசு பள்ளி ஆசிரியையான என் மனைவிக்கு, கோவையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒதுக்கப்பட்டது.

கணக்கெடுப்பில் ஏதேனும் சந்தேகம் வந்தால், அதை நிவர்த்தி செய்ய வேண்டிய அதிகாரிகளுக்கே அதுகுறித்து தெரியவில்லை.

கணக்கெடுப்பு பணிகளுக்காக தரப்பட்ட செயலியில், தவறான பதிவுகள் இருந்தால், அதை நீக்கும் முறையும் உள்ளது.

உதாரணத்திற்கு ஒருவர் தவறான பதிவுகள் என்ற அடிப்படையில், 21 முதல் 25 வரை உள்ள எண்களை நீக்குகிறார் என்றால், புதிய பதிவுகள், 21 என்று வருவதற்கு பதில், 26 என்றே வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், அவர்களுக்கு பதில் தெரியவில்லை.

மேலும், எந்த ஒரு கட்டடத்தையும் விடக்கூடாது என்பது உத்தரவு!

ஆனால், ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் என் மனைவி கணக்கெடுத்த போது, 20 வீடுகள் இருந்துள்ளன.

அவை அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு இன்னும் ஒரு மாதத்தில் குடி வரும் நிலையில் இருப்பதால், அதை கணக்கில் எடுத்து, அவை, 'காலி' என்று செயலியில் குறித்துள்ளார், என் மனைவி.

கணக்கெடுப்பு பணி முடிந்து, அதை அதிகாரியிடம் சமர்ப்பித்தால், 'அந்த 20 வீடுகள் ஏன் எடுக்கப்பட்டது? அதை கணக்கில் காட்டக்கூடாது' என்கிறார், அதிகாரி.

ஆனால், அவர்கள் கொடுத்துள்ள புத்தகத்தில், எந்த ஒரு கட்டடமும் விடுபடக் கூடாது என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

இப்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஏகப்பட்ட குளறுபடிகள்!

இதுபோன்ற கணக்கெடுப்பு பணிகளுக்கு முன், உயர் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு தெளிவாக விளக்கி, அதன்பின், அரசு ஊழியர்களுக்கு பயிற்சி கொடுப்பது நல்லது!

கெடுவான் கேடு நினைப்பான்!

ரா.திரிகேஷ், திருப்பத்துார், சிவகங்கை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தான் சுதந்திரம் கிடைத்தது. ஆனால், இரண்டு நாடுகளுக்கும் இடையே தான் எவ்வளவு வித்தியாசம்!

'பாகிஸ்தானின் இன்றைய நிலையை பாருங்கள்... ஆனால், இந்தியாவோ தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் உலக அரங்கில் தன் நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

'நாம் உண்மையிலேயே ஒரு ஜனநாயக நாடா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். நம்மை இந்த நிலைக்கு கொண்டு வந்த நம்முடைய அரசை, பாகிஸ்தானியர்கள் கேள்வி கேட்க வேண்டும்' என்று கூறியுள்ளார், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஒரே நேரத்தில் சுதந்திரம் கிடைத்தாலும், சுதந்திரத்திற்கு பின் இந்தியா தானுண்டு, தன் வேலையுண்டு என்று, நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதனால், உலகின் நான்காவது பொருளாதார பலம் கொண்ட நாடாக இன்று வளர்ந்துள்ளது.

ஆனால், பாகிஸ்தான் என்ன செய்கிறது... நாட்டின் வளர்ச்சிக்காக செலவிட வேண்டிய பணத்தையும், நேரம் மற்றும் உழைப்பையும் இந்தியாவின் வளர்ச்சியையும், அமைதியையும் சீர்குலைக்க செலவிட்டு வருகிறது. பின், எங் கிருந்து வளர்ச்சி வரும்?

'கெடுவான் கேடு நினைப்பான்' என்பதற்கு இணங்க, இந்தியாவிற்கு கெடுதல் செய்வதையே முழுநேர பணியாக கொண்டு, நாட்டின் வளர்ச்சியை கோட்டை விட்டதால், இன்று அடிப்படை தேவைக்கு கூட, உலக நாடுகளிடம் கையேந்துகிறது பாகிஸ்தான்!

எனவே, இனிமேலாவது இந்தியாவுக்கு கெடுதல் செய்யும் எண்ணத்தை விடுத்து, பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டு வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும்!

தரமான சாலையை உறுதி செய்ய வேண்டும்!


முனைவர் செ.அ.ராகுல் கோல்டன், உதவிப் பேராசிரியர், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தலைக்கவசம், சீட் பெல்ட் அணிதல், இருசக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்வதை தவிர்த்தல் உள்ளிட்ட சாலை விதிகளை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை; உயிரைப் பாதுகாப்பதே இந்த விதிகளின் அடிப்படை நோக்கம். எனவே, விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது அவசியமானதே!

ஆனால், சாலை விதிகளை அமல்படுத்த துடிக்கும் அரசு, தன் பொறுப்புகளை அதே தீவிரத்துடன் நிறைவேற்றுகிறதா என்பது தான் கேள்விக்குறி!

ஒருபுறம் சாலைகளில் பெரிய பள்ளங்கள், தெருவிளக்குகள் இல்லாமை, நடைபாதை ஆக்கிரமிப்புகள், மழைநீர் தேக்கம் போன்ற பிரச்னைகள்; மறுபுறம், சிறிய விதிமீறல்களுக்குக் கூட அபராதம் விதிப்பு!

பொதுமக்களிடம் ஒழுங்கை எதிர்பார்க்கும் அரசு, பாதுகாப்பான சாலையை வழங்க வேண்டியது தன் கடமை என்பதை மறந்துவிடுகிறது.

மக்கள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்றால், சட்ட அமலாக்கமும் நியாயமாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்.

வாகனத்தின் வகை, நபரின் சமூக நிலை, அதிகாரம் அல்லது செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் சட்டம் மாறுபடக் கூடாது.

ஒரே விதிமீறலுக்கு ஒருவரிடம் மட்டும் கடுமையான நடவடிக்கையும், மற்றொருவரிடம் அலட்சியமும் காட்டப்படுமானால், அது சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதிக்கும்.

எனவே, அரசு பாதுகாப்பான சாலையை வழங்க வேண்டும்; வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். இந்த இரு கடமைகளும் சமநிலையில் நிறைவேற்றப்படும்போதுதான் உண்மையான சாலைப் பாதுகாப்பு உருவாகும்!

முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!


ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

சென்னைக்கான இரண்டாவது விமான நிலையத்தை பரந்துாரில் அமைக்க, மத்திய விமான போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் அளித்து, கோடிக்கணக்கான ரூபாய் இழப்பீடாக வழங்கி, கிட்டத்தட்ட, 50 சதவீத நிலமும் பெறப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு அத்திட்டத்தை ரத்து செய்துள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது.

மக்கள் நலனுக்காக கொண்டு வரப்படும் எந்த ஒரு திட்டமும், சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்துவது இயல்பே!

ஒரு காலத்தில் விவசாய பூமியாக இருந்த நிலங்களில்தான், படிப்படியாக அனைத்து விதமான கட்டுமானங்களும் ஏற்பட்டு, நாடு தற்போதுள்ள வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தை வளர்ச்சி பாதையின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவும் பரந்துார் விமான நிலைய திட்டத்தை அரசே கைவிட்டுள்ளது, ஏமாற்ற த்தை அளிக்கிறது.

தமிழகத்தின் பிரகாசமான எதிர்காலத்தை கருத்தில் வைத்து, அரசு தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us