PUBLISHED ON : மார் 28, 2025 12:00 AM

சு.சங்கரலிங்கம், சத்திரப்பட்டி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க விரும்பாத ஆங்கிலேயர்கள், தங்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால் பாகிஸ்தானுக்கு கொடுத்த பின், நம் நாட்டிற்கு சுதந்திரம் தந்தனர்.
அப்போது, தமிழகத்தில் உள்ள நீதிக்கட்சியினர், 'எங்களுக்கு சுதந்திரம் வேண்டாம்; உங்கள் ஆட்சி தான் வேண்டும்' என்று தங்களின் அடிமைத்தனத்தின் விசுவாசத்தை காட்டினர்.
அவர்களின் வழித்தோன்றல்கள் தான், இன்றைய தி.க., - தி.மு.க., - அ.தி.மு.க., போன்றவை!
சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லாதவரான, ஈ.வெ.ரா., தான், இவர்களின் முன்னோடி தலைவர்.
'கடவுள் இல்லை; கடவுளை கற்பித்தவன் முட்டாள்' என்பது அவரது கொள்கை. ஆனால், கோவிலுக்குள் பட்டியலின மக்களை உள்ளே விட மறுத்ததை கண்டித்து போராட்டம் நடத்தினாராம்... இரும்பு அடிக்கும் இடத்தில், 'ஈ'க்கு என்ன வேலை?
கடவுள் மறுப்பாளரான இவர், கோவிலுக்கு வந்தவர்களிடம் என்ன கூறியிருக்க வேண்டும்... 'கடவுள் என்று எதுவுமே இல்லை; உங்களை ஏமாளியாக்கச் செய்யும் முட்டாள் தனம் அது' என்று, அவர்களை தன் வழிக்கு அல்லவா கொண்டு வந்திருக்க வேண்டும்? எதற்கு ஆலய நுழைவு போராட்டம் நடத்த வேண்டும்?
அதேபோன்று தான், பெண்ணியம் போற்றுதல்!
முதியவர் ஒருவர், இளம்பெண்ணை திருமணம் செய்வதை தடுப்பது நல்ல செயல் தான்; அதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதை அவர் செய்தாரா?
அத்துடன், தமிழ் மொழியையும், திருக்குறளையும் அவமதித்தார். அவரின் வழித்தோன்றல்களோ தற்போது தமிழ்மொழி மீது பாசமழை பொழிகின்றனர்; மெய்சிலிர்த்துப் போகிறது!
கழகங்களின் ஆட்சியில், தமிழ் மொழி வளரவில்லை; நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டு தான் வருகிறது. தேவநாகரி எழுத்து என்று, '₹' க்கு பதில், 'ரூ' என வெளியிட்டு, தன் தமிழ் பாசத்தைக் காட்டினார், முதல்வர் ஸ்டாலின். அதே நேரம், நாம் இன்று வரை 1,2,3 என்று எழுதுகிறோமே... அவை என்ன தமிழ் எண்களா? எங்கே போயின தமிழ் எண்கள்?
'எண்ணும், எழுத்தும் கண்ணென தகும்' என்றார், அவ்வையார்!
அந்த எண்களும் மறைந்து விட்டன; எழுத்துகளும் கழக ஆட்சியில் தொலைந்து வருகின்றன. முதலில், தி.மு.க., அமைச்சர்கள் எத்தனை பேர், தங்கள், 'இனிஷியலை' தமிழில் எழுதுகின்றனர்?
கே.என்.நேரு, எஸ்.எஸ்.சிவசங்கர், டி.ஆர்.பி.ராஜா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.ரகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், சி.வி.கணேசன் என்று தானே எழுதுகின்றனர்!
கழகத்தினர் நடத்தும் தொலைக்காட்சிகளில், கற்றுக் கொடுக்கும் பள்ளியில்... ஏன், கையெழுத்தில் கூட தமிழ் இல்லை. ஆனால், தமிழை வாழ வைப்பதாக குடைப்பிடிக்கின்றனர். அதை நாம் நம்ப வேண்டுமா?
யாகாவாராயினும் நா காக்க!
என்.ராமகிருஷ்ணன்,
பழனியில் இருந்து எழுதுகிறார்: 'மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு
நாவடக்கம் தேவை' என்கிறார், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். ஆனால், அடுத்த
நாளே, 'தி.மு.க.,வை விமர்சித்தால் நாக்கை அறுப்பேன்' என்கிறார்,
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். இதற்கு பெயர் தான் நாவடக்கமா?
தி.மு.க.,வினரின் நாவடக்கம் தமிழக மக்கள் அறியாததா?
எம்.ஜி.ஆர்.,
ஜெயலலிதா, காமராஜர், இந்திரா போன்ற தலைவர்களை எல்லாம் கருணாநிதி எவ்வளவு
ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் விமர்சனம் செய்தார் என்பதற்கு, பழைய,
'முரசொலி' பத்திரிகைகளே சாட்சி!
ஸ்டாலினும், கருணாநிதிக்கு
சளைத்தவர் இல்லை; பல முறை பிரதமர் மோடி, கவர்னர் மற்றும் அ.தி.மு.க.,
பொதுச்செயலர் பழனிசாமியை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ளார்.
தி.மு.க., தலைமை கழக பேச்சாளர்களை கேட்கவே வேண்டாம்... மூன்றாம் தர மனிதர்களின் பேச்சு எப்படி இருக்கும் என்பதற்கு இவர்களே உதாரணம்!
தங்கள்
ரிஷி மூலம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, 'திராவிடர்கள்' என்ற
முகமூடிக்குள் ஒளிந்துள்ள கழகத்தினர், அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்.,
ஆரம்பித்தபோது, 'மலையாளியின் கட்சி'என்று ஏகடியம் செய்தனர்!
'வாழ வந்தாய் வாழ்ந்து விட்டுப் போ; எங்களை ஆள நினைக்கலாமா?' என்று வசைபாடினர்.
இன்று
ஹிந்தி மொழியின் பெயரால், வடமாநிலத்தவரை இழிவுபடுத்துவதுபோல், அன்று
மலையாளிகளையும், அவர்கள் கடைகள் வைத்துள்ளதையும் ஏளனம் செய்தனர். இவர்கள்
தான் இன்று நாவடக்கம் குறித்துப் பேசுகின்றனர்.
எதிர்க்கட்சியினர்
என்றால், நாவு அடங்காமல் போவதும், தங்களை குறித்த விமர்சனம் என்றால்,
நாவடக்கம் வேண்டுவதும், தி.மு.க.,வினரின் கலாசாரம்!
இப்படியா அளந்து விடுவது?
ஆர்.சந்திரவர்மன்,
சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ- மெயில்' கடிதம்: திராவிட மாடல் அரசு
சமர்ப்பித்த இடைக்கால பட்ஜெட்டில், தங்களுக்கு சம்பந்தமில்லாதவற்றை
எல்லாம் செய்வதாக சொல்லி, ஓர் உருட்டு உருட்டியுள்ளார், நிதிஅமைச்சர்
தங்கம் தென்னரசு.
பேருந்து போக்குவரத்து மட்டும் தான், மாநில அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்குவது.
ரயில்வே,
விமானம், கப்பல் துறை போன்றவை மத்திய அரசின் நிர்வாகத்திற்கு உட்பட்டவை.
ஆனால், தமிழக மக்களை முட்டாள்களாகவும், மத்திய அரசை கிண்டல் செய்யும்
நோக்கத்துடனும், அவைகளில் எல்லாம் மூக்கை நுழைத்துள்ளது தமிழக அரசு.
ராமேஸ்வரத்தில்
விமான நிலையம், அடையாறு நதியை மீட்டெடுத்து, அழகுற சீரமைக்க
ஆண்டொன்றுக்கு, 1,500 கோடி ரூபாய் வீதம் மூன்றா வது ஆண்டாக, 4,500 கோடி
ரூபாய் மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்கள் என்று அள்ளி வீசியுள்ளார்,
நிதியமைச்சர்.
இப்படி செய்ய முடியாத காரியங்களை செய்து முடிப்பதாக, 'டுபாக்கூர்' விடுகிறோமே என்று கொஞ்சம் கூட வெட்கம் இல்லை!
ராணுவத்தை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும்?
கருணாநிதி
ஆட்சி பொறுப்பேற்றதும், உடன்பிறப்புகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று
எண்ணி, 'சீரணி' என்ற தொண்டர் படையை உருவாக்கி இருந்தார். கழக
ஊர்வலங்களுக்கும், பொதுக் கூட்டங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதே இந்த
சீரணிப்படையின் பொறுப்பு!
அந்தப் படை இன்னும் உயிர்ப்போடு தான்
உள்ளது; திராவிட மாடல் முதல்வர் அவர்களுக்கு எல்லாம் ராணுவ சீருடையும்,
ஏ.கே., 47 துப்பாக்கியும் கொடுத்து, கூடவே, ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள்,
வெடிகுண்டுகள் என, இன்னபிற ராணுவத்துக்கு தேவையான உபகரணங்களை வாங்கி,
மத்திய அரசுடன் நேரடியாக, மும்மொழி திட்டத்தை ஏற்க மாட்டோம்; தொகுதி
சீரமைப்புக்கு உடன்பட மாட்டோம் என்று மிரட்டல் விடுத்து, 'உடல் மண்ணுக்கு,
உயிர் தமிழுக்கு' என்று மோதலாம் அல்லவா?
அளந்து விடுவதற்கும் ஓர் அளவு இல்லையா?