sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

தமிழகத்திலும் நிரூபணம் ஆகும்!

/

தமிழகத்திலும் நிரூபணம் ஆகும்!

தமிழகத்திலும் நிரூபணம் ஆகும்!

தமிழகத்திலும் நிரூபணம் ஆகும்!

8


PUBLISHED ON : பிப் 14, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 14, 2025 12:00 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இதுவரை தடம் பதிக்க முடியாமல் இருந்த டில்லி, ஒடிசா, திரிபுராவில் ஆட்சியையும், மே.வங்கத்தில் கணிசமான இடங்களையும் கைப்பற்றியுள்ளது, பா.ஜ., கட்சி!

தேசிய அரசியலுக்குள் மோடி நுழைந்த பின்தான் இந்த அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.

அதுபோல், காங்., எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வருகைக்குப் பின்தான், அக்கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டு வருகிறது.

காங்., ஆட்சியின் ஊழலுக்கு எதிராக, 'ஆம் ஆத்மி' என்ற கட்சியைத் துவங்கி டில்லியை கைப்பற்றிய அரவிந்த் கெஜ்ரிவால், அதே ஊழலால், இன்று தோல்வியை தழுவியுள்ளார்.

இத்தேர்தல் முடிவுகள், 'இண்டியா' கூட்டணி பதவிக்காக அலைபவர்கள் என்பதையும், ஊழல்வாதிகளை மக்கள் நீண்டகாலம் ஏற்கமாட்டார்கள் என்பதையும் தெளிவாக உணர்த்தி விட்டன.

அதேநேரம், ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி, 2026 தேர்தலில் 200 இடங்களை வெல்வதற்கான முன்னோட்டம்தான் என்று புளகாங்கிதம் அடைந்துள்ளார், முதல்வர் ஸ்டாலின். ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற ஒருவன், வெற்றி பெற்றுவிட்டதாக ஊரெல்லாம் தம்பட்டம் அடித்தானாம்... 'போட்டியில் எத்தனை பேர் பங்கேற்றனர்?' என்று கேட்டபோது, 'நான் மட்டும்தான் ஓடினேன்' என்றானாம்.

இந்த காமெடிதான் ஈரோடு இடைத்தேர்தலில் அரங்கேறியுள்ளது. இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்குதான் வெற்றி என்பது எழுதப்படாத விதி!

தமிழகத்தில், இதுவரை நடந்த 50க்கும் மேற்பட்ட இடைத்தேர்தல்களில், எட்டு தேர்தல்களில் மட்டுமே எதிர்க்கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர். ஆகையால், ஈரோடு இடைத்தேர்தலை வைத்து, 2026 தேர்தல் முடிவை கணிக்க முடியாது.

தி.மு.க., அமைச்சர்கள் பலர் ஊழல் வழக்கில் சிக்கியிருப்பதால், வரும் காலங்களில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் தமிழகத்தில் நிகழலாம்!

போலியான வாக்குறுதிகளையும், இலவசங்களையும் காட்டி மக்களை நீண்ட காலம் ஏமாற்ற முடியாது என்பது, தமிழகத்திலும் நிரூபணமாகப் போகிறது!



ஆலோசித்து முடிவு செய்வது நலம்!


வெ.சீனிவாசன், திருச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள தண்டாயுதபாணி கோவிலில், தீபாராதனை தட்டில் பக்தர்கள் செலுத்தும் தட்சணையை, கோவில் உண்டியலில் செலுத்துமாறு கோவில் அறநிலையத்துறை அதிகாரி அங்கயற்கண்ணி கூறியுள்ளார்.

அதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, 'தட்டில் விழும் தட்சணையை அர்ச்சகர்கள் உண்டியலில் செலுத்த வேண்டும்' என உத்தரவு பிறப்பித்தார்.

இது பொதுமக்கள் இடையே கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது அறநிலையத்துறை உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது.

ஏற்கனவே, கோவில்களுக்கு எழுதி வைக்கப்படும் சொத்துக்கள், அளிக்கப்படும் நன்கொடைகள், உண்டியலில் போடப்படும் பணம், ஹிந்து விரோத, கடவுள் மறுப்பு கொள்கையுடைய ஆட்சியாளர்களால் தவறாக பயன்படுத்தப்படுகின்றனவோ என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.

இதனால், குறைந்த சம்பளமே பெறும் ஏழை அர்ச்சகர்கள் பலனடையட்டும் என, உண்டியலில் பணம் செலுத்தாமல் தட்டில் போடுகின்றனர்.

இந்நிலையில், அறநிலையத்துறை அதிகாரியின் இந்த உத்தரவு சந்தேகத்தை வலுப்படுத்தவே, 'இனி தட்டிலும் பணம் போட வேண்டாம்' என, நினைத்துக் கொண்டிருந்த நிலையில், நல்ல வேளையாக அறநிலையத்துறை, தன் தவறான உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது.

இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கும் முன், பக்தர்களை, ஆன்மிகத்தில் ஈடுபாடு உடையோரை, அர்ச்சகர்களை கலந்து ஆலோசித்த பின், முடிவு செய்வது நலம்!



மீசையில் மண் ஒட்டவில்லை!


அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தலையீட்டால் பிரச்னை ஓய்ந்திருக்கும் நிலையில், 'நானும் ரவுடி தான்' என்பது போல், தங்கள் கட்சியின் இருப்பைக் காட்ட, திருப்பரங்குன்றத்தில் அனைத்து அரசியல் கட்சியினருடன், மத நல்லிணக்க வழிபாடு நடத்தப்போவதாக அறிவித்தார், தமிழக காங்கிரஸ்தலைவர் செல்வப்பெருந்தகை.

இவர் அறிவிப்பைக் கேட்டதும், தமிழகமெங்கும் இருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் அலைகடலென திரண்டு வந்துவிடுவரா என்ன?

மோடி எனும் ஜாதி குறித்து ராகுல் பேசிய வழக்கில் நீதிமன்றம், அவரது எம்.பி., பதவியை பறித்து தீர்ப்பு வழங்கியபோது, தமிழக காங்., முன்னாள் தலைவர் அழகிரி, தங்கள் கண்டனத்தை தெரிவிக்க ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்தார்.

போராட்ட நாளும் வந்தது... தன் பின் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் அணி வகுப்பர் என பார்த்தால், விரல் விட்டு எண்ணும் அளவே, சிலர் வந்தது அழகிரிக்கு அசிங்கமாக போய் விட்டது.

அதுபோன்று, எங்கே நாம் அறிவித்த மத நல்லிணக்க வழிபாட்டிற்கும் ஆள் வராமல் சொதப்பி விடுமோ என்று பயந்து கொண்டிருந்த செல்வப்பெருந்தகைக்கு, காவல் துறை அனுமதி தராது என்ற தகவல் கிடைக்கவே, நிம்மதி அடைந்தவர், அதையே காரணம் காட்டி, நிகழ்ச்சி ரத்து என,அறிவித்தார்.

இதைத்தான், 'குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை' என்பரோ!



ஆசிரியைகளை நியமியுங்கள்!


அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் தாலுகாவில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவி, ஆசிரியர் மூவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

இந்த மூன்று கயவர்களையும் ஈவு, இரக்கமின்றி துாக்கிலிட வேண்டும்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியைகளும், ஆண்கள் பள்ளிகளில் ஆசிரியர்கள் என, பணி நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படிதான், தற்போது பணிமாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர்;ஆனால், முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், பள்ளிகளில் நடந்து வரும் பாலியல் அத்துமீறல்கள், இந்த அரசாணையை, நடுநிலைப் பள்ளிகள் வரை நீட்டிப்பு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன.

நடுநிலை முதல், உயர் நிலை, மேல்நிலை பள்ளிகள் வரை பெண் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க, ஆசிரியைகளை மட்டுமே நியமிக்க வேண்டும்.

அத்துடன், விளையாட்டு பயிற்சி முதல் என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., வகுப்புகள் கூட ஆசிரியைகள் வாயிலாகவே கற்பிக்க வேண்டும்.

பெண் மருத்துவர்கள் மற்றும் பெண் சமூக ஆர்வலர்கள் வாயிலாக, பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்த வேண்டும்.

பெற்றோரும், பெண் குழந்தைகளுக்கு சரியான மற்றும் தவறான தொடுதல் குறித்தும், யாராவது அத்துமீறினால், அவர்களிடம் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லித் தரவேண்டும்.

தற்போது குற்றம் செய்த மூன்று கயவர்களுக்கும், ஜாமின் தராமல் சிறையில் வைத்தே வழக்கை ஒருசில மாதங்களில் முடித்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான், பள்ளிகளில் எந்த பெண் குழந்தைகள் மீதும் யாரும் இனி கைவைக்க துணிய மாட்டார்கள்!








      Dinamalar
      Follow us