தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ முடிவுக்கு வரும்!

 முடிவுக்கு வரும்!

 முடிவுக்கு வரும்!


PUBLISHED ON : மார் 29, 2026 03:07 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 29, 2026 03:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெ.கோபாலசுவாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட கட்சிகளிடம் ஒரு விசித்திர பழக்கம் உண்டு. அது, தேர்தல் நேரத்தில் மட்டும், 'கூட்டணி தர்மம்' என்று கூறி கைகோர்ப்பதும், வெற்றி பெற்தும், 'தனி ஒரு கட்சியின் ஆட்சி' என்று மற்றவர்களை கழற்றிவிட்டு விடும்!

கடந்த 60 ஆண்டுகால அரசியலை திரும்பிப் பார்த்தால், திராவிடக் கட்சிகள் காட்டும் இந்த, 'மெஜாரிட்டி' பிம்பம் வெறும் எண்களின் மாயையே!

இந்த முரண்பாடு அண்ணாதுரை ஆட்சியைப் பிடித்த 1967-லேயே துவங்கிவிட்டது. அப்போது, காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு, 41.4 சதவீத ஓட்டு பெற்றது. தி.மு.க.,வோ 40.6 சதவீத ஓட்டுகளையே வாங்கியிருந்தது.

ராஜாஜியின் சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்டுகள் என ஒரு பலமான கூட்டணி இருந்ததால் தான், அன்று, 118 இடங்களை தி.மு.க., பிடித்தது. ஆனால், அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கில்லை.

அன்று போடப்பட்ட இத்தடம் இன்று வரை மாறாமல் தொடர்கிறது.

கடந்த 2006-ல் தி.மு.க., 96 இடங்களை மட்டுமே வென்றபோது, காங்., - 34, பா.ம.க., - 18 இடங்களை தக்க வைத்திருந்தது. அக்கட்சிகளின் தயவு இல்லை என்றால், அன்று தி.மு.க., ஆட்சி அமைத்திருக்காது. அதேபோல், 2011-ல் ஜெயலலிதாவின் பிரமாண்ட வெற்றிக்கு பின், தே.மு.தி.க., - சி.பி.ஐ.,யின் உழைப்பு இருந்தது.

கடந்த 2021 தேர்தலை எடுத்துக்கொண்டால், தி.மு.க., 133 இடங்களை வென்றாலும், அதன் தனிப்பட்ட ஓட்டு சதவீதம் வெறும், 37.7 சதவீதம் தான். அதாவது, 63 சதவீத மக்கள் தி.மு.க.,விற்கு எதிராகவே ஓட்டுப் போட்டுள்ளனர்.

காங்., - வி.சி.க., - கம்யூ.,களின் ஓட்டு சேர்ந்ததால்தான், 45.6 சதவீத பலம் பெற்று தி.மு.க., ஆட்சியை பிடிக்க முடிந்தது. இந்த துணைக் கட்சிகளின் ஓட்டு வங்கி இல்லை என்றால், தி.மு.க., இன்று எதிர்க்கட்சி வரிசையில்தான் அமர்ந்திருக்கும்!

இப்படி கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சிக்கு வரும் திராவிட கட்சிகள், அதிகாரப் பகிர்வு என்று வரும்போது இரட்டை வேடம் போடுகின்றன.

முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் அமைச்சரவைகளில் தி.மு.க., பல முக்கியப் பதவிகளைப் பெற்று செல்வாக்கு செலுத்தியது.

டில்லியில் அதிகாரத்தைப் பங்கு கேட்கத் தெரிந்தவர்களுக்கு, தமிழகத்தில் மட்டும் பங்கு கொடுக்க மனமில்லை!

தற்போது, 'வெல்வோம் - 200' என்று தி.மு.க., முழங்கினாலும், களம் இப்போது நான்கு முனைப் போட்டியாக மாறியிருக்கிறது. தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளுடன் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என ஓட்டுகள் நான்காகப் பிரியும்போது, எந்த ஒரு கட்சியும் 35 சதவீத ஓட்டுகளை தாண்டுவது பெரும் சவாலாகவே இருக்கும்.

அவ்வகையில், 2026-ல் 'தொங்கு சட்டசபை' உருவாவதற்கான வாய்ப்புகளே அதிகம்!

அப்படி ஒரு நிலை வரும்போது, பல தசாப்தங்களாக மறுக்கப்பட்டு வந்த கூட்டணி ஆட்சி முறையை திராவிடக் கட்சிகள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர்.

கூட்டணிக் கட்சிகளின் உழைப்பை அறுவடை செய்துவிட்டு, அதிகாரத்தை மட்டும் தனியே அனுபவிக்கும் காலம், 2026-ல் முடிவுக்கு வரலாம்!

lll

வசதியை பெருக்கவா அரசியலுக்கு வந்தனர்? என் மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தங்களுக்கு ஆறு தொகுதிகள் கட்டாயம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வந்த நிலையில், தற்போது ஐந்து சீட்டுகளை ஒதுக் கியுள்ளது, தி.மு.க., தலைமை.

தி.மு.க., ஆதரவில் தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

உண்டியல் குலுக்கி கட்சியை நடத்தியவர்கள், இன்று, தி.மு.க., கொடுக்கும் நிதியை வைத்து கட்சி நடத்தும் அளவுக்கு தங்கள் அந்தஸ்தை உயர்த்தி உள்ளனர். உழைப்பாளர்களின் கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் அரசியல் வாயிலாக முதலாளிகளாக துடிக்கின்றனர் போலும்!

அதேபோன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை இலக்கில் தொகுதி கேட்டு, எட்டு தொகுதிகளை மனச் சுணக்கத்துடன் வாங்கியுள்ளார். இதில், கேட்ட தொகுதிகள் கிடைக்காததால், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி விட்டார்.

இவர்கள் எல்லாம் மக்களுக்கு சேவை செய்ய வந்தனரா, தங்களின் வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள வந்தனரா?

lll

தி.மு.க., ஆட்சி எதற்கு ? கே.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: 'விளாத்திகுளம் மாணவியின் மரணத்திற்கு தி.மு.க., அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்?' என்று கேட்டுள்ளார், நடிகர் எஸ்.வி.சேகர்.

தி.மு.க., அரசு பொறுப்பேற்காது என்றால், பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநில அரசுகளா பொறுப்பேற்கும் அல்லது திராவிட மாடல் முதல்வர் உலகத்திற்கே வழிகாட்டும் விதமாக ஆட்சி செலுத்துவதால், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் பொறுப்பேற்குமா?

முட்டுக் கொடுப்பதற்கும் ஓர் அளவு வேண்டாமா?

தான் வசிக்கும் தெருவிற்கு தன் தந்தையின் பெயரை தி.மு.க., அரசு வைத்தது என்பதற்காக, இப்படியா ஒவ்வொரு விஷயத்திற்கும் முட்டு கொடுப்பது?

தி.மு.க., நிர்வாகி ஞானசேகரனால் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளான போதும், தி.மு.க., பொதுக் கூட்டத்திலேயே பெண் காவலர் மீதான பாலியல் சீண்டல், பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி வீட்டில் வேலை செய்த பணிப்பெண் மீதான பாலியல் வன்முறை, கல்குவாரியை படம் எடுத்ததால், தனியார் தொலைக்காட்சி நிருபர்கள் மீது தி.மு.க., - எம்.எல்.ஏ., பழணியாண்டி கொலைவெறி தாக்குதல், கோவில் காவலர் அஜித்குமாரை போலீசார் கொடூரமாக தாக்கி கொன்றது, சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் மன்னனாக தி.மு.க., நிர்வாகி ஜாபர் சாதிக் இருந்தது...

இன்னும் பல ஆணவ கொலைகள், காவல் நிலைய மரணங்கள், கொலை - கொள்ளை, கஞ்சா போதைப் பொருட்கள் புழக்கம் என, எதற்குமே தி.மு.க., அரசு பொறுப்பேற்காது என்றால், பின் எதற்கு தமிழகத்திற்கு தி.மு.க., ஆட்சி?

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us