PUBLISHED ON : ஜன 30, 2024 12:00 AM
காங்.,கை கழற்றி விடும் கட்சிகள்!
என். வைகைவளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பா.ஜ.,விற்கு எதிரான ஓட்டுகளை ஒருங்கிணைத்தால் மட்டுமே, அக்கட்சியை வீழ்த்த முடியும் என்று உணர்ந்து, 28 எதிர்க்கட்சிகள் இடம் பெற்ற, 'இண்டியா' கூட்டணி உருவானது. ஆனால், அக்கூட்டணி லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பற்றி பேச துவங்கிய நிலையிலேயே ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது.
மேற்கு வங்கத்தில் மொத்தம், 42 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 2019 லோக்சபா தேர்தலில், இதில், இரண்டு இடங்களில் மட்டுமே காங்., வெற்றி பெற்றது. இந்த இரண்டு தொகுதிகளை மட்டும், 'இண்டியா' கூட்டணி சார்பில், காங்கிரசுக்கு ஒதுக்க முடியும் என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா கறாராக கூறியதை, காங்., ஏற்க மறுத்து விட்டது.
இதனால், கடுப்பான மம்தா, '42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்' என அதிரடியாக அறிவித்து விட்டார். இதேபோல, பஞ்சாப் மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவருமான, பகவந்த் சிங் மானும், அங்குள்ள 13 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டார். இதனால், அங்கும் காங்., கட்சி தனித்து விடப்பட்டுள்ளது.கேரளாவில், காங்கிரஸ் கட்சியை எதிர்த்தே, இடதுசாரிகள் அரசியல் நடத்துவதால், அம்மாநிலத்தில் இரு கட்சிகளும் தனித்தனியே நிற்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி கேட்கும் தொகுதிகளை மாநில கட்சிகள் ஒதுக்கீடு செய்யத் தயாராக இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. தமிழகத்தில் மட்டும் தான், முதல்வர் ஸ்டாலின் பெருந்தன்மையுடன் காங்கிரசுக்கு சில தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளார்.அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி, திறப்பு விழாவை வெற்றிகரமாக நடத்தியதன் வாயிலாக, பா.ஜ.,வின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்திருப்பதால், மூன்றாவது
முறையாக மோடி பிரதமராவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 'இண்டியா' கூட்டணியால், இதை தடுக்கவே
முடியாது என்பது தான் நிதர்சனம்.
ஆன்மிகம் கலந்த பொதுநல பணி!
கே.ராமநாதன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நமக்கு சொந்தமானதை சொந்த மாக்கிக் கொள்ள, 500 ஆண்டுகள் போராடியதன் விளைவாக கிடைத்த ராம ஜென்ம பூமியில், ஸ்ரீராமருக்கு அகில உலகமே வியக்கும் அளவிற்கு, பிரமாண்ட கோவில் எழுப்பி, அதில் இறையுருவை பிராண ப்ரதிஷ்டை செய்யும் உன்னத வைபவத்தை, உலகமே கொண்டாடி மகிழ்ந்தது.
ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய நாள் முதல் அதீத அர்ப்பணிப்பு உணர்வுடன், தினமும் அரிய செய்திகளுடன், பல வண்ண படங்களையும் வெளியிட்டு, வாசகர் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட, 'தினமலர்' நாளிதழின் அளப்பரிய பணி போற்றத்தக்கது.
அதிலும் இத்தொண்டிற்கு மகுடம் வைத்தாற்போல, 'வழுவழு' தாளில், வண்ணப் படங்களுடன் இணைப்பிதழாக, ராம ராஜ்ஜியம் அயோத்தியா ஸ்பெஷலாக வெளியிட்டதுடன், உன்னதமான ஸ்ரீராமர் பட்டாபிஷேக படத்தையும் வாசகர்களுக்கு அளித்து வியக்க வைத்த, 'தினமலர்'
நாளிதழின் பாங்கை பாராட்டியே தீர வேண்டும்.அயோத்திக்கு நேரில் சென்று, விழாவை தரிசிக்க பாக்கியம் இல்லாதோர் கூட, மனம் குளிரும் வகையில், விழாவில் நேரில் பங்கேற்றது போன்ற திருப்தியையும், மனநிறைவையும்
அள்ளித் தந்த, 'தினமலர்' நாளிதழை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இந்த கைங்கரியம் வெகு சிறப்பாக அமைந்திட உறுதுணையாக இருந்து செயல்பட்ட, 'தினமலர்' நாளிதழுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடமையுணர்வுடன் கூடிய, தங்கள் ஆன்மிகம் கலந்த பொதுநலப் பணி மேலும் தொடர வாழ்த்துகிறோம்.
தெற்கு ரயில்வேயின் தவறான நடவடிக்கை!
கே.ராமசுப்ரமணியன், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், திருநெல்வேலியில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், 'ஏசி' மூன்றாவது வகுப்பில் பயணித்து, தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கினேன். என் டிக்கெட்டை, எழும்பூர் வரையே வாங்கியிருந்தேன்.
தாம்பரத்தில் இருந்து, பழவந்தாங்கல் போக மின்சார ரயிலில் பயணித்தேன். டிக்கெட் பரிசோதகர் என்னிடம் வந்து, 'நீங்கள் பயணம் செய்த -நெல்லை - எழும்பூர் ரயில் டிக்கெட், இந்த ரயிலுக்கு செல்லாது. இதற்கு, தனியாக டிக்கெட் வாங்கியிருக்க வேண்டும். எனவே, அபராதம் கட்ட வேண்டும்' எனக்
கேட்டார்.நான் எவ்வளவோ எடுத்து கூறியும், அதை ஏற்க மறுத்து, இறுதியில் என்னிடம் அபராத தொகையை வசூலித்த பிறகே சென்றார். இது என்ன நியாயம்?நான் பல முறை மத்திய ரயில்வேயில், மும்பையின் விக்டோரியா டெர்மினஸ் எனப்படும் வி.டி., வரை டிக்கெட் வாங்கி, கல்யாணில் இறங்கி, மின்சார ரயிலில் அதே டிக்கெட்டில் பயணித்து முலுண்டில் இறங்கியுள்ளேன். அங்குள்ள டிக்கெட் பரிசோதர்கள் எந்த மறுப்பும் தெரிவித்தது இல்லை.
ஆனால், தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் பலர் என்னை போல பாதிக்கப்படுகின்றனர். தாம்பரத்தில், அதிகாலை 4:00 முதல் 8:00 மணி வரை பல தென்மாவட்ட ரயில்கள் வருகின்றன. இவை பெரும்பாலும், 7வது நடைமேடையில் தான் நிற்கின்றன.
இங்கு இறங்கி, பெட்டி, படுக்கைகளோடு பயணியர், ரயில் நிலையத்துக்கு வெளியில் சென்று மின்சார ரயிலுக்கு டிக்கெட் வாங்கி, திரும்பி வந்து மின்சார ரயிலில் ஏற முடியுமா. வயதானவர்கள், கை குழந்தைகளுடன் வருவோரின் கதி என்ன? இப்பிரச்னைக்கு தெற்கு ரயில்வே அதிகாரிகள் நிரந்தரமான தீர்வை விரைந்து காண வேண்டும்.
'பல்டி' குமார்என்பது சரிதான்!
எஸ்.பிரசன்னா, சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'அரசியல்வாதிகளுக்கு ஒரு கொள்கையும் இல்லை ; ஒரு மண்ணுமில்லை' என்பது மக்கள் அறிந்ததே . ஆனால், ஒரு தலைவர், அதுவும் முதல்வர் ஆக இருப்பவர், இத்தனை முறை 'பல்டி' அடிப்பார் என்பது, உலகில் காணாத ஒன்று.
லாலுவை ஒழிக்க பா.ஜ.,விற்கு; பா.ஜ.,வை ஒழிக்க லாலு; மீண்டும் லாலுவை ஒழிக்க பா.ஜ., எனச் செல்கிறார்.தேர்தலுக்கு தேர்தல் அணி பச்சோந்தியாகும் இவரை விட, ஊழல் கறை இருந்தாலும், நம்மூர் அரசியல்வாதிகள்
எவ்வளவோ மேல்!