PUBLISHED ON : ஜூலை 26, 2011 12:00 AM

தாஜா செய்தது போதும்!
சி.என்.முத்துஸ்வாமி சாஸ்திரி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: சமீபத்தில், 'லஞ்சம் அளிப்பதை சட்டப்பூர்வாமக்கி விட்டால், குற்றம் செய்வது குறைந்துவிடும்' என, இந்தியாவின் பெரிய கம்பெனியின் நிர்வாகி ஒருவர் கூறியிருக்கிறார்.
சட்டம் தான் இந்தியாவை ஓரளவு காப்பாற்றிக் கொண்டு வருகிறது. அதையும், இனி தவறு செய்வதற்கு ஆதரவாக மாற்றிவிட்டால், நாடு எப்படி உருப்படும்? சட்டத்தை மேலும் கடுமை ஆக்கி, லஞ்சம் பெறுபவர்களை தண்டிக்க வேண்டுமே தவிர, அதை சட்டப்பூர்வமாக்கக்கூடாது.
சமீபத்தில், மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில், அப்பாவி மக்கள் பலர் உயிர் இழந்தனர். காங்கிரஸ் கட்சியில், அடுத்த பிரதமராக அடையாளம் காட்டப்படும் ராகுலும், அதைப்பற்றி கருத்து தெரிவித்தபோது, 'எதிர்காலத்தில், பயங்கரவாத்தை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது' என்றார்.
'இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்' என, கடுமைகாட்ட வேண்டிய பயங்கரவாதச் செயலுக்கு, இளைஞரான இவர், இப்படி சோர்வடையும் விதமாக கருத்து தெரிவிக்கிறார். ஆனால், இவரின் பாட்டி முன்னாள் பிரதமர் இந்திரா, பயங்கரவாதத்தை துணிவுடன் எதிர்கொண்டவர். அதை அடக்க, கடும் நடவடிக்கைகளை எடுத்தவர். இவரின் தந்தை ராஜிவும், பயங்வாதத்தைக் கடுமையாக எதிர்த்தவர்.அமெரிக்காவில் இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்டவுடன், அதன் ஆணிவேரை தேடிப்பிடித்து, அமெரிக்கா அழிக்கவில்லையா? இந்தியா மட்டும் ஏன் தவறுகளையும், வன்முறைகளையும் தட்டிக்கொடுத்தும், தாஜா செய்தும் காலம் கடத்த வேண்டும்?
நினைத்தால்தலை சுற்றுகிறது:அ.குணா, புவனகிரியிலிருந்து எழுதுகிறார்: சமீபத்திய புள்ளி விவரப்படி, நம் நாட்டின் மக்கள் தொகை, 121 கோடி. இதில், 40 சதவீத மக்கள், கிராமப்புறங்களில் வசிப்பதாக கூறப்படுகிறது. அன்று, 'நம் ஆத்மாக்கள் கிராமங்களில் வசிக்கின்றன' என, காந்தி கூறினார். ஆனால், இன்று அந்த ஆத்மாக்கள், வறுமையில் வசிக்கின்றன.நம் நாட்டில் ஒருபக்கம், ஊழல் மூலம் சம்பாதித்த பல நூறு கோடி ரூபாயை, சுவிஸ் வங்கிகளில் சேமிக்கும் ஹசன் அலி போன்ற பலர் உள்ளனர். மறு
பக்கம், 30 கோடி மக்கள், வறுமைக் கோட்டுக்கு கீழும், நாள் ஒன்றுக்கு, 10 ரூபாய் கூட வருமானம் இல்லாமலும் வசிக்கின்றனர்.
உலக நாடுகளில், 73 இடங்களில், இந்த கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதில், நம்மவர்களின் பணமே, முதன்மையானதாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. ஹசன் அலியே, 3,600 கோடி ரூபாயை பதுக்கியுள்ளார் எனில், 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்தவர்கள், எத்தனை ஆயிரம் கோடி ரூபாயை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பர் என்று நினைத்தாலே, தலை சுற்றுகிறது.
இப்படி, நம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டிய பணத்தை, சுவிஸ் வங்கிகளில் முடக்குபவர்கள், கொலைக் குற்றவாளிகளை விட, அதிகம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால், அந்த ஊழல்வாதிகளை சிறைகளில் அடைத்தால், அந்த சிறைகளையே ஊழல் புரியாக மாற்றி விடுகின்றனர். அதை தான், கல்மாடி விவகாரத்தில் நாம் பார்த்தோம்.சீனா போன்ற நாடுகளில், ஊழல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்படுகிறது. அதுபோல், இங்கும் கடுமையான தண்டனை கொடுத்தால் தான், இந்த ஹசன் அலி போன்றோர் குற்றம் செய்ய அஞ்சுவர். இல்லையெனில், விரைவில் நம் நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையில், 50 சதவீதமாக உயர்ந்து விடும்.
தெருவுக்கு பத்து'டாஸ்மாக்' கடைகள்:வ.ப.நாராயணன், மடிப்பாக்கம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஒரு பக்கம், தாலிக்கு தங்கம் இலவசமாக கொடுத்துவிட்டு, இன்னொரு புறம், 'டாஸ்மாக்' கடைகளை மூடாமல், செயல்படவிடுவதில் எவ்விதப் பலனும் இல்லை.ஏனென்றால், முதல்வர் கொடுக்கும் தங்கம், மனைவியின் கழுத்தில் இருப்பதை விட, வட்டிக்கடையில் தான் நீண்ட நாட்கள் இருக்கும். தாலியை அடகு வைத்து கணவன் தினமும் குடித்துவிட்டு வருவதால், குடும்பச் செலவிற்காக தாலியை அடகு வைப்பர் மனைவிமார்கள்.
இது தான், 70 சதவீத ஏழைக்குடும்பங்களில், அன்றாடம் நடந்து வருகிறது.எத்தனை ஏழைப்பெண்களின் கழுத்தில் தங்கத்தாலி மின்னுகிறது? இதற்கெல்லாம் மூலக்காரணம், தெருவுக்கு பத்து, 'டாஸ்மாக்' கடைகள் இருப்பது தான்.சில நாட்களுக்கு முன், 'டாஸ்மாக்' பார் அருகில், பள்ளி மாணவர் சிலர், பீர் பாட்டிலுடன் சென்ற காட்சியை கண்டதும் மனம் பகீர் என்றது. மீசை கூட முளைக்காத பள்ளி மாணவன் கையில் மதுபாட்டில். எங்கே போகிறது நம் சமுதாயம்?பள்ளி, கல்லூரி மாணவன் முதல், அனைத்து தரப்பினரையும் குடிகாரர்களாக்கித்தான், அரசு வருமானம் ஈட்ட வேண்டுமா? அரசு, வருவாயை பெருக்கிக் கொள்ள வேறு நல்ல வழியே கிடையாதா?
ஆட்சிகள் மாறலாம் :ஆனால்...டி.வி.ராமமூர்த்தி, தலைமை ஆசிரியர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: சமச்சீர் கல்வி குறித்து, சென்னை ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. பெரும்பாலான கல்வியாளர், ஆசிரியர், பெற்றோர், மாணவர் இதை ஆதரிக்கின்றனர்.முந்தைய அரசின் செயல் திட்டம் அனைத்தையும் எதிர்க்கவும், முடக்கவும் முற்படும் நிலையில், கல்வித் துறையிலும் தலையிடுவது சரியல்ல. இதில் ஈகோவிற்கு இடமில்லை. விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்ட இத்தீர்ப்பு, நீதித்துறையின் சரியான, நியாயமான வழிகாட்டல். அரசியல் அமைப்புச் சட்டத்திற்க உட்பட்டது.ஆட்சி மாறலாம், அரசியல்வாதி மாறலாம். ஆயினும் கல்விவளம் நிரந்தரமானது. எனவே, தரமான கல்வி அளிப்பதில், அரசியல் தலையீடு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
ஏன் கையைஏந்த வேண்டும்?கலை நன்மணி மகிழ்நன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'சூரிய மின் சக்திக்கு முதலீடு தாருங்கள்' என, அமெரிக்க வெளி உறவுத் துறை அமைச்சர் ஹிலாரியிடம், தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதற்காக பத்து பூங்காக்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.கறுப்புப் பணம் விவகாரத்தை, மத்திய அரசு தான் கவனிக்க வேண்டும் என்கின்றனர். உள்ளூரில் இவர்கள் விதிகளை மீறி சேர்த்த சொத்துக்களும் கறுப்புப் பணம் தானே?அப்படி, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சேர்த்து வைத்திருக்கும் கறுப்புப் பணத்தில், பாதியைப் பிடுங்கினாலே போதும். ஆண்டுக்கு இரண்டு பூங்காக்களை அரசே அமைக்கலாம். 'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...' என்ற, எம்.ஜி.ஆரின் பாடல் எவ்வளவு கருத்தாழம் கொண்டது?