sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

இது உங்கள் இடம்

/

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்


PUBLISHED ON : அக் 07, 2011 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 07, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆள் பிடிக்க அலைந்த பரிதாபம்! அ.ரா.பார்த்தசாரதி, வேளச்சேரி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: மதுரையில் நடந்த வேட்பாளர் தேர்வில், நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த ராமதாஸ், தன்னுடைய கட்சிக்காரர்களுக்கும், ஓட்டல், 'ரூம்பாய்'க்கும் வித்தியாசம் தெரியாமல், 'நீ நிற்கிறாயா?' என கேட்கும் நிலைக்கு வந்துவிட்டதை நினைக்கும்போது வேதனையாகத்தான் இருக்கிறது.

ஒவ்வொரு கட்சியிலும், வேட்பு மனுக்களை வாங்க, 'நீ முந்தி, நான் முந்தி' என்று போட்டி போடும் போது, ராமதாஸ் மட்டுமல்ல, இன்னும் சில கட்சிகளும், வேட்பாளர்களுக்கு ஆள் பிடிக்க அலைந்து கொண்டிருந்த தகவலும் வியப்பாக உள்ளது. மக்கள், தங்களை முழுக்க முழுக்க ஒதுக்கி விட்டனர் என்பதை, சென்ற சட்டசபைத் தேர்தல், பல கட்சிகளுக்கு புரியவைத்து விட்டது. படிப்பினையை பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டு, மறுபடியும் தங்களைத் தேர்ந்தெடுக்க, மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இவர்கள் யோசிக்க வேண்டும். அதைவிடுத்து, எப்படியாவது ஒரு பதவி பெற்று விடவேண்டும்; அதை வைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாரிச் சுருட்ட வேண்டும் என திட்டமிடுவது அழகல்ல.தேர்தலில் நிற்பதற்கே கட்சித் தொண்டர்கள் தயக்கம் காட்டுகின்றனர் என தெரிந்த பிறகும், கட்சித் தலைமை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? இதுநாள் வரை, பிற கட்சிகளின் முதுகில் சவாரி செய்துவிட்டு, இன்று, தனித்துப் போட்டி என்றால், அடுத்தவர் தயவில் பதவி சுகம் அனுபவித்த கட்சிகளுக்கு, பா.ம.க., மட்டுமல்ல, இன்னும் சில தேசியக் கட்சிகளும் தயங்கித்தான் நிற்கின்றன. இந்தத் தயக்கம், கட்சிகளுக்கு மட்டுமல்ல, பொது மக்களுக்கும் ஒரு தெளிவைக் கொடுத்து விடும் என்பது, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வரும்போது நிச்சயமாகத் தெரிந்துவிடும்.

நைந்துபோன சோறு... என்.சிவசுந்தர பாரதி, காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: வாச்சாத்தியில் நடந்த சம்பவம் வெளியில் தெரிந்து விட்டது; இன்னும், தெரியாத இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.இந்தியாவின் தலைவிதி தீர்ப்பு தாமதமானதாகவே அமைகிறது. உடனுக்குடன் தீர்ப்பு வழங்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களின், மனமாவது ஆறுதல் அடையும். குற்றம் செய்தவர்களுக்கும், அத்துறையில் உள்ள மற்ற மிருகங்களுக்கும் ஒரு பாடமாகவாவது அமையும். ஆனால், இப்போது சுடுசோறு, பழைய சோறாகி, நைந்தும் போய்விட்டது. நிவாரண நிதியும் போதாது. குற்றவாளிகளுக்கு அபராதமும் போதாது; அவர்கள் அனைவரையும் பணி நீக்கமும் செய்து, ஓய்வூதியமாக சல்லிக்காசும் கொடுக்கக் கூடாது. அரசு, எதை நினைத்தாலும் சாதிக்கலாம்.

பட்டினி சாவு நிச்சயம்! ஜி.எஸ்.ராஜன், வேளச்சேரி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக, அன்னா ஹசாரே போராடி வருவதும், உண்ணாவிரதம் இருப்பதும், மத்திய அரசுக்கு கிலியை ஏற்படுத்தி வருகிறது. அவரின் நடவடிக்கைகள் சில, விமர்சனத்திற்கு உட்பட்டபோதிலும், அவர் நோக்கம் சரியானது என்றே கூறவேண்டும்.நாள்தோறும் எகிறி வரும் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக போராடவும், உண்ணாவிரதம் இருக்கவும் ஹசாரே முன் வரவேண்டும். விலைவாசி விண்ணை முட்டி வருவதால், நடுத்தர மக்கள், நாய் படாத பாடுபட்டு வருகின்றனர். வரவுக்கு மீறிய செலவுகள், தொடர்ந்து அதிகரித்து வருவதால், சாமானிய மக்கள், ஒரு வேளை சோற்றுக்கே, 'சிங்கி' அடிக்க வேண்டிய அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில், கச்சாப் பொருள் விலை பெருமளவு சரிவடைந்த போதிலும், இந்தியாவில், எரிபொருளுக்கான விலை கூட்டப்படுவது, வேறு எந்த நாட்டிலும் காணப்படாத விந்தையான நடைமுறை. ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, விலையை உயர்த்துவதும், அதை நியாயப்படுத்துவதையும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. எரிபொருளுக்கு, அளவுக்கு அதிகமான வரியை போட்டு விட்டு, மானியத்தையும் அளிப்பதாகக் கூறுவது, மக்களை வடிகட்டிய முட்டாளாக்கும் செயல். விலைவாசி உயர்வைக் குறைக்க, ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகளால், எந்த பலனும் இல்லை. மாறாக, கூடுதல் சுமைகளும், செலவினங்களும் ஏற்படுகிறதே தவிர, மக்களுக்கு நிம்மதி உண்டாகவில்லை. இதே நிலை நீடித்தால், சாப்பாட்டுக்கே வழியில்லாமல் நித்தம் உண்ணாவிரதம் இருந்து, சாக வேண்டியது தான்.

வெள்ளையும் சொள்ளையுமாக... வெ.பாலன், கோபிசெட்டி பாளையத்திலிருந்து எழுதுகிறார்: இந்த உள்ளாட்சித்தேர்தலால், மக்களுக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது? உள்ளாட்சிப் பதவிகளுக்கு, ஐந்து லட்சம் பேர் போட்டியிடுவதிலிருந்தே, 'தேச சேவையே தமது லட்சியம்' என்ற காந்தியின் உயர் கொள்கைகளை எவ்வளவு தூரம் பின்பற்றத் தயாராக இருக்கின்றனர் என்பதை நினைக்கும் போது, பெருமை பொங்குகிறது. இருக்காதா பின்னே... ஐந்தாண்டு, 'கடுமையான உழைப்பில்' பொலிரோ, ஸ்கார்ப்பியோ போன்ற, 'ஏழை எளியோர்' பயன்படுத்தும் கார்தான் வாங்கலாம். ஏதோ பத்து கிரவுண்டில், ஒரு குடிசை மாதிரி பங்களா கட்டலாம். குடிநீர் குழாயிலிருந்து, கான்ட்ராக்ட் எடுக்கப்படும் பணம் வரை எல்லாவற்றிலும் தானாகவே, 'சைடு கமிஷன்' வரும்படி பார்த்துக் கொள்ளலாம். ஆஹா... என்னே இவரது தேசப்பற்று என்பதுபோல், காரில் பின்புறம் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஐம்பது சட்டை, ஐம்பது வேட்டிகளிலிருந்து எடுத்து உடுத்திக் கொண்டு, வெள்ளையும் சொள்ளையுமாக பளிச்சென்று போகலாம். ஆக, இவையெல்லாம் செய்வதற்காகத்தான், பதவி ஆசை பிடித்து அலைகிறோம். தேசப்பற்று, தேச சேவை மனித நேயம், சமுதாய, சமூக வளர்ச்சி இன்ன பிறவெல்லாம் அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு என்று சொல்வது சாலப் பொருந்தும்!

அட தேவுடா! திருமலைராஜன், ராஜகீழ்ப்பாக்கம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'சி.பி.ஐ., நிறுவனம், ஒரு சுதந்திரமான அமைப்பு. சிதம்பரத்தை விசாரிக்கச் சொல்லி, கோர்ட் எங்களைக் கட்டாயப்படுத்த முடியாது' என்ற, சி.பி.ஐ.,யின் வீராவேச வாதம், இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை. சுதந்திரமான அமைப்பு என்பதால் தான், 'குட்ரோச்சி'யை சுதந்திரமாக விட்டு வைத்திருக்கின்றனரோ? போபர்ஸ் வழக்கில், எந்த அளவு சுதந்திரமாக செயல்பட்டனர் என்பதை நாடே அறியும். மேலும், சிதம்பரம் பற்றிய குறிப்பில், 'நிதியமைச்சர் பிரணாப் கூறியிருப்பது எதுவும் புதிதாக இல்லை' என்ற அவர்களது வாதமும், வேடிக்கையானதே! ஒரு முக்கிய அமைச்சர் நினைத்திருந்தால், '2ஜி ஊழலே நிகழாதவாறு தடுத்திருக்கலாம்' என, மற்றொரு முக்கிய அமைச்சர் கூறியிருப்பதும் ஒன்றுமில்லையா? அட, தேவுடா!








      Dinamalar
      Follow us