sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

மோதலை தவிர்ப்பது நல்லது!

/

மோதலை தவிர்ப்பது நல்லது!

மோதலை தவிர்ப்பது நல்லது!

மோதலை தவிர்ப்பது நல்லது!

2


PUBLISHED ON : ஜூலை 22, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 22, 2025 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பிறந்த நாளையொட்டி, அக்கட்சி மீனவர் அணியினர் தங்கள் படகுகளில், சமீபத்தில் கடலில் பேரணி சென்றனர். விளைவு, த.வெ.க., கட்சியினரின் படகுகளுக்கு மண்ணெண்ணெய் மானியத்தை நிறுத்தி, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது, தமிழக அரசு!

இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டதுடன், தன் பணியை முடித்துக் கொண்டார், விஜய்.

இதுபோன்று தான், புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பரந்துார் மக்கள் போராடியபோது, ஒருநாள் கால்ஷீட்டில் ஷுட்டிங் போவது போல், அங்கே சென்று, 'இங்கு விமான நிலையம் வர விடமாட்டேன்...' என்று சினிமா வசனம் பேசினார், விஜய். அதன்பின், அதுகுறித்து மறந்தும் பேசவில்லை.

இப்போது, விவசாயிகள் சிலர் தங்கள் நிலங்களுக்கு ஈடாக, அரசு கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டுள்ளனர். இனி, மற்ற விவசாயிகளும், வேறு வழியில்லாமல் பணத்தை பெற்று, தங்கள் நிலங்களை தாரை வார்த்து விடுவர்.

அப்புறம் என்ன... 'விமான நிலையம் வரவிட மாட்டேன்' என்று சூளுரைத்து, வீட்டில் குப்புற படுத்துக் கொண்டு, முதல்வர் கனவு காணும் விஜய், பரந்துார் விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு பறப்பார்.

இப்படி அரசியல் தெளிவும், கொள்கை பிடிப்பும் இல்லாதவராக உள்ள விஜய், அரசியலில் எப்படி தனித்து நின்று வெற்றி பெற முடியும்?

நாம் தமிழர் கட்சியின் நிலையோ, 'என் வழி தனி வழி' என்ற கொள்கையாக உள்ளது.

தனிமரம் தோப்பாகாது என்பதை சீமான் உணரப்போவதும் இல்லை; அக்கட்சி ஆட்சிப் பீடத்தில் ஏறப்போவதுமில்லை.

அதேபோன்று தான், தி.மு.க., என்னதான் தமக்கு கூட்டணி பலம் இருப்பது போல் காட்டிக் கொண்டாலும், உண்மையில், தமாசு நடிகர் வடிவேல் காமெடி போல், 'பில்டிங் ஸ்ட்ராங்; பேஸ் மட்டம் வீக்' என்ற நிலையில் தான் அக்கட்சி உள்ளது.

இதை அ.தி.மு.க., - பா.ஜ., புரிந்து கொண்டு, முட்டல், மோதல்களை தவிர்த்து வெற்றியை மட்டுமே நோக்கமாக கொண்டு வேலை செய்தால், வெல்வது நிச்சயம்!



விபூதி பூசுவதை கண்காணிப்பதா கல்வி அமைச்சரின் வேலை? சி.சிவ ஆனந்தன், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ், 'மாணவர்களிடையே ஜாதி, மத பாகுபாடு இருக்கக் கூடாது என்பதற்காக தான், சீருடை திட்டத்தையே காமராஜர் கொண்டு வந்தார்...' என்று கூறி, மாணவர்கள் விபூதி பூச, கைகளில் கயிறு கட்ட எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை, பெரம்பூரில் உள்ள ஜமாலியா மேல்நிலைப் பள்ளியில் நான் படிக்கும் காலத்தில், சனிக்கிழமைகளில் கலர் ஆடைகள் அணிந்து பள்ளி வரலாம்.

நான் ஏழாம் வகுப்பு படிக்கையில், ஒருநாள் எங்கள் வகுப்பாசிரியர், 'இனி சனிக்கிழமையும் சீருடையோடு தான் பள்ளி வரவேண்டும்' என உத்தரவிட்டார்.

'பிற வகுப்பு மாணவர்கள் கலர் ஆடைகள் அணியும்போது, நாங்கள் மட்டும் ஏன் சீருடை அணிய வேண்டும்?' என்று பலமுறை கேட்டும் ஆசிரியர் பதில் சொல்லவில்லை. பின் ஒருநாள் அதற்கான காரணத்தை கூறினார்.

எங்கள் வகுப்பு மாணவன் ஒருவன், மாற்று உடை இல்லாததால், எல்லா நாட்களும் சீருடை அணிந்து வந்துள்ளான்.

மற்றொரு மாணவனோ, தன்னிடம் இருக்கும் ஒரே கலர் ஆடையை சனிக்கிழமை தோறும் அணிந்து வந்துள்ளான். இதை ஆசிரியர் கவனித்துள்ளார்.

அன்று அந்த இரு மாணவர்களும் பள்ளி வராத நிலையில், இதைக் கூறி, 'பள்ளிப் பருவத்தில் வறுமை கொடியது. அவர்களுக்காக, உங்கள் ஆசையை தியாகம் செய்ய வேண்டும்' என்றார்.

ஆசிரியரின் வார்த்தையை அந்த கல்வியாண்டு இறுதிவரை கடைப்பிடித்தோம்.

ஆனால், முதல்வர் தொகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த என் மகனுக்கு, தொழில் நஷ்டம் காரணமாக பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை.

'பள்ளி கட்டணம் பின்பு கட்டுகிறோம்; அதுவரை படிக்க அனுமதியுங்கள். பத்தாம் வகுப்பு என்பதால், வேறு பள்ளிகளில் இடம் கிடைக்காது...' என்று கேட்டுக் கொள்ளவே, பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால்,'சீருடை, புத்தகம் தர மாட்டோம்' என்றனர்.

'அதை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். சீருடை அணிய மட்டும் அனுமதி கொடுங்கள்' என்று கேட்டபோது, மறுத்து விட்டனர்.

பின்பு என் மகன் அவனாகவே பிரதமர், தமிழக முதல்வர், கவர்னர், கல்வி அமைச்சர் என, அனைவருக்கும் கடிதம் அனுப்பினான்... சீருடை மட்டும் கொடுங்கள் என!

அந்த பிஞ்சு மனம் எந்தளவுக்கு நொந்து போயிருக்கும்!

அவனுக்கு சீருடை கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அலுவலகம் இருமுறை பள்ளிக் கல்வித்துறைக்கு அறிவுறுத்தியது; முதல்வர் அலுவலகமோ பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும் என்றது. ஆனால், பள்ளிக் கல்வித்துறை கடைசி வரை எட்டிப் பார்க்கவில்லை. அவனுக்கு சீருடையும் கிடைக்கவில்லை.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் ஆண்டு முழுக்க, ஒரு மாணவன் மட்டும் சீருடை அணியாமல் சென்றபோது, அவன் மனம் எவ்வளது துாரம் நொந்து இருக்கும்?

அதேநேரம், என் மகன் பொதுத்தேர்வில், 453 மதிப்பெண் பெற்றபோது, அவனை புகைப்படம் எடுத்து பொதுவெளியில் விளம்பரம் தேடிக்கொண்டது, அப்பள்ளி.

முந்தைய பழனிசாமி ஆட்சியில் கட்டண பாக்கிக்காக டிசி, சீருடை தர பள்ளிகள் மறுக்கக்கூடாது என உத்தரவு போட்டு இருந்தது.

இப்போது அந்த உத்தரவு எங்கே போனது?

உடையால் மாணவர்களுக்குள் ஏற்ற தாழ்வு வந்து விடக் கூடாது என்பதற்கு தான் சீருடையே வந்தது. ஆனால், கட்டணத்தை முன்னிறுத்தி இதுபோன்று நடக்கும் அவலத்திற்கு பள்ளிக் கல்வித்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

நான் படித்தது, இஸ்லாமிய நிர்வாகம் நடத்திய பள்ளி தான் என்றாலும், விபூதி பூசக்கூடாது, கயிறு கட்டக்கூடாது என சொன்னதில்லை.

இதனால், மாணவர்களிடையே எந்த வேறுபாடும் எழுந்ததில்லை.

ஆனால், விபூதி பூசுவது, கயிறு கட்டுவது எல்லாம் மத மோதல்களை ஏற்படுத்தும் என்று கல்வி அமைச்சர் கதை சொல்கிறார்.

அமைச்சரின் வேலை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை தடுப்பதும், பள்ளிகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதும் தானே தவிர, மாணவர்கள் விபூதி பூசுகின்றனரா, கயிறு கட்டுகின்றனரா என்பதை கண்காணிப்பது அல்ல!








      Dinamalar
      Follow us