/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
பைத்தியத்தை ஒதுக்கி வைப்பது நல்லது!
/
பைத்தியத்தை ஒதுக்கி வைப்பது நல்லது!
PUBLISHED ON : ஆக 19, 2025 12:00 AM

ஆர்.மகேசன், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ராமர் குறித்து அவதுாறாகப் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார், சினிமா பாடலாசிரியர் வைரமுத்து.
ஆண்டாள் குறித்து இழிவாகப் பேசிய நாத்திகரான வைரமுத்துவுக்கு, ஆழ்வார் ஆய்வு மய்யம் கம்பன் விருது வழங்க முன்வந்ததே அபத்தமான செயல். தர்மபுரி ஆதீனத்துக்கு ஈ.வெ.ரா., விருது வழங்குவதைப்போல் அல்லவா இருக்கிறது இது!
'யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல் பூமியிலே யாங்கணுமே பிறந்ததில்லை' என்று கம்பனை முதன்மைப் படுத்தி பாடியுள்ளார் பாரதியார்.
அத்தகைய கம்பர் படைத்த, காலத்தால் அழியாத காவியமான ராமாயணத்தையும், ராமரையும் இழிவுபடுத்தி வரும் திராவிடக் கும்பலின் அடிவருடியான வைரமுத்துவுக்கு, கம்பன் விருது வழங்கியது, அந்த கம்பனையே இழிவுபடுத்துவதுபோல் உள்ளது.
'விடிகாலை விண்ணழகு; விடியும் வரை பெண்ணழகு'ன்னு ஆபாசமாக பாடல் எழுதும் வைரமுத்துவிடம், நாகரிகமான வார்த்தைகளை எதிர்பார்க்க முடியாது தான். அதற்காக, இப்படியா கடவுளை கொச்சைப்படுத்தி பேசுவது?
குற்றவாளியான ராமன், புத்திசுவாதீனம் இல்லாத காரணத்தால், இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 84-ஐ பயன்படுத்தி தண்டனையிலிருந்து தப்பிவிட்டானாம். ஆஹா... என்ன அருமையான கண்டுபிடிப்பு!
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பிறரை இழிவுபடுத்தி பேசினால், இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 499, 500-ன்படி என்ன தண்டனை என்பது வைரமுத்துவுக்கு தெரியுமா?
ராமருடைய ஆட்சிக்காலத்தில் இப்படிப் பேசியிருந்தால், இந்த சட்டப்பிரிவின்படி, 300 கசையடி கிடைத்திருக்கும். ஆனால், தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி என்பதால், ஹிந்து கடவுளை இழிவுபடுத்தி பேசும் வைரமுத்துவுக்கு வெகுமதிதான் கிடைக்கும்.
'அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் ஆயுள் வளர்க்கும் ஆட்டுப்பாலுங்க' என்று ஆட்டுப்பாலின் பெருமையை எழுதிய இவர் தான், மற்றொரு பாடலில், 'ஆட்டுப்பால் குடிச்சா அறிவு அழிஞ்சு போகுமுன்னு' என்று உளறியுள்ளார்.
இதிலிருந்து தெரியவில்லையா... புத்தி சுவாதீனம் இல்லாதவர் யார் என்று!
பைத்தியக்காரன், தன்னைத் தவிர உலகில் உள்ள அனைவரையும் பைத்தியம் என்பான். அதுபோன்று தான் வைரமுத்துவும்! எனவே, பைத்தியத்தை ஒதுக்கி வைப்பது நல்லது!
**********
ஜீவகாருண்யம் காணாமல் போய்விட்டதா? எம்.ராஜா, கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தெரு நாய்களால் பொது மக்களுக்கு ஏற்படும்
பாதிப்புகள் குறித்த பிரச்னையில், உச்ச நீதிமன்றம் அருமையான தீர்ப்பை
வழங்கியுள்ளது. அதேநேரம், இத்தீர்ப்புக்கு வழக்கம்போல் காங்., - எம்.பி.,
ராகுல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு
முன், இப்போது இருப்பது போல் தெருக்களில் நாய் தொல்லை இருந்ததில்லை.
நாய்களை கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு, விலங்கு நல ஆர்வலர்கள்
என்ற போர்வையில் சிலரும், பா.ஜ., முன்னாள் எம்.பி., யுமான மேனகாவும்
நீதிமன்றத்தில் தடை வாங்கினர்.
இதனால், நாய்களின் பெருக்கம்
அதிகரித்து, சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை பாதிக்கப்படுகின்றனர்.
இன்னும் சிலர் நாய்க்கடியால் மரணம் அடைகின்றனர்.
இதில், வீட்டில்
நாய் வளர்ப்போர் அவைகளுக்கு தடுப்பூசி போடா மல், தெருவில் விட்டு
விடுகின்றனர். அவை, பாதசாரிகளை பதம் பார்த்து விடுகின்றன.
'வாயில்லா ஜீவன்களை கொல்லக்கூடாது' என்று விலங்கு நல ஆர்வலர்கள் கொடி
பிடிக்கின்றனர். நாய் மட்டும் தான் வாயில்லா ஜீவனா? ஆடு, மாடு, கோழி, மீன்,
காடை, கவுதாரின்னு எல்லாமே வாயில்லா ஜீவன்கள் தானே... அவற்றை பாதுகாக்க
இவர்கள் ஏன் நீதி மன்றம் செல்லவில்லை? கறிக்கடை, மீன் மார்க்கெட்டு களை
மூடச்சொல்லி போராடவில்லை?
'கொன்றால் பாவம்; தின்றால் போச்சு' என்ற ரீதியில் அவற்றை கொன்று புசிக்கும் போது, ஜீவ காருண்யம் காணாமல் போய்விட்டதா?
எனவே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்து மாநில அரசுகளும் மதித்து,
உடனடியாக, தெருநாய்கள் பெருக்கத்தினை கட்டுப்படுத்த வேண்டும்!
**********
திருமாவளவன் பேசலாமா ? எஸ்.செபஸ்டின், சிவகாசியில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: 'திராவிட இயக்கத்திற்குள் பார்ப் பனியத்தை புகுத்தியவர்,
எம்.ஜி.ஆர்.,' எனக் கூறியுள்ளார், வி.சி., தலைவர் திருமாவளவன்.
ஜெயலலிதாவை மனதில் வைத்துதான் இப்படி பேசியுள்ளார்.
ஹிந்து ஆலயங்களுக்குள் பட்டியலின மக்கள் பிரவேசிக்க தடை இருந்த காலத்தில்,
ஆலய நுழைவு போராட்டத்தை காந்திஜி அறிவித்தவுடன், 1939, ஜூலை 8ம் தேதி
அப்போராட்டத்தை முன்னின்று நடத்தி, பட்டியலின மக்களை மதுரை மீனாட்சி அம்மன்
ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றவரே வைத்தியநாத அய்யர் எனும் பிராமணர்
தான்!
அத்துடன், 1967ல் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து,
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் அமர உதவியவர், ராஜாஜி என்ற பிராமணர்.
அப்படிப் பார்த்தால், திராவிடத்திற்குள் பார்ப்பனியத்தை இணைத்தவர்
அண்ணாதுரை.
ஜெயலலிதா தலைமை யிலான அ.தி.மு.க., ஆட்சி யில்தான்
பட்டியலின மக்களுக்கு மிகப்பெரிய மரியாதை கிடைத்தது. உதாரணத்திற்கு,
திருச்சி பார்லிமென்ட் பொதுத் தொகுதியில், எழில்மலை என்ற பட்டியல் இனத்தவரை
தேர்தலில் நிறுத்தி, வெற்றி பெறச் செய்து, மத்திய அமைச்சராக்கி அழகு
பார்த்தார் ஜெயலலிதா.
முன்னாள் சபாநாயகர் தனபால், அ.தி.மு.க.,
உறுப்பினராக இருந்த போது, அவர் பட்டியல் இனத்தவர் என்பதற்காகவே அலட்சியம்,
அவமானப்படுத்தப்பட்ட போது, ஒட்டுமொத்த சட்டசபை உறுப்பினர்களும் தனபால்
வந்தால் எழுந்து நின்று மரியாதை செய்யும் விதமாக, அவரை சட்டசபை சபாநாயகர்
ஆக்கி, தலித் மக்களுக்கு மரியாதை செய்தவர் ஜெயலலிதா.
அவருக்கு
இருந்த முற்போக்கு சிந்தனையும், பரந்த மனமும், துணிச்சலும்
திருமாவளவனுக்கு இருக்கிறதா இல்லை அவர் ஆதரிக்கும் தி.மு.க.,விற்கு தான்
இருக்கிறதா?
இன்று, ஓட்டு வங்கிக்காக ஆணவக் கொலைகளை மவுனமாக
வேடிக்கை பார்த்துக் கொண்டும், தலித்துகளுக்கு ஆலய பிரவேசம் மறுக்கப்படும்
கோவில்களில், அதற்கான நடவடிக்கை எடுக்க திறன் இல்லாமல் கோவில்களை பூட்டி
வைத்திருப்போரை கொண்டாடும் திருமாவளவனுக்கு, ஜெயலலிதா குறித்து பேச என்ன
தகுதி இருக்கிறது?