PUBLISHED ON : ஜூன் 26, 2026 12:00 AM

பா.முனுசாமி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எந்த விஷயத்தையும், நியாயமாகவும், அறிவுபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் சிந்திக்கத் தெரிந்த ஒரே பத்திரிகை, 'தினமலர்' தான் என்பதை நேற்று, மனப்பூர்வமாக உணர்ந்து, ஆச்சரியமடைந்தேன்.
தினமும் இரண்டு ஆங்கில நாளிதழ்கள், நான்கு தமிழ் பத்திரிகைகள் படிப்பவன் நான். எனக்கு தெரிந்த வகையில் சில விஷயங்கள் சொல்கிறேன்...
நேற்றைய பத்திரிகையின் முதல் பக்கத் தலைப்பை படித்தபோது, தந்தை - மகன் உறவிலான விரிசல் தீர்ந்ததைக் கொண்டாட வேண்டும் என்பது போன்று இருந்தது.
தி.மு.க., - அ.தி.மு.க., என இரு கட்சிகளே தமிழகத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த, 1980 காலத்தில், நம் மாநிலத்துக்கு மாற்றுக் கட்சி வேண்டும் என்ற எண்ணத்தில், பாட்டாளி மக்கள் கட்சி உதயமானபோது, அதை முழு மூச்சாய் ஆதரித்து செய்திகளை வெளியிட்டு, அக்கட்சியை வளர்த்தது 'தினமலர்' நாளிதழ் என்பதை நன்கறிவேன்.
பிறகு, அக்கட்சி ஒரு பிரிவினரின் கட்சியாக மட்டும் பரிமளித்ததால், பெரிய அளவில் வளர வாய்ப்பு ஏற்படவில்லை; தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் ஆட்சி அமைக்க அச்சாணியாக அமைய முடிந்தது.
ஆனால், சமீபத்தில், கட்சிக்கு சாபக்கேடு என்பது போல், நிறுவனர் ராமதாசுக்கே சோதனை ஏற்பட்டது. அவரது மகன் தனிக் கொள்கை வகுத்தபோது, அதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை; தந்தை - மகன் இடையே பெரிய சண்டை மூண்டது.
அப்போது, தன் கவலையை வெளிப்படுத்துவது போல், முதல் பக்க தலைப்பு செய்தியாக அதை வெளியிட்டது 'தினமலர்'. 'தேர்தலுக்கான நாடகமாக தந்தை - மகன் சண்டை போடுகின்றனர்' என பலர் சொன்னபோது, மவுனம் சாதித்தது 'தினமலர்'.
அப்போதே நினைத்தேன், ஏன் 'தினமலர்' இது குறித்து கருத்தே வெளியிடவில்லை என்று... நேற்று தான் புரிந்தது, எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும், எப்பேர்ப்பட்ட குடும்பங்களிலும் நெருங்கிய உறவுகளிடையே சண்டையோ, சச்சரவோ, விரிசலோ ஏற்படுவதை 'தினமலர்' நாளிதழ் விரும்புவதில்லை!
அதுவும் நேற்று, தந்தை - மகன் இருவரும் சந்தித்தபோது ஏற்பட்ட நெகிழ்ச்சியை, முதல் பக்க செய்தியாக படத்துடன் வெளியிட்டு, விவரித்து விளக்கம் எழுதி இருந்ததைக் கண்டு, என் கண் கலங்கியது. மற்ற பத்திரிகைகள் அனைத்தும் இதை உள்பக்க செய்தியாகவே வெளியிட்டன. பா.ம.க.,வுக்கு முக்கியத்துவம் தருவது இப்போதைய காலகட்டத்தில், வியாபார ரீதியாக எடுபடாது என்ற எண்ணமாக இருக்கலாம்.
அதெல்லாம் நமக்கு இப்போது விஷயமல்ல... அ.தி.மு.க., அழிவுநிலையை நோக்கி நகர்கிறது; தி.மு.க.,வின் கொள்கைகள் சரியல்ல; தே.மு.தி.க.,வில் விஜயகாந்த் காலத்திற்குப் பின் அக்கட்சியின் போக்கு சரியில்லை; பா.ஜ.,வின் நிலையும், சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
த.வெ.க., இப்போது தான் குழந்தையாக தவழத் துவங்கி இருக்கிறது; அண்ணாமலையின் அரசியல் பிரவேசம் இன்னும், 'இன்குபேஷன்' காலத்திலேயே இருக்கிறது.
பழம் பெரும் கட்சியான பா.ம.க.,வில், அனைவரும் ஒன்று சேர்ந்தால், மீண்டும் ஒரு அரசியல் மாற்றம் நிகழும். எந்த ஒரு நல்ல செயலுக்கும், பல கருத்துகள் எழுந்தால் தானே அந்த செயலை திறம்படச் செய்ய முடியும். தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டுமெனில், பல கட்சிகளின் கருத்துகளில் உள்ள சாதக, பாதகங்களைக் கவனத்தில் கொண்டு செயலாற்றுவது தானே சிறந்தது!
இதை கவனத்தில் கொள்ளும் 'தினமலர்' நாளிதழ், சரியான முறையில், தேவையான நேரத்தில், தேவையான செய்திகளை, தேவையானஇடங்களில் வெளியிடுகிறது. வாழ்க 'தினமலர்' !
----
தவிர்க்கலாமே முதல்வரே!
ஏ.ஸ்ரீவாஸ், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முந்தைய தி.மு.க., அரசு, மத்திய அரசை வேண்டுமென்றே, 'ஒன்றிய அரசு' என்று திரும்பத் திரும்ப கூறி, தன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தி வந்தது. 'ஒன்றிய' என்பது தவறான வார்த்தை அல்ல.
ஆனாலும், பிரிவினை உணர்ச்சிக்கு வடிகாலாகவும், மத்திய அரசை ஒரு பஞ்சாயத்துடன் ஒப்பிட்டு, வடமாநிலங்களை தவிர்க்கும் ஓர் உத்தியாகவும், தி.மு.க., அரசு அந்த வார்த்தையை பயன் படுத்தியது!
தற்போது, அனைவரையும் அரவணைத்து செல்லும், ஒரு நல்ல ஆட்சியாளராகவே விஜய் பார்க்கப்படுகிறார்.
இதை, அவரது அமைச்சரவை தேர்வு உணர்த்துகிறது.
ஆனால், இவரும், தி.மு.க., பாணியில், ஒன்றிய அரசு என்று சொல்வது சரியா?
தி.மு.க.,வினரால் பிரிவினை எண்ணத்துடன் சொல்லப்பட்ட ஒரு வார்த்தையை முதல்வர் தவிர்க்கலாமே!
----
தி.மு.க.,வினருக்கு தான் வளர்ச்சி!
வெ.நாராயணன், மாம் பாக்கம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க., அரசு கடன் வாங்கியதால் தான், தமிழகம் வளர்ச்சி அடைந்தது' என்று விசித்திரமான அறிக்கையை வெளியிட்டுள்ளார், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தி.மு.க., அரசு கடன் வாங்கியுள்ளதாக குறிப்பிட்டு, தமிழகத்தின் ஒட்டுமொத்த கடனை, தமிழக வெற்றிக் கழக நிதியமைச்சர் மரிய வில்சன் பட்டியலிட்டு காட்டியுள்ளார். ஆனாலும், கடன் வாங்கியதால் தான் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று முட்டுக் கொடுக்கிறார், ஜவாஹிருல்லா.
பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு குடும்ப தலைவர், ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி, தங்கத்தில் கை செயின் அணிந்து கொண்டால், அவர் பொருளாதார வளம் பெற்றவர் ஆகிவிட முடியுமா?
கடன் வாங்கி கை செயின் வாங்குவது போன்று, இலவச திட்டங்களை செயல்படுத்தவும், கருணாநிதிக்கு சிலைகள் வைக்கவும், அவரது பெயரில் நுாலகங்கள் கட்டவும், பிறந்த நாள் விழா, கட்சி விழா நடத்தவும் பெருந்தொகையை கடனாக வாங்கி, பின், அந்த கடனுக்கான வட்டியையும், அதிலிருந்தே கொடுத்து வந்துள்ளது, கடந்த தி.மு.க., அரசு.
மாநிலத்தின் வருவாயை பெருக்குவதற்காக கடன் வாங்கப்பட்டிருந்தால், இன்று, தமிழகம் குஜராத் போன்று உபரி வருவாய் உள்ள மாநிலமாக திகழ்ந்திருக்குமே தவிர, கடன்கார மாநிலமாக மாறியிருக்காது!
வளர்ச்சி என்பது மக்களை இலவசத்திற்காக கை நீட்ட வைப்பதல்ல; வீட்டுக்கு ஒரு தொழில் முனைவோரை உருவாக்கி, மாநிலத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்க வைத்து, அதன் வாயிலாக வேலைவாய்ப்பை பெருக்குவதற்கு பெயர் தான் வளர்ச்சி!
ஆனால், அரசு கஜானாவை திவாலாக்கி, நிதியாதாரங்களை முடக்கிய, தி.மு.க.,வினரின் குடும்ப வளர்ச்சி, தமிழகத்தின் வளர்ச்சியாக ஜவாஹிருல்லாவிற்கு தெரிகிறது என்றால், கொள்ளையில் பங்கு கொண்ட கூட்டாளியின் வாக்குமூலம் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்!
lll
