PUBLISHED ON : ஜூன் 25, 2026 12:26 AM

எஸ்.ஆர்.த்ராவிட், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன்' என்கிறார், கர்நாடக முதல்வர் சிவகுமார். அதை வலியுறுத்தும் விதமாக, அம்மாநில அரசியல்வாதிகளும், 'காவிரி கர்நாடகத்திற்கு சொந்தமானது; நாங்கள் அணை கட்டியே தீருவோம்' என்கின்றனர்.
அரசியலுக்காக இவர்கள் நடத்தும் இதுபோன்ற நாடகங்களால், இரு மாநிலங்களின் ஒற்றுமை தான் சீர்குலையும்!
திருநெல்வேலியில் கன்னடியன் கால்வாய் உள்ளது. அதை உருவாக்கி அப்பகுதியின் பாசனத்திற்கு வித்திட்டவர், இன்றைய கர்நாடக மாநிலமான, அன்றைய கன்னட தேசத்தைச் சேர்ந்த ஒரு பிராமண வாலிபர். அதனாலேயே அது, கன்னடியன் கால்வாய் என்று அழைக்கப்படுகிறது.
அ தேபோன்று, தமிழகமும், கர்நாடகமும் மண உறவு கொண்டவை; மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், கன்னட இளவரசி பாமினியை மணந்து கொண்டான் என்பது வரலாற்று குறிப்பு. மேலும், எப்போதெல்லாம் காவிரிக்கு குறுக்கே கன்னட தேசத்தினர் அணைக்கட்ட முயற்சித்தனரோ அப்போதெல்லாம் தமிழக மன்னர்கள், குறிப்பாக, சோழ மன்னர்கள் படை எடுத்து சென்று, அந்த தடையை உடைத்து, காவிரியை விடுவித்தனர் என்பதும் வரலாறு!
கர்நாடக மாநிலம் குடகு மலையிலிருந்து உருவாகும் காவிரி நதி தமிழகத்தின் கடைக்கோடியான பூம்புகார் வரை செல்கிறது. அதாவது, மேற்கில் இருந்து கீழ்நோக்கி பாய்கிறது. அதே சமயம், குடிமராமத்து உரிமை என்பது, பூம்புகாரிலிருந்து குடகுக்கு எதிர் திசையில் செல்கிறது.
அவ்வகையில், காவிரி நீருக்கு அதிகபட்ச உரிமை கொண்டவர்கள் பூம்புகார் மக்கள் தான்; அதன்பின் மாயவரம், திருச்சி, சேலம், ஒகேனக்கல் என்று தமிழகத்திலும், மேகதாது, மாண்டியா, மைசூர், குடகு என்று கர்நாடகாவிலும் குறைந்து கொண்டே போகும். இதுதான் உண்மை.
சர்வதேச ஆற்று நீர் ஒப்பந்தமும், இப்படித்தான் ஒப்புக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. ஆகவே, காவிரியின் மீதான அதிகபட்ச உரிமை, பூம்புகார் மக்களுக்கு தான் உண்டு என்பதை, சிவகுமார் மறக்கக் கூடாது!
ஊருக்கு தான் உபதேசம்!
ஆர்.கந்தன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் விரைவில் துவங்கவுள்ள நிலையில், லோக்சபாவில் பா.ஜ., மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை பெற, எதிர்க்கட்சிகளை உடைக்கும் முயற்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளார். இது, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்' என்று கூறியுள்ளார், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.
கடந்த 1971ல் பார்லிமென்ட் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றார், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா. அவரை எதிர்த்து போட்டியிட்ட, சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர் ராஜ் நாராயணன், தேர்தல் முறைகேடுகளில் இந்திரா ஈடுபட்டார் என்றும், ஓட்டுக்காக மதுபானம், போர்வை, வேட்டிகளை கொடுத்தார் என்றும் குற்றஞ்சாட்டி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து, 1975ல் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123-வது பிரிவு, 7-வது விதியின் அடிப்படையில், இந்திராவின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்ததுடன், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார்.
இதனால், பிரதமர் பதவியிலிருந்து இந்திரா விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதை ஏற்காத இந்திரா, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை பதவியில் தொடரப்போவதாக அறிவித்தார்.
நீதிமன்றமும், மறு விசாரணை நடக்கும்வரை பிரதமராக பதவி வகித்தாலும், 'தீர்மானங்களின் மீது ஓட்டளிக்கும் உரிமை இந்திராவிற்கு கிடையாது' என்றது!
இதற்கு பதிலடியாக தான், நெருக்கடி நிலையை பிரகடனம் செய்து, தன் மீது வழக்கு போட்ட ராஜ் நாராயணன் உட்பட எதிர்க்கட்சியினர் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார், இந்திரா.
இப்படி ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையே காலில் போட்டு நசுக்கியவர் இந்திரா.
ஆனால், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குகிறார் என்று, காங்கிரசை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் கூறுகிறார்.
தனக்கு கட்டுப்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை கலைத்து, ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்கிய காங்., இன்று ஜனநாயக உரிமை குறித்து பா.ஜ.,விற்கு பாடம் நடத்துகிறது.
'ஊருக்குத் தான் உபதேசம், உனக்கும், எனக்கும் இல்லையடி பெண்ணே' என்பது போல் உள்ளது, ஜெய்ராம் ரமேஷின் பேச்சு!
இலவசத்தால் தமிழகம் வீழலாமா!
ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக வெற்றிக் கழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள நிதிநிலை வெள்ளை அறிக்கையில், தமிழக அரசின் மொத்த கடன் தொகை, 13.18 லட்சம் கோடி ரூபாய் என்ற தகவல், அதிர்ச்சி அளிக்கிறது. இக்கடனுக்காக ஆண்டுக்கு, பல கோடி ரூபாய் வட்டி செலுத்தப்பட்டு வருகிறது.
ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, இலவச திட்டங்களை அறிவித்து, வீண் செலவு செய்து, இறுதியில் தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றி விட்டது, தி.மு.க.,
தமிழக மக்கள் ஒவ்வொருவர் தலையிலும், தாங்கள் வாங்காத கடனுக்காக, 1.28 லட்ச ரூபாய் கடனை சுமந்து நிற்கின்றனர்.
கடந்த 60 ஆண்டுகளில் வாங்கிய ஒட்டு மொத்த கடனை விட, தி.மு.க., அரசு ஐந்து ஆண்டுகளில் கூடுதலாக வாங்கியுள்ளது.
இவ்வளவு கடனை வாங்கி அப்படி என்ன தமிழகத்தை தொழில் வளர்ச்சியில் உயர்த்தி விட்டனர்?
கருணாநிதிக்கு சிலை வைக்கவும், அவர் பெயரில் பூங்காக்கள், நினைவு மண்டபங்கள் அமைக்கவும் தானே பல்லாயிரம் கோடி ரூபாய் செலவாகியுள்ளது!
கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல், வாங்கிய கடனில் ஒரு சிறுபகுதியை மகளிர் உரிமை தொகை, மாணவியர் உதவி தொகை என்று இலவச திட்டங்களுக்கு இறைத்துள்ளதை தவிர, இந்த கூடுதல் கடனால் தமிழக மக்களின் வாழ்க்கை தரம் உயர என்ன செய்துள்ளது தி.மு.க.,?
தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவச வாக்குறுதிகளுக்கு மயங்காமல், 'ஏற்பது இகழ்ச்சி' என்று, மக்கள் என்றைக்கு முடிவெடுக்கின்றனரோ அன்று தான் தமிழகம் உபரி வருமானம் உள்ள மாநிலமாக மாறும்!
