PUBLISHED ON : டிச 02, 2024 12:00 AM

ஆர்.செழியன்,
செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமூக சேவகர் அன்னா
ஹசாரேவால் கவரப்பட்டு, அரசியல் களத்தில் குதித்த அரவிந்த் கெஜ்ரிவால்,
ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்ததும், எப்படி ஊழலின் உறைவிடமாக மாறினாரோ,
அதுபோல, சுதந்திர போராட்ட வீரர் ஜெயபிரகாஷ் நாராயணனால் அரசியலுக்குள்
நுழைந்த லாலு பிரசாத் யாதவ், பீஹார் முதல்வரானதும் ஊழலின் ஊற்றுக்கண்ணாகவே
திகழ்ந்தார் என்பது வரலாறு!
ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிறை
தண்டனை பெற்றுள்ள லாலு, தண்டனை காலம் முடிந்து விடுதலையாகவில்லை; உடல்
நிலையை காரணம் காட்டி, ஜாமீனில் வெளியே வந்து நடமாடிக் கொண்டிருக்கிறார்.
இத்தகைய
சிறப்பு வாய்ந்த லாலு, திடீரென, 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தால்,
எஸ்.சி., -- எஸ்.டி., - ஓ.பி.சி.,யினரின் ஓட்டுகள் வீணாகின்றன. இந்த
இயந்திரத்தை பா.ஜ.,வினர் தங்கள் வீட்டிற்கு துாக்கிச் செல்லட்டும். அடுத்த
ஆண்டு, பீஹார் சட்டசபை தேர்தலில், ஓட்டுச்சீட்டு முறையை பயன்படுத்த
வேண்டும்' என, ஒரு வெடிகுண்டை வீசியுள்ளார்.
லாலுவின் கோரிக்கை
எப்படி உள்ளது தெரியுமா... ஐந்து வயதில் போட்ட அரை டிராயரைத் தான்,
ஐம்பது வயதிலும் போடுவேன் என்பது போல் உள்ளது.
மின்னணு
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஒரு பொத்தானை அமுக்கி, ஓட்டு போட முடியாதோர்,
வாக்குச்சீட்டில் மட்டும் சரியான சின்னத்தில் முத்திரை குத்தி, ஒழுங்காக
மடித்து, பெட்டியில் போட்டு விடுவரா?
சமீபத்தில், மணிப்பூர் மற்றும்
வயநாட்டில் நடந்த பார்லிமென்ட் இடைத்தேர்தல்களில், இயந்திரத்தின் வாயிலாக
நடந்த வாக்குப்பதிவில் தானே, உங்கள், 'இண்டியா' கூட்டணி, நொண்டி
அடிக்காமல் வெற்றி வாகை சூடியது?
அப்போது, அதையும் இயந்திரத்தின் கோளாறு என்று எடுத்துக் கொள்வோமா?
ஏற்கனவே,
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை கூறி, வழக்கு தொடுத்தவர்
தலையில், நீதிமன்றமே ஓங்கி குட்டு வைத்துள்ளது. இப்போது, லாலு
கிளம்பியுள்ளார்.
அது சரி... மாட்டுத் தீவன ஊழலில் பதவியை இழக்க
நேரிட்டபோது, தன் கட்சியினரை நம்பாமல், எழுதப்படிக்கத் தெரியாத தன் மனைவி
ராப்ரி தேவியை முதல்வர் ஆக்கிய பரந்த மனதிற்கு சொந்தக்காரர் தானே இவர்...
மின்னணு ஓட்டு இயந்திரத்தை மட்டும் எப்படி நம்புவார்?
விழித்து கொள்ளுங்கள் முதல்வரே!
எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆளும் தி.மு.க., அரசு, வரும், 2026 சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளிலும் வெற்றி பெற, இப்போதே களத்தில் குதித்து விட்டனர்.
தமிழகத்தில் நடக்கும் கள்ளச்சாராய மரணங்கள், கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை, இதன் காரணமாக நிகழும் வெட்டுக்குத்து, கொலை, கொள்ளை என, சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிப்பதைக் குறித்து சிறிதும் கவலைப்படாமல், செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி, தேர்தலில் வெற்றி பெறுவது பற்றி ஆலோசனை செய்து வருகின்றனர்.
கூட்டணி பலத்தை நம்பி, இப்போதே வெற்றிக் கனவில் மிதந்து கொண்டிருக்கின்றனர். கூட்டணி கட்சியினர் மட்டும் ஓட்டளித்தால் போதுமா... எந்தக் கட்சியையும் சாராத பொதுமக்கள் ஓட்டளிக்க வேண்டாமா?
கடந்த சட்டசபை தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில், முக்கியமான எதையுமே நிறைவேற்றாமல், ஒரு சிலவற்றை மட்டுமே நிறைவேற்றி விட்டு, 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, மக்களிடம் ஒரு பிம்பத்தை கட்டமைத்து, இலவசங்களைக் காட்டி மக்களை ஏமாற்றி, அவர்களது ஓட்டுகளைப் பெற்று விடலாம் என, கனவு காண்கின்றனர்.
ஆனால், மக்கள் ஏமாளிகள் அல்ல; ஆனானப்பட்ட எம்.ஜி.ஆரையே, 1980ல் நடந்த லோக்சபா தேர்தலில், இரண்டு தொகுதிகளை தவிர, அனைத்து தொகுதிகளிலும் தோல்வியுறச் செய்தவர்கள்தான், தமிழக மக்கள்.
இதை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மறந்து விடக்கூடாது.
மகனை துணை முதல்வராக ஆக்கியது, கருணாநிதிக்கு தமிழகம் எங்கும் சிலை வைப்பது, அரசு நிறுவனங்களுக்கு அவர் பெயரை சூட்டுவது என இவற்றையெல்லாம், தி.மு.க.,வினர் வேண்டுமானால், ரசிக்கலாம்; தமிழக மக்கள் ரசிக்க மாட்டார்கள்.
அதனால், இப்போதாவது விழித்துக்கொண்டு, சட்டசபை தேர்தலில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
அப்போதுதான், தி.மு.க.,வால், வெற்றிபெற முடியும்; இல்லையென்றால், முயல் - ஆமை கதையில், ஆமை வென்றதுபோல், அ.தி.மு.க.,வினர் வெற்றி வாய்ப்பை தட்டி சென்று விடுவர்!
டில்லி நிலை வேண்டாமே!
வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலக அளவில் மிகவும் மோசமாக காற்று மாசுபட்டுள்ள நகரங்களின் பட்டியலில், தலைநகர் டில்லிக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
டில்லியில், கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன; பள்ளிகள் மூடப்பட்டுள்ளன; விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது; வெளிமாநில வாகனங்கள், டில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், டில்லி மக்கள் நச்சுக்காற்றை சுவாசித்தபடி, விழிபிதுங்கிக் கொண்டிருக்கின்றனர். 'காற்று மாசு தொடர்பான பிரச்னையில், டில்லி அரசு மிகவும் மெத்தனமாக நடந்து கொள்கிறது' என, உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
டில்லி நிலை, வேறு எந்த மாநிலத்துக்கும், நகரத்திற்கும் ஏற்பட்டு விடக்கூடாது.
திடக்கழிவு மேலாண்மையில் சுணக்கம் காட்டும் உள்ளாட்சி நிர்வாகம், கிராமப்பகுதிகளில் சேகரமாகும் குப்பையை அகற்றாமல், ஆங்காங்கே குவித்து தீ வைத்து விடும் பழக்கத்தை, மக்களிடையே ஏற்படுத்தி விட்டது.
உயிரினங்கள் வாழத் தகுதியான ஒரே கோள், பூமி; இதை விட்டால் வேறு போக்கிடம் இல்லை. இருக்கும் ஒரே பூமியை, கண்போல் காப்பது, நம் அனைவரின் பொறுப்பு. உயிர் வாழ அவசியத் தேவையான காற்றையும், தண்ணீரையும் மாசுபடுத்தி விட்டால், வேறு என்ன வழி?
பழைய வாகனங்கள் ஒழிப்பு; வாகன புகை பரிசோதனை மேற்கொள்ளுதல்; சுற்றுச்சூழலை கெடுக்காத வண்டிகள் பயன்பாடு; வனப்பரப்பை அதிகரித்தல்; மியாவாக்கி எனப்படும் அடர் நடவு முறை காடுகளை ஆங்காங்கே அதிக அளவில் உருவாக்குதல் ஆகியவை, நமக்கான அவசிய கடமைகள்.
மத்திய, மாநில அரசுகள் இதற்கு அவசர கவனத்தை செலுத்தி, வாழிடங்களை சீர்படுத்த வேண்டும்!