PUBLISHED ON : ஜூன் 04, 2026 12:17 AM

ஜெ.ஜி.சுவாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வின் நீண்ட கால கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள், இன்று, தமிழக வெற்றிக் கழகத்தில் ஐக்கியமாகி விட்டன.
இப்போதே, 'இண்டி' கூட்டணியில், 'தி.மு.க.,வின் இடத்தை, த.வெ.க., கைப்பற்றக்கூடும்' என்று, டில்லி காங்., வட்டாரங்கள் பேச ஆரம்பித்துள்ளன.
இந்த இக்கட்டான சூழல், 1999ல் தி.மு.க.,வின் கூட்டணி வரலாற்றை திரும்பிப் பார்க்க வைக்கிறது.
கடந்த, 1999-ல் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்திருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, திடீரென்று தன் ஆதரவை விலக்கிக் கொண்டதால், வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ., அரசு கவிழ்ந்தது. உடனே, புதிய பங்காளியாக அக் கட்சியுடன் கரம் கோர்த்தது, தி.மு.க.,!
கொள்கைகளை விட அரசியல் சூழல்களே கூட்டணிகளை தீர்மானிக்கும் என்பதற்கு, அந்த, 'திராவிட - -ஹிந்துத்துவ' கூட்டணியே ஆகச்சிறந்த சான்று!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவிற்கு பின், தி.மு.க., முன்னெடுத்த தீவிர சனாதன எதிர்ப்பு முழக்கங்கள், வட மாநிலங்களில் தி.மு.க.,வை மட்டுமல்ல; அக்கட்சி அங்கம் வகித்த இண்டி கூட்டணியையும் ஓரங்கட்ட வைத்தது.
தற்போது, தமிழகத்தில் ஆட்சி இழப்பு, தேசிய அளவில் கூட்டணி பலவீனம் என, இருமுனை அழுத்தத்தில், தி.மு.க., சிக்கியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் தகுதியான எதிரணியைத் தேடும் பா.ஜ.,வும், தனித்து விடப்பட்டுள்ள, தி.மு.க.,வும், 'எதிரியின் பகைவன், என் நண்பன்' என்ற தர்க்கத்தின்படி மீண்டும் கரம் கோர்க்கலாம்!
இதற்கு தி.மு.க.,வின், 'சனாதன எதிர்ப்பு' முட்டுக்கட்டையாக இருக்கலாம்; எனினும், கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்யும் வல்லமை கொண்டவை அரசியல் தேவைகள் என்பதை, 'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; பகைவனும் இல்லை' என்ற அண்ணாதுரையின் வழியில் வந்த, தி.மு.க., நன்கு அறியும்!
தற்போது, அக்கட்சியின் முன், மூன்று வழிகள் உள்ளன. அவை:
தனித்து நின்று, 2031-ஐ நோக்கிப் பயணிப்பது அல்லது 'இண்டி' கூட்டணியில் சமரசம் செய்து கொள்வது அல்லது 2029 பார்லிமென்ட் தேர்தலை ஒட்டி, பா.ஜ.,வுடன் புதிய கணக்கை துவக்குவது!
அவ்வகையில், அரசியல் நாடகத்தின் அடுத்த திரை எப்போது வேண்டு மானாலும் திறக்கலாம்!
வி.ஐ.பி., தரிசனத்தை நிறுத்துங்கள்!
எஸ்.ராமசுப்பிரமணியன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரசித்தி பெற்ற ஹிந்து கோவில்களுக்கு இணையாக, வேளாங்கண்ணி மாதா கோவில், நாகூர் தர்கா போன்ற புனித தலங்களிலும் பக்தர்கள் கூட்டம் பிதுங்கி வழிகிறது.
ஆனால், அங்கெல்லாம் பொது வரிசை, சிறப்பு வரிசை, வி.ஐ.பி., தரிசனம் என்று தனித்தனி வரிசைகள் இருப்பதில்லை; பக்தர்கள் தரிசனம் செய்ய, கட்டணங்கள் வசூலிக்கப் படுவதும் இல்லை.
ஆனால், இந்த மூன்று தரிசன முறைகளும், ஹிந்து அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஆலயங்களில் மட்டுமே அமலில் உள்ளன.
அத்துடன், உச்சி கால பூஜை மற்றும் அர்த்த ஜாம பூஜை முடிந்து, நடை சாத்தி விட்டால், அதன்பின் எப்போது நடையை திறக்க வேண்டுமோ, அப்போது தான் திறக்க வேண்டும் என்பது தான் ஆகம விதி.
ஆனால், ஆலயங்களில், வி.ஐ.பி.,க்களுக்காக ஆகம விதிகளை புறம் தள்ளி, கடவுள் சன்னிதியை திறந்து வைப்பதும், அவர்களை கருவறை வரையிலும் அழைத்து சென்று, தொட்டுக் கும்பிட வைப்பதும், சர்வ சாதாரணமாக நடை பெறுகிறது.
இதன்காரணமாக, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மூர்த்திகளின் தெய்வீக அருள் காணாமல் போகிறது.
சென்னை உயர் நீதிமன்றம் கூட, 'அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும், தாங்கள் எப்போது வேண்டுமானாலும் கோவிலுக்குள் நுழைந்தால், அங்கே கடவுள் தங்களுக்காக காத்திருப்பார் என, எண்ண வேண்டாம்' என்று, சமீபத்தில் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதுமட்டும் போதாது... சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது போல, கடவுளுக்கு முன் பக்தர்கள் அனைவரும் சமம் என்பதை நிலை நாட்டும் வகையில், ஹிந்து கோவில்களில், வி.ஐ.பி., தரிசனங்களையும், கட்டண தரிசனங்களையும் நீதிமன்ற உத்தரவுகளின் வாயிலாக, நீதிபதிகள் தடுத்து நிறுத்த வேண்டும்!
இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை?
என்.மூக்கையா, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருவள்ளுவரின் பிறந்த நாளான வைகாசி அனுஷத்தை ஒட்டி, 'திருவள்ளுவர் திருநாள் விழா' கொண்டாட்டத்தை, சென்னை லோக்பவனில் நடத்தியுள்ளார், தமிழக கவர்னர்.
அவ்விழாவில், காவியுடை, நெற்றி நிறைய திருநீறுடன் இருக்கும் திருவள்ளுவர் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இதைக் கண்டதும், திராவிட கும்பலுக்கு உடல் கொதித்து விட்டது.
'எப்படி திருவள்ளுவருக்கு காவியுடை அணிவித்து, நெற்றியில் திருநீறு பூசலாம்' என்று கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.
கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட ஈ.வெ.ராமசாமி, திருக்குறளை, 'தங்க தட்டில் வைத்த மலம்' என்றபோது வராத கொதிப்பு, திருவள்ளுவர் காவி உடையில் காட்சி அளிப்பதால் வருவது ஏன்?
திருவள்ளுவருக்கும், திராவிட கூட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?
'தமிழர்களின் பகுத்தறிவுக்கும், சமுதாய சீர்க்கேட்டிற்கும் காரணமான எதிரிகள் தான் வள்ளுவன், தொல்காப்பியன், கம்பன், இளங்கோவன், சேக்கிழார் போன்றோர்!
'பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்பதால் தான், திருக்குறளை கண்டிக்கிறேன். உடனே சிலர், 'எல்லாம் போய்விட்டால், தமிழர்களுக்கு எதுதான் நுால்?' என்று கேட்கின்றனர். 'இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்துவிடு என்று கூறினால், அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது?' என்று கேட்ட ஈ.வெ.ராமசாமி வழியில் வந்த இக்கூட்டம், இன்று, வள்ளுவருக்கு உரிமை கொண்டாடுகிறது.
'மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்' என்று சொன்ன வள்ளுவர் வழி வாழ்பவர்கள், திருவள்ளுவருக்கு காவி ஆடை அணிவிக்கின்றனர்.
கடவுள் இல்லை எனும் கூட்டம் எதற்கு கூப்பாடு போடுகிறது?
இரும்பு அடிக்கும் இடத்தில், ஈக்களுக்கு என்ன வேலை? l
