PUBLISHED ON : ஜூன் 03, 2026 12:00 AM

ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னையில் தமிழக கவர்னர் பங்கேற்ற, 'திருவள்ளுவர் திருநாள்' என்ற நிகழ்ச்சியில், காவி உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படம் இடம்பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், ஹிந்து மத எதிர்ப்பாளர்கள்.
'கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி' என்று சொன்ன இந்த திராவிடக் கும்பலுக்கு, கடவுள் வாழ்த்துடன் துவங்கும் திருக்குறளை உரிமை கொண்டாட என்ன தகுதி இருக்கிறது?
பத்து திருக்குறளை மனப்பாடமாகச் சொல்லும் திறன் அற்ற தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதியைக் கூட மன்னித்து விடலாம்; ஆனால், மெத்தப்படித்த மேதாவியான ம.தி.மு.க., தலைவர் வைகோ, திருக்குறளில் எவர் குறித்தும் இருக்காது, தமிழ் என்ற சொல்கூட இருக்காது என்று அரைவேக்காட்டுத் தனமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ம.தி.மு.க., என்ற கட்சி பெயரில், வைகோ என்ற பெயர் இல்லை என்பதற்காக, அக்கட்சி அவர் ஆரம்பித்தது இல்லை என்று ஆகிவிடுமா?
தமிழை வளர்த்ததே ஹிந்து மதத்திலுள்ள நுாற்றுக்கணக்கான ஆன்மிக இலக்கியங்கள்தான் என்பது, தமிழறிஞர்களே ஏற்றுக்கொண்ட உண்மை. மனிதர்கள் அனைவருக்குமான வாழ்வியல் நெறிகளை வலியுறுத்திச் சொல்லியுள்ளார் என்பதற்காக, வள்ளுவர் ஹிந்து இல்லை என்றாகி விடுமா?
ஹிந்து மத வாழ்வியல் முறைதான் திருக்குறளின் சாராம்சம்; வைகோவை விட திருக்குறளை ஆழ்ந்து படித்து, இது ஹிந்து மதத்திற்கான நன்னெறி நுால் என்பதை புரிந்து கொண்டதால் தான், திருக்குறளை, 'தங்கத்தட்டில் வைக்கப்பட்ட மலம்' என்று கூறி, வெறுப்பை உமிழ்ந்தார், கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட ஈ.வெ.ராமசாமி.
மேலும், ஹிந்துக்களின் கோட்பாட்டை வலியுறுத்திய, 'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை' என்ற திருக்குறளை, ஒரு பொது மேடையில் குறிப்பிட்டு, 'பெண்களே... நீங்களெல்லாம் பத்தினிகள் தானே... நீங்கள் சொன்னால் மழை பெய்யுமாமே... ஒருவன் எழுதி வைத்திருக்கிறான்; வாசலில் நின்று கட்டளையிடுங்கள், மழை வருகிறதா என்று பார்ப்போம்' என்று நக்கலடித்தார், ஈ.வெ.ராமசாமி.
எனவே, தெலுங்கை தாய் மொழியாக கொண்ட வைகோவிற்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியும் என்பது உண்மை என்றால், திருக்குறளில், 8, 25, 30, 55, 62, 107, 126, 398, 543, 620 ஆகிய குறள்களை மட்டும் படித்து, அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் இந்திரன், அந்தணர், ஏழு பிறப்பு, ஊழ்வினை போன்ற சொற்கள் ஹிந்து மதம் தவிர்த்து, வேறு எந்த மத நுால்களில் கையாளப்பட்டிருக்கிறது என்று சொல்லட்டும்!
ரங்க ராட்டினம் ஆடும் பிரேமலதாவின் நாக்கு!
டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நான் நினைத்திருந்தால், விஜயே என் வீடு தேடி வந்து, துணை முதல்வர் பதவி எனக்கு கொடுத்திருப்பார்; ஆனால், பதவிக்கோ, சோபா செட்டுக்கோ, பணத்துக்கோ ஆசைப்படாமல், கூட்டணி விசுவாசத்திற்காக, தி.மு.க.,வுடன் இருக்கிறோம்' என்று கூறியுள்ளார், தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சி தலைவி பிரேமலதா.
கரகாட்டக்காரன் திரைப்படத்தில், தமாஷ் நடிகர் கவுண்டமணியிடம், 'என்னை திருவாரூர் பார்ட்டியில கூப்பிட்டாக... பொன்னாமரத்தி பார்ட்டியில கூப்பிட்டாக... அவ்வளவு ஏன்... காரைக்குடி பார்ட்டியில கூட கூப்பிட்டாக; என் கிரகம், இங்க வந்து மாட்டிக்கிட்டேன்' என்பார், நகைச்சுவை நடிகை கோவை சரளா.
அதற்கு கவுண்டமணி, 'அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக... ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிட்டாகன்னு கலர் கலரா, 'ரீல்' விடாதே...' என்பார்.
அந்த காமெடி போலத்தான், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின், பிரேமலதா கலர் கலராக, 'ரீல்' விட்டுக் கொண்டிருக்கிறார்.
தேர்தல் பிரசாரத்தின் போது, நடிகர் விஜயகாந்த் பெயரை, த.வெ.க., தலைவர் விஜய் சொல்லி விட்டார் என்றவுடன், 'தையா தக்கா' என்று குதித்து பிரேமலதா, தேர்தல் முடிவிற்கு பின், 'தம்பி விஜய் எங்க வீட்டு பிள்ளை' என்றார்.
அதே பிரேமலதா, 'த.வெ.க., குதிரைபேரம் நடத்துகிறது' என்று சட்டசபையில் கடுமையாக விமர்சித்தார்.
பின், 'த.வெ.க.,வின் வெற்றி, சினிமா கவர்ச்சியால் வந்தது; இது- நிரந்தரமல்ல' என்றார்.
இப்போது, தான் நினைத்திருந்தால் துணை முதல்வர் பதவியை விஜய் தனக்கு தந்திருப்பார் என்கிறார்.
எலும்பில்லாத நாக்கு எப்படியும் வளையும் தான்; அதற்காக, இப்படியா பிரேமலதாவின் நாக்கு ரங்க ராட்டினம் ஆடுவது?
மற்ற அமைச்சர்களும் களமிறங்கணும்!
ஜெ.லஷ்மிகா, தஞ்சாவூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருச்செந்துார் முருகன் கோவிலில் மாறுவேடத்தில் சென்ற அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், விரைவு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி, தன்னிடம், 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கியவர்கள் மீது, நடவடிக்கை எடுத்துள்ளார்.
அவரது இந்த செயல், அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.
இதுவரை, பள்ளி - கல்லுாரிகள் உட்பட பல்வேறு துறைகளில் ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள், முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு செல்வது தான் வழக்கம். அவர்களும் தங்களை ஆய்வுக்கு தயார் படுத்திக் கொள் வதுடன், அதிகாரிகளின் மனதை குளிர வைக்க, சிலபல முன்னேற்பாடுகளையும் செய்து வைத்திருப்பர்.
ஆய்வுக்கு வரும் அதிகாரிகள், பெயருக்கு சில மாணவர்களிடம் கேள்வி கேட்டு, பள்ளி கட்டடங்களை சுற்றிப் பார்த்து, நிர்வாகம் அல்லது தலைமையாசிரியர் தரும், 'அன்பளிப்பை' பையில் திணித்துக் கொ ண்டு சென்று விடுவர்.
பின், ஏதாவது அசம்பாவிதம் நடந்த பின், அரக்கப்பரக்க ஓடிவந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது போல் நடிப்பர்.
இதுபோன்ற கண்துடைப்பு ஆய்வுகளால் தான் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
உதாரணத்திற்கு, பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்திருந்தால், பல விபத்துகளை தடுத்திருக்க முடியும். ஆனால், அப்படி செய்யாமல், விபத்து நடந்த பின், அடுத்த சில நாட்களுக்கு பெயருக்கு ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்பது போல் நடிப்பதால், இன்று வரை பட்டாசு ஆலைகளில் விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்தபாடில்லை!
எனவே, குறைகளை போக்க வேண்டும், தவறுகளை திருத்த வேண்டும், தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம், அரசுக்கு உண்மையாகவே இருக்கிறது என்றால், அதற்கு அமைச்சர் ரமேஷ் செய்தது போன்ற, அதிரடி ஆய்வுகள் மட்டும் தான் பலன் தரும்!
அமைச்சர் ரமேஷ் பாணியில், அனைத்து துறை அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் தங்கள் துறை சார்ந்த இடங்களில், அதிரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே லஞ்சம், ஊழல் குறைவதுடன், தவறுகளும் தடுக்கப்படும்!
