PUBLISHED ON : மே 06, 2025 12:00 AM

ஆர்.தர்மதுரை, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் எத்தனையோ உள்ள நிலையில், சட்டசபையில், 'காலனி' என்ற வார்த்தையை எங்கும், எதிலும் பயன்படுத்தக் கூடாது என்று தீர்மானம் போட்டுள்ளார், தமிழக முதல்வர்.
'காலனி' என்றால் குடியிருப்பு பகுதி என்று தானே பொருள்?
மத்திய அரசின் சி.பி.டபிள்யு., கட்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு மட்டும் தான், 'குவாட்டர்ஸ்' என்று பெயர். மற்ற துறைகளான ரயில்வே, அஞ்சல்துறை போன்றவை கட்டிய கட்டடங்களுக்கு காலனி என்று தான் பெயர் சூட்டப்பட்டுள்ளன.
ரயில்வே காலனி, ஐ.சி.எப்., காலனி, ஜெகஜீவன்ராம் போஸ்ட் அண்டு டெலிகிராப் காலனி, டாக்டர் சுப்பராயன் போஸ்ட் அண்டு டெலிகாம் காலனி போன்றவை அவற்றுள் சில!
தமிழக அரசே பீட்டர்ஸ் காலனி, லாயிட்ஸ் காலனி, லோட்டஸ் காலனி, சி.ஐ.டி.,காலனி, சைதாப்பேட்டை தாடண்டர் நகர் டீச்சர்ஸ் காலனி போன்று பல கட்டடங்களுக்கு, 'காலனி' என்ற பெயரை தானே சூட்டியுள்ளது?
பின் எப்படி காலனி என்றால், அது, பட்டியல் இனமக்கள் வசிக்கும் குடியிருப்பை குறிக்கும் என்று சொல்கிறார் முதல்வர்?
சரி... காலனி என்ற பெயரை நீக்கி விட்டால், பட்டியல் இன மக்களின் வாழ்க்கை தரம் உடனே உயர்ந்து விடுமா?
வேங்கைவயல் தலித் குடியிருப்பின் குடிநீர் தொட்டியில், மனித கழிவை கலந்த குற்றவாளியை மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில், 'காலனி என்ற பெயரை இனி எவரும் பயன்படுத்தக் கூடாது' என்று, அவர்கள் மீது அக்கறை உள்ளவர் போன்று எதற்கு இந்த வேஷம்?
'கலைஞர்' என்பதையே, 'கலைஜ்ஜர்' என்று எழுதக் கூடிய தமிழ் மொழி ஆற்றல் மிக்கவர்கள் உடன்பிறப்புகள்.
காலனி என்ற பெயரை அழிக்க புறப்பட்டு, செருப்பு கடைகளில் எழுதப்பட்டிக்கும் காலணி என்ற வார்த்தையை அழித்து, ஓட்டுக்கு வேட்டு வைத்து விட போகின்றனர்.
ஏனெனில், காலணி வியாபாரத்தில் ஈடுபட்டிருப்போர் பெரும்பாலும் இஸ்லாமியர்களே!
மக்கள் சிந்திக்க வேண்டும்!
கு.காந்தி
ராஜா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜம்மு - காஷ்மீர்
பஹல்காம் என்ற இடத்தில் சுற்றுலா பயணியர், 26 பேர் பயங்கரவாதிகளால்
சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பொதுவாக, மதம் என்பது மனிதர்கள்
கடைப் பிடிக்கும் வாழ்வியல் நெறியில் இருந்து அடையாளம் காண்பது. ஆனால்,
இவர்கள் உடைகளுக்கு கீழ் மதத்தை தேடியுள்ளனர் என்றால், அவர்கள் எந்த
அளவிற்கு மூடர்களாக இருந்திருப்பர்?
போகட்டும்... பொதுவாக, உலக
நாடுகளில் நடந்த கலவரங்களின் வரலாற்றை திருப்பிப் பார்த்தோம் என்றால்,
பெரும்பான்மை சமூகத்தினர், சிறுபான்மையினரை தாக்குவர். ஆனால், இங்கோ
தலைகீழாக இருக்கிறது. பெரும்பான்மை ஹிந்துக்கள்தான் எப்போதும்
தாக்கப்படுகின்றனர்; கொல்லப்படுகின்றனர்.
காஷ்மீரில் மட்டுமல்ல... நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இதே நிலைதான்!
சமீபத்தில்
மே.வங்கம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ப் வாரிய திருத்த சட்டத்திற்கு
எதிராக நடந்த கலவரத்தில், ஹிந்துக்களின் வீடுகள், கடைகள், பொருட்கள் தீ
வைத்து கொளுத்தப்பட்டதுடன், மூவர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து
இங்கு பேசுவோர் எவரும் இல்லை; ஏன்... குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு
சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட, 59 பேர் கொல்லப்பட்டது
இங்குள்ளவர்கள் கண்களுக்கு தெரியவில்லை; மாறாக, எதிர்வினையாக நடந்த
கலவரத்தில் பலியானவர்கள் தான் தெரிகின்றனர். அதை, 'ஹிந்து தீவிரவாதம்'
என்று பெயரிட்டு மகிழ்கின்றனர்.
காரணம், ஓட்டு வங்கி அரசியல்!
இதோ...
கண்ணெதிரே, கணவன், மகன், தந்தை, மாமன், மச்சான், அண்ணன், தம்பி என உறவினரை
பறிகொடுத்து, 26 குடும்பங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன.
இப்போதும்,
ஓட்டு எனும் எலும்பு துண்டுக்காக பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும்
ஆதரவாக இங்கே சில அரசியல்வாதிகள் பேசுகின்றனர் என்றால், இவர்கள் நம்மை ஆள
தகுதி உடையவர்கள் தானா என்று ஓட்டுப் போடும் மக்கள் சிந்திக்க வேண்டும்!
மதில் மேல் பூனையான திருமாவின் மனம்!
என்.ஏ.நாக
சுந்தரம், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: தமிழக ஜாதி கட்சி தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்,
வி.சி.கட்சி தலைவர் திருமாவளவன். தன் சமுதாய மக்களின் வாழ்க்கை தரத்தை
உயர்த்தப் போவதாகவும், அவர்களுக்கு ஒரு துயர் என்றால் ஓடிவந்து துடைக்கப்
போவதாகவும் வாக்குறுதி கொடுத்து கட்சி துவங்கினார்.
அத்துடன்,
இளைஞர்களை உசுப்பி விடும் விதமாக, 'அடங்க மறு; திமிறி எழு' என்று வீர உரை
ஆற்றி, அவர்கள் தயவில் கழகங்களுடன் மாறி மாறி கூட்டணி வைத்து, கல்லா கட்டி
வருகிறார்.
சனாதன தர்மத்தை ஒழிக்கவும், சமூக நீதி காக்கவும்
தற்போது தி.மு.க., கூட்டணியில் இருக்கும் திருமா, தனக்கு சரிசமமான இருக்கை
கொடுக்கவில்லை என்றாலும், சமூகநீதி காக்க தன்மானத்துடன், கூட்டணியில்
தொடர்கிறார்.
ஆனால், விடியல் கட்சியில் இருந்தாலும், தன் கட்சிகொடி ஏற்ற ஒரு கம்பம் கூட நட முடியாத நிலையில்தான் உள்ளார் என்பது வேறு விஷயம்!
தி.மு.க.,வின்
தேர்தல் ஆலோசகராக இருந்த ஆதவ் அர்ஜூனா, அங்கிருந்து, 'ஜம்ப்' செய்து
வி.சி.க.,வுக்கு வந்தவர், 'ஆட்சி, அதிகாரத்தில் பங்கு' என, திருமாவை
சொறிந்துவிட, பாவம் திருமா... அன்றிலிருந்து முதல்வர் கனவில் மிதந்து
வருகிறார்.
ஒரு திரைப்படத்தில் தமாஷ் நடிகை கோவை சரளா, 'என்னை
அங்கே கூப்பிட்டாங்கோ, இங்கே கூப்பிட்டாங்கோ... என் தலையெழுத்து இங்க
வந்துட்டேன்' என்பதுபோல் திருமாவளவனும், 'எனக்கு துணை முதல்வர் பதவியும்,
கட்சியினருக்கு அமைச்சர் பதவியும் தருவதாக அ.தி.மு.க., கூப்பிட்டது.
த.வெ.க., அழைத்தது... நான் தான் கூட்டணி வேண்டாம் என கதவை மூடி விட்டேன்'
என கூறியுள்ளார்.
இதன் வாயிலாக, 'பாருங்கள்... எங்கள் கட்சிக்கு
ஆபர் அதிகமாக இருக்கு. அதிக தொகுதி வேண்டும். முடிந்தால் ஆட்சி
அதிகாரத்தில் பங்கு தர வேண்டும். மறுத்தால் மூடிய கதவை, திறந்து விடுவேன்'
என்று சொல்லாமல் சொல்லியுள்ளார்.
திருமாவளவனை நன்கு அறிந்த
தி.மு.க., இப்போது, பா.ம.க.,வை தங்கள் கூட்டணிக்கு இழுக்க, திருமாவின்
மனமோ கதவை திறப்பதா, வேண்டாமா என்று மதில் மேல் பூனையாக தவிக்கிறது!
பார்ப்போம்... சட்டசபை தேர்தல் நெருங்கும்போது தெரிந்து விடுமே... எந்த கோணி பைக்குள் எந்த காய்கள் இருக்கின்றன என்று!