PUBLISHED ON : ஆக 22, 2025 12:00 AM

சென்னை அடையாறில், 'ரெசிடன்ட்ஸ் ஆப் கஸ்துாரிபா நகர் அசோசியேஷன்' வாயிலாக, சூழலியல் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஜனனி வெங்கடேஷ்: தெருக்கள் எங்கும் சிதறிக் கிடக்கும் குப்பை கழிவின் காட்சிகள், என்னை சங்கடப்படுத்த, குப்பையை தரம் பிரித்து, வாய்ப்புள்ள குப்பையை மறுசுழற்சி வாயிலாக மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியுமா என்று யோசித்தேன்.
திடக்கழிவு மேலாண்மை குறித்து, வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.
ஆரம்பத்தில் அலட்சியமாகத் தான் பதில் கிடைத்தது. ஆனாலும், துவண்டு விடவில்லை. ஒரே மாதிரி எண்ணம் கொண்ட ஸ்ரீதரன், சரண்யா, ஸ்வாதி ஆகிய நண்பர்கள் இணைந்து இந்த அசோசியேஷனை ஆரம்பித்தோம்.
முதல் முயற்சியாக, நான் எங்கு சென்றாலும் டம்ளர், தட்டு மற்றும் ஸ்பூன் ஆகியவற்றை எடுத்துச் செல்ல ஆரம்பித்தேன்.
வெளியிடங்களில் நாம் வாங்கும் மறுசுழற்சிக்கு தகுதியில்லாத பிளாஸ்டிக் பிளேட், கேரி பேக் போன்றவற்றை பயன்படுத்துவதை நிறுத்தினாலே, குப்பையை பெருமளவில் குறைக்க முடியும்.
ஆண்டுக்கு இரு முறை சென்னையின் பல்வேறு பகுதிகளில், 'இ - வேஸ்ட் கலெக் ஷன் டிரைவ்' நடத்துவேன்.
இதன் வாயிலாக வீடுகளிலும், அலுவலகங்களிலும் பயன்படுத்த முடியாமலும், துாக்கி போட முடியாமலும் குவிந்து கிடக்கும் கம்ப்யூட்டர், கிரைண்டர், லேப்டாப், பயன்படுத்திய துணிகள், மெத்தைகள், டேபிள் - சேர் மற்றும் பல்வேறு பொம்மைகளை திடக்கழிவாக சேகரிக்கிறேன்.
இதுவரை, 100 டன் அளவிலான திடக்கழிவை சேகரித்து, ஆக்கப்பூர்வ விஷயங்களுக்கு பயன்படுத்தி உள்ளோம்.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களை வேண்டியவர்களுக்கு கொடுத்தும், அப்புறப்படுத்தப்பட வேண்டிய பொருட்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களின் உதவியுடன் அழித்து, சுற்றுவட்டாரத்தை சுகாதாரமாக பராமரிக்கிறோம். இந்த பணியில் எனக்கு மிகவும் உதவியாக, சென்னை மாநகராட்சி இருக்கிறது.
திடக்கழிவில் இருந்து நாங்கள் உருவாக்கும் பயோ காஸை, அடையாறு, காமராஜர் அவென்யூவில் உள்ள மாநகராட்சி பள்ளியின் மதிய உணவு திட்டத்துக்கு சமையல் எரிவாயுவாக இலவசமாக அளிக்கிறோம்.
குறுகிய காலத்தில், 8 டன் கரிம கழிவை உரமாக மாற்றியது, பயோ காஸ் ஆலையை நிறுவி, மாநகராட்சி பள்ளியை தத்தெடுத்தது என, சூழலியல் செயல்பாடுகளில் தீவிரமாக இயங்கி வருகிறேன்.
எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து இந்த வேலைகளை செய்யவில்லை. ஆனாலும், இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள், தொடர்ந்து ஓடுவதற்கான ஊக்கத்தை கொடுப்பதையும் மறுப்பதற்கில்லை.

