sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

எம்.ஜி.ஆரின் புகழ் என்றும் மாசுபடாது!

/

எம்.ஜி.ஆரின் புகழ் என்றும் மாசுபடாது!

எம்.ஜி.ஆரின் புகழ் என்றும் மாசுபடாது!

எம்.ஜி.ஆரின் புகழ் என்றும் மாசுபடாது!


PUBLISHED ON : பிப் 05, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 05, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.சவுந்தரராஜன், கண்ணம்பாளையம், சூலுார், கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீப காலங்களில் தி.மு.க., - எம்.பி.,யான ஆ.ராசா, அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். அதன் ஒரு பகுதி தான், எம்.ஜி.ஆரை பற்றி சமீபத்தில் இழிவாக பேசியது. எம்.ஜி.ஆரிடம் மாற்றுக் கருத்து கொண்டோர் கூட, இவரை போல் கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தியது இல்லை.

தமிழக மக்கள் மனதிலும், ஏன் உலகளவிலும் இன்றும் மக்களால் போற்றப்படும் ஓர் ஒப்பற்ற தலைவராக எம்.ஜி.ஆர்., விளங்குகிறார்.

இன்னும் சொல்வதென்றால் திரைத்துறையிலும், அரசியலிலும் அவரது தாக்கம் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. அவரது தலைவர் ஸ்டாலின் கூட, எம்.ஜி.ஆரை தன் பெரியப்பா என்று தான் சொல்கிறார். மறைந்த கருணாநிதி கூட பலமுறை தனக்கும், எம்.ஜி.ஆருக்குமான உறவு எத்தகையது, அவர் செய்த உதவிகள் எப்படிப்பட்டவை என, பட்டியலிட தவறியது இல்லை.

கருணாநிதி முதல்வராக எம்.ஜி.ஆர்., முக்கிய காரணமாக இருந்ததை, கருணாநிதியே பலமுறை கூறியுள்ளார். அந்த வகையில் பார்த்தால், தன் தலைவர்களை பற்றி ஆ.ராசா என்ன சொல்ல வருகிறார்?

தன் நற்பண்புகளால் படித்தவர், பாமரர், அறிஞர்கள், சான்றோர்கள் என்று அனைத்து பிரிவினராலும் பெரிதும் விரும்பப்பட்டு, பலருக்கு இன்றளவிலும் எடுத்துக்காட்டாய் இருக்கும் தலைவர் எம்.ஜி.ஆர்., மட்டுமே.

இன்றும் கூட அவரது கருத்து செறிந்த பாடல்களை, பல கல்லுாரி மாணவர்கள் தங்களது மொபைல் போன், 'ரிங் டோனாக' வைத்திருப்பதை காண்கிறோம்.

எம்.ஜி.ஆரை பற்றி சொல்வதென்றால் இடமும், நேரமும் போதாது. அப்படிப்பட்ட மாமனிதரை இழிவாக பேசிய ஆ.ராசாவை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டர். அதே நேரம், அவரது தரம் தாழ்ந்த விமர்சனத்தால், எம்.ஜி.ஆரின் புகழ் எந்த வகையிலும் மாசுபடவும் போவதில்லை.

சோரன் வழியில் செல்வாரா கெஜ்ரிவால்?


எஸ். சின்னராசு டேவிட், தென்காசியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த சில நாட்களாக நாட்டையே உலுக்கிக் கொண்டிருந்த இரு வதந்திகளில், ஒன்று முடிவுக்கு வந்துள்ளது; மற்றொன்று எப்போது முடிவுக்கு வரும் என தெரியவில்லை.

அதாவது, புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகிய இருவரும் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால், சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

ஆனால், இருவரும் விசாரணைக்கு ஆஜராகாமல், 'டிமிக்கி' கொடுத்து, அமலாக்கத்துறையையும், மத்திய அரசை யும் வசைபாடிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில், இருவரும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் என்ற தகவல் உலா வரவே, உடனடியாக இருவேறு வதந்திகள் றெக்கை கட்டி பறந்தன...

அதாவது, ஹேமந்த் சோரன் கைதானால், அவர் வகித்த முதல்வர் பதவியை, அவரது மனைவி கல்பனா சோரனும், அரவிந்த் கெஜ்ரிவால் கைதானால், அவரது பதவியை அவரது மனைவி சுனிதாவும் வகிப்பர் என்பது தான் அந்த வதந்திகள்.

ஆனால், நல்ல வேளையாக, கல்பனாவை முதல்வராக்காத சோரன், சம்பாய் சோரனை முதல்வராக்கி விட்டு, சிறைக்கு சென்றிருக்கிறார்.

முதல்வர் பதவியில் இருந்து ஒருவர் விலகினால், அந்த இடத்தில் மனைவியை அமர வைக்கும் அவலம், முதலில் தமிழகத்தில் தான் துவங்கியது.

கடந்த 1969ல், முதல்வராக இருந்த அண்ணாதுரை காலமானபோது, அவரது மனைவி ராணி முதல்வராகவில்லை; நெடுஞ்செழியன் தான் தற்காலிக முதல்வரானார். அடுத்து, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., 1987ல் மறைந்த போது தான் பிரச்னை துவங்கியது.

எம்.ஜி.ஆர்., இடத்தில் வலுக்கட்டாயமாக அவரது மனைவி ஜானகியை, முதல்வர் பதவியில் அமர்த்தினர். ஆனால் ஜெ., அணியால், அவரது ஆட்சி, எண்ணி 24 நாட்களில் கவிழ்ந்தது.

அடுத்து, பீஹாரின் லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றதால், சமையலறையில் சப்பாத்தி சுட்டுக் கொண்டிருந்த மனைவி ரப்ரி தேவியை முதல்வராக்கி விட்டு, சிறைக்கு சென்றார்.

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் கதை என்னவென்று இன்னும் தெரியவில்லை. ஒருவேளை அவர் சிறைக்கு சென்றால், ஹேமந்த் சோரன் வழியை பின்பற்றி, தன் கட்சியின் மூத்த தலைவரை முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும்.

நடிகர்களுக்கு பதில் விவசாயிகளை போற்றுவோம்!


ர.பிரேம் குமார், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழ் நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு, 5 கோடி முதல் 50 கோடி வரை. சராசரியாக 10 கோடி ரூபாய். இதை, மாதம் 70,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு ஐ.டி., ஊழியர் சம்பாதிக்க, 125 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்.

மாதம் 30,000 ரூபாய் சம்பாதிக்கும் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், 250 ஆண்டுகளும், மாதம் 25,000 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு அரசு ஊழியர், 333 ஆண்டுகளும் பணியாற்ற வேண்டும்.

இதே 10 கோடி ரூபாயை சம்பாதிக்க, அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி, 760 ஆண்டுகளும், தினசரி 300 ரூபாய் வருமானம் பெறும் கூலி தொழிலாளி, 1,000 ஆண்டுகளும் உழைக்க வேண்டும்.

நடிகர் - நடிகையர் பயன்படுத்தும் கார்களின் விலை, 50 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை. படப்பிடிப்பு தளங்களில் இவர்களது சொகுசு வாழ்க்கை, இந்திரன் கூட அனுபவிக்காதது.

வெளிநாட்டு மது, நட்சத்திர ஹோட்டல் உணவு, ஒப்பனைக்கு, உடை அணிவிக்க, குடை பிடிக்க என பலர், கொஞ்சம் வியர்த்தாலும், 'குளுகுளு' கேரவனில் ஓய்வு. நட்சத்திர ஹோட்டலில் இவர்களின் ஒரு வேளை உணவு கட்டணம், நம் விவசாயிகளின் ஒரு மாத உணவுச்செலவு.

ஓராண்டில், மூன்று படங்களில் நடித்து, 50 கோடி ரூபாய் சம்பாதித்து, 10 கோடி வரி ஏய்ப்பு செய்து, 5,000 ரூபாய்க்கு ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி கொடுத்து விளம்பரம் தேடுவர்.

பல முன்னணி கட்டுமான நிறுவனங்கள், கோடிகளில் கட்டடங்கள் கட்டுவது இவர்களிடம் விற்க தான். திரையரங்கில் நாம் செலுத்தும் பணம் தான், இவர்களுக்கு சம்பளம்.

இவ்வளவு சம்பாதிக்கும் நடிகர்களின் ரசிகர்கள் யாரென்றால், இலவச அரிசிக்கு ரேஷனில் சண்டை போடும் அப்பாவி ஏழைகளின் பிள்ளைகள் தான்.

எனவே, மக்கள் சிந்திக்க வேண்டும். மூன்று மணி நேர திரைப்படத்திற்கு எவ்வளவு கேட்டாலும் கொடுக்கிறோம்; ஆனால், விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து பயிரிட்ட காய்கறிகளை வாங்க பேரம் பேசுகிறோம்.

இந்த உலகில் எது இல்லை என்றாலும் வாழ்ந்து விடலாம். ஆனால், உணவு இல்லை என்றால் வாழவே முடியாது. ஒரு விவசாயி தெய்வத்துக்கு சமம். ஆகவே, நடிகர்களை ஆராதிப்பதை விட்டுவிட்டு, விவசாயி களை போற்றுவோம்!






      Dinamalar
      Follow us