தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பொக்கிஷம்/இமயமலையின் உச்சியில் தமிழ் கடவுள் முருகன்

இமயமலையின் உச்சியில் தமிழ் கடவுள் முருகன்

இமயமலையின் உச்சியில் தமிழ் கடவுள் முருகன்


PUBLISHED ON : ஜூன் 02, 2026 04:12 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 02, 2026 04:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ் கடவுளான முருகப்பெருமான், தமிழகத்தில் அறுபடை வீடுகளில் அமர்ந்து அருள்பாலிப்பது நமக்குத் தெரியும். ஆனால், தமிழக எல்லையைத் தாண்டி, விண்ணைத் தொடும் இமயமலைத் தொடரின் உச்சியில், 12,000 அடி உயரத்தில் நம் ஊர் முருகன் 'கார்த்திக் சுவாமி' என்ற பெயரில் வீற்றிருப்பது பலரும் அறியாத ஒரு ஆன்மிக அதிசயமாய் விளங்குகிறது. இந்தியாவின் வடக்கையும் தெற்கையும் ஆன்மிக ரீதியாக இணைக்கும் இந்த உன்னதத் தலத்திற்கு வருமாறு முருக பக்தர்களுக்கு உத்தரகண்ட் அரசு தற்போது அழைப்பு விடுத்துள்ளது.Image 1583296தமிழகத்தில் சிவபெருமானின் மூத்த மகனாக விநாயகரும், இளைய மகனாக முருகனும் வழிபடப்படுகின்றனர். ஆனால், வட மாநிலங்களில் சிவனின் மூத்த மகனாக முருகனையும், இளைய மகனாக விநாயகரையும் மக்கள் வழிபடுகின்றனர்.Image 1583297முருகப்பெருமான் தன் தந்தை சிவனின் மீது கொண்ட பக்தி மற்றும் கோபத்தின் காரணமாக ஒரு யாகம் வளர்த்து, தன் சதை முழுவதையும் அதில் ஆஹூதியாகப் போட்டார். அவரது இந்த அசாத்திய பக்தியில் உருகி சிவபெருமான் அங்கே எழுந்தருளினார். இவ்வாறு கார்த்திக் சுவாமி தவம் செய்த இடமாகவும், அவருக்குச் சிவன் காட்சி கொடுத்த தலமாகவும் கருதப்படும் இடமே, தற்போது இமயமலை உச்சியில் அமைந்திருக்கும் கிரவுஞ்ச மலை 'கார்த்திக் சுவாமி கோவில்' ஆகும்.Image 1583298தென்னிந்தியாவில் முருகன் வள்ளி, தெய்வானையோடு திருமணக் கோலத்தில் காட்சியளிக்கிறார். ஆனால், வட இந்திய மரபில் கார்த்திக் சுவாமி தீவிரமான பிரம்மச்சாரியாக, துறவிக் கோலத்தில் பார்க்கப்படுகிறார். வட மாநில மக்கள் இவரை இப்பகுதியின் முதன்மைக் காவல் தெய்வமாகக் கருதி வழிபடுகின்றனர். உலகிலேயே முருகன் எலும்பு வடிவிலும், சுயம்பு மூர்த்தியாகவும் காட்சியளிப்பது இந்த ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் என்பது இதன் தனிச்சிறப்பு.Image 1583299இக்கோவிலின் வளாகம் முழுவதும் பக்தர்களால் நேர்த்திக்கடனாகக் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான மணிகள் தொங்குகின்றன. மலையின் பலத்த காற்றில் இந்த மணிகள் ஒலிக்கும்போது, அது ஓம்கார நாதம் போலப் பள்ளத்தாக்கு முழுவதும் எதிரொலிப்பது சிலிர்க்க வைக்கும் அனுபவமாகும்.Image 1583300இக்கோவில் உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் - போகாரி சாலையில், கணக்சவுரி கிராமத்துக்கு அருகில் உள்ளது. இந்த மலையின் உச்சியில் இருந்து பார்த்தால் கைலாய மலைத் தொடர்களான ஜானோன்லி, கங்கோத்ரி, பர்த்தே குண்டா, கேதார்நாத், சுமேரு பிரபாத், மந்தாகினி பர்வதம், மற்றும் சவுக்கம்பா ஆகிய பனி படர்ந்த இமயமலைச் சிகரங்களை 360 டிகிரியில் கண்கொள்ளாக் காட்சியாக ரசிக்கலாம்.

பயணிக்க உகந்த காலம் மற்றும் கோவில் நேரங்கள்இமயமலையின் ஆபத்தான பிற பகுதிகளைப் போலன்றி, இந்த கார்த்திக் சுவாமி கோவிலுக்குச் செல்வது சற்று எளிதானது. அக்டோபர் முதல் ஜூன் வரையிலான காலம் இங்கு பயணிக்க ஏற்ற காலமாகும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் வரும் பௌர்ணமி நாட்கள், குறிப்பாகக் கார்த்திகை பௌர்ணமி நாட்களிலும், ஜூன் மாதத்தில் 11 நாட்கள் நடக்கும் கலச யாத்திரை நிகழ்விலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இக்கோவில் நாள்தோறும் காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.

விமானம் மூலம்: சென்னையில் இருந்து உத்தரகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் உள்ள 'ஜாலி கிராண்ட்' விமான நிலையத்திற்குச் செல்லலாம். அங்கிருந்து கார்த்திக் சுவாமி கோவில் 205 கி.மீ. தொலைவில் உள்ளது.ரயில்/பேருந்து மூலம்: சென்னையில் இருந்து டெல்லி சென்று, அங்கிருந்து ஹரித்வார் அல்லது ரிஷிகேஷ் ரயில் நிலையத்தை அடையலாம். ரிஷிகேஷ் அல்லது ஹரித்வாரில் இருந்து பேருந்து (Bus) அல்லது கார் மூலம் ருத்ரபிரயாக் நகரை அடைய வேண்டும் (சுமார் 140 கி.மீ). இது கேதார்நாத் செல்லும் வழியில் உள்ள ஒரு முக்கிய நகரமாகும்.

ருத்ரபிரயாக்கில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள கணக்சவுரி கிராமத்திற்கு உள்ளூர் வாகனங்கள் மூலம் செல்லலாம். இந்தக் கிராமத்தில் இருந்து மலை உச்சிக்குச் செல்ல 3 கி.மீ தூரத்திற்குச் சிமெண்ட் மற்றும் கரடுமுரடான பாறைப் பாதைகள் கொண்ட எளிய நடைபயணப் பாதை (Trek) உள்ளது. அடர்ந்த பசுமையான காடுகளின் வழியே இயற்கையை ரசித்தபடி 1 முதல் 2 மணி நேரத்தில் கோவிலை அடைந்துவிடலாம்.

கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய சார் தாம் யாத்திரை செல்லும் ஆன்மிகப் பயணிகள், தங்களின் வழியில் உள்ள இந்த கார்த்திக் சுவாமி கோவிலுக்கும் எளிதாகச் சென்று வரலாம். உத்தரகண்ட் சுற்றுலாத் துறையும், தமிழகத்தின் ஆன்மிகப் பெரியோர்களும் இணைந்து ஆண்டுதோறும் இங்கே சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். பனி படர்ந்த இமயமலையின் உச்சியில், தியாகத்தின் வடிவமாய் நிற்கும் தமிழ் கடவுள் கார்த்திக் சுவாமியைத் தரிசிப்பது ஒவ்வொரு முருக பக்தனின் வாழ்நாள் லட்சியமாகும்!

கூடுதல் தகவல்களுக்கு: கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பார்க்கவும்: www.kartikswami.com

-கட்டுரை:ராஜேஷ்-படங்கள்:சுரேஷ் கண்ணன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us