தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ தேசியவாதிகளா காங்கிரசார்?

 தேசியவாதிகளா காங்கிரசார்?

 தேசியவாதிகளா காங்கிரசார்?

1


PUBLISHED ON : ஆக 26, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 26, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.கந்தன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாடு விடுதலை அடைவதற்கு முன், வீதிக்கு வீதி, 'வந்தே மாதரம்; பாரத மாதாவுக்கு ஜெய்' என்று முழங்கி கொண்டிருந்த காங்கிரசார், தற்போது, வந்தே மாதரம் பாட மறுப்பதோடு, அந்த வார்த்தைகளை கூட சொல்ல மறுக்கின்றனர்.

காரணம், பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, 'வந்தே மாதரம் பாடலை அரசு நிகழ்ச்சிகளின் துவக்கத்தில் கண்டிப்பாக பாடியே ஆக வேண்டும்' என்று உத்தரவிட்டிருப்பது தான்!

இதே மத்தியில் காங்., ஆட்சியில் இருந்து, இதுபோன்று ஓர் உத்தரவு போட்டிருந்தால், பா.ஜ.,வினர் நிச்சயம் எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டார்கள்; மகிழ்ச்சியுடன் ஏற்றிருப்பர்.

ஆனால், விடுதலைக்கு பாடுபட்ட கட்சி என்று வார்த்தைக்கு வார்த்தை கூறும் காங்கிரசார், வந்தே மாதரம் பாடலை பாட எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றால், இவர்கள், சுதந்திர போரில் பங்காற்றியவர்களின் வழியில் வந்தவர்கள் அல்ல; இந்திராவின் வழியில் வந்தவர்கள்!

இவர்களுக்கும், விடுதலை போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதால் தான், விடுதலை வேட்கையை துாண்டிய பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

சுதந்திர தினத்தன்று, காங்., கட்சி அலுவலகத்தில் வந்தே மாதரம் பாடல் பாடிய போது, முகம் சுளித்து, அதை பாதியிலேயே நிறுத்துமாறு சைகை செய்தார், இத்தாலியில் பிறந்து, இந்தியாவை ஆளத் துடித்த முன்னாள் காங்., தலைவி சோனியா.

அதை அப்படியே வழிமொழிந்தார், இங்கிலாந்து குடிமையுரிமை வைத்துள்ள ராகுல்.

இவர்களை எஜமானர்களாக கொண்டுள்ள காங்கிரசாருக்கு எப்படி தேசப்பற்று இருக்கும்?

அதனால் தான், பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மதிக்காமல், எதிர்ப்பு குரல் எழுப்புகின்றனர்; இந்திய நாட்டு சட்டத்திற்கு கட்டுப்பட மறுக்கின்றனர்!

இந்த அரசியல் அரிதாரிகளை அடையாளம் கண்டு கொள்ளாவிட்டால், அந்நிய நாட்டிற்கு, நாமே அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததற்கு ஒப்பாகி விடும்!

-----

நீதி நிலைநாட்டப் படுவதில்லையே!


ஆ.வேலுச்சாமி, ஒய்.எம்.ஆர்., பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: நீதிமன்றங்கள் விரைவாக நீதி வழங்க வேண்டும் என்பது குறித்து, இப்பகுதியில் வாசகர் ஒருவர் எழுதியிருந்தார்.

அதில், 'நீதிமன்றங்களில் பல லட்சம் வழக்குகள் தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன; இப்படி இருந்தால் எப்படி குற்றங்கள் குறையும்?' என்று ஆதங்கப்பட்டிருந்தார்.

என் வயது, 88; ஆதரவற்ற முதியவர். எந்த வேலையும் செய்ய முடியாது. முதுமை கால நோய்கள் என்னை தின்று கொண்டு இருக்கின்றன. பசிக்கு குறித்த நேரத்தில் உணவு கூட கிடைப்பது இல்லை.

இந்நிலையில், என் ஒரே மகனிடம், உயிர் வாழ பொருளுதவி ஜீவனாம்சம் வேண்டி, 2010ல் நீதிமன்றத்தை நாடினேன்.

திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாதம் 7,500 ரூபாய் என் மகன் எனக்கு தர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. பெற்ற தந்தையின் வாழ்வாதார செலவுக்கு பணம் கொடுக்க மறுத்து, அந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மேல் முறையீடு செய்தார், என் மகன்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையும் எனக்கு பொருளுதவி தரவேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. ஆனாலும், பொருளுதவி கிடைக்கவே இல்லை.

பின், திண்டுக்கல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு அளித்தேன். அங்கும் எனக்கு சாதகமாக தீர்ப்பு வரவே, அதை எதிர்த்து உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், இரண்டாவது அப்பீல் தாக்கல் செய்தார், என் மகன்.

கடந்த 2022, மார்ச் 24ல் எனக்கு வாழ்நாள் ஜீவனாம்சம் தர வேண்டும் என, இறுதி தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். ஆனாலும், இன்று வரை எனக்கு ஜீவனாம்சம் கிடைக்கவே இல்லை.

நான்கு நீதிமன்றங்கள் தீர்ப்புகள் அளித்தும், 16 ஆண்டுகள் கடந்தும், பெற்ற பிள்ளையிடமே எனக்கு நீதி கிடைக்கவில்லை.

இதில், லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக வாசகர் கவலைப்பட்டுள்ளார். நீதிமன்றங்கள் உத்தரவிட்டாலும், இங்கு நீதி நிலைநாட்டப்படுவதில்லை என்பதே உண்மை!

------

வேலைகளுக்கான தளர்வும் லஞ்சமே!


கா.ஜெயமணி, புதுக்குப்பம், கடலுார் மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: தேர்தலின்போது வாக்குறுதிகளை வாரி இறைப்பதும், ஆட்சிக்கு வந்தபின், நிதிநிலை சரி இல்லை என்பதும், கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என, எதிர்க்கட்சியினர் கேட்பதும் வாடிக்கையாகி விட்டது.

தேவைப்படுவோருக்கு மட்டுமல்லாமல், எல்லாருக்கும் இலவசம் வழங்குவது கூட, ஓட்டுக்காக முன்கூட்டியே வழங்கப்படும் ஒருவகை லஞ்சம் தான்.

எனவே, தற்போதுள்ள அரசு, புதிய இலவச திட்டங்களை நிறைவேற்றும்போது, தேவைப்படும் நிலையில் உள்ளவர்களை ஆய்வு செய்து தர வேண்டும்.

அதேபோன்று, ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ஊரக மேம்பாட்டிற்காகவும், உள்ளூர் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் கொண்டு வரப்பட்ட அற்புத திட்டம்.

ஆனால், பெரும்பாலான இடங்களில் உரிய பணிகள் முறையாக நடைபெறுவதில்லை. பணி செய்வோரிடம் அதிகம் வேலை வாங்கினால், அடுத்தமுறை ஓட்டு கிடைக்காது என, அப்பணிகளுக்கு தலைமை தாங்குவோரும், அலுவலர்களும் கண்டுகொள்வதில்லை.

இவ்வாறு கண்டுகொள்ளாமல் வழங்கப்படும் தொகையும் ஒருவகை லஞ்சம் தான்; பணி செம்மையாக நடைபெற அரசு ஆவன செய்ய வேண்டும்!

------

ஓய்வூதிய பலன்கள் வேண்டும்!


செ.ரவிச்சந்திரன், சிதம்பரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, கடந்த பல ஆண்டுகளாகவே நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது, அரசே நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில், பணி ஓய்வு பெற்ற, 500க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படவில்லை. 15 ஆண்டுகளுக்கான ஓய்வூதிய பலன்களும் நிலுவையில் உள்ளன. தினமும் பல்கலையில் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஓய்வூதியர்கள் போராடி வருகின்றனர்.

நிதி நெருக்கடியை காரணம் காட்டி, போராட்டத்தை கண்டுகொள்ள மறுக்கிறது, அரசு.

அதேநேரம், அனைத்து எம்.எல்.ஏ.,-க்களுக்கும் அரசு சார்பில் கார் மற்றும் அதற்கான படி, ஓட்டுநர் சம்பளம், இதர படிகள் முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஊழியர்களின் நிலையை அரசு சற்று சிந்தித்து பார்த்து, எந்த சாக்கு போக்கும் சொல்லாமல், ஓய்வூதிய பலன்களை காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us