தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ மனசாட்சி உறுத்தவில்லையா?

 மனசாட்சி உறுத்தவில்லையா?

 மனசாட்சி உறுத்தவில்லையா?

1


PUBLISHED ON : ஆக 25, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 25, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வி.மோகன், நெல்லிக்குப்பம், கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அண்ட புளுகர்களை மிஞ்சிய ஆகாச புளுகர்கள் எவர் என்று கேட்டால், அது, தி.மு.க.,வினர் தான்!

சட்டசபையில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, 'தி.மு.க., ஆட்சியில் நெல்மூட்டைகள் மழையில் நனையாதபடி பார்த்துக் கொண்டோம்; ஆனால், தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தமிழகம் முழுதும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின்றன. இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் ' என்று கூறி, நீலிக் கண்ணீர் வடித்துள்ளார், தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம்.

த.வெ.க., என்னமோ, 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தை ஆட்சி செய்தது போலவும், விவசாயிகளை கண்டு கொள்ளாமல் கைவிட்டது போலவும் பேசியுள்ளார்.

தமிழகத்தை, 60 ஆண்டுகளுக்கும் மேலாக, தி.மு.க., - அ.தி.மு.க.,வும் தானே மாறி மாறி ஆட்சி செய்தன? அப்போது, மாவட்டத்திற்கு நான்கு தானிய கிடங்குகளை கட்டியிருந்தால், இன்று ஏன் விவசாயிகள் பாதிக்கப்படப் போகின்றனர்?

பல ஊர்களில் சாலையோரங்களிலும், திறந்தவெளியிலும் கொள்முதல் நிலையங்களை அமைத்ததால் தானே, இன்றும் பல இடங்களில் திறந்த வெளியில் நெல் மூட்டைகள் அடுக்கப்பட்டு, மழையில் நனைந்து, நெல் மணிகள் முளைப்பு விட்டு, விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இரு திராவிட கட்சிகளின் ஆட்சிகளின் போது செய்த ஊழலில், பாக்கெட்டில் நிரம்பி கீழே சிந்திய பணத்தில் தானிய குடோன்கள் அமைத்திருந்தால் கூட, இன்று நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவது தடுக்கப்பட்டிருக்குமே!

இப்படி தவறுகளின் மூலக்காரணமாக தாங்கள் இருந்து விட்டு, கொஞ்சம் கூட வாய் கூசாமல், 'இப்போதுதான் நெல் மூட்டைகள் மழையில் நனைகின்றன' என்று சொல்கிறார் பன்னீர் செல்வம். இதை சொல்லும் போது மனசாட்சி உறுத்தவில்லையா?

----

வாய்ப்பை தவற விடலாமா?


ஆர்.மகேசன், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு இலவச கார் தேவையில்லை; நாங்கள் இதை ஏற்கமாட்டோம்' என்று கூறியுள்ளார், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி.

அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் இதற்கு காரணம் என்றாலும், இது வரவேற்கத்தக்க முடிவு!

பல ஆண்டுகளாக, எம்.எல்.ஏ.,க்களாகவும் அமைச்சர்களாகவும் வலம் வந்து கொண்டிருந்த, தி.மு.க.,வினரிடம் கோடிக்கணக்கில் பணமும், பல கோடி ரூபாய் மதிப்பில் பல கார்கள் இருக்கும்போது, அவர்களுக்கு, 'ஓசி' கார்கள் தேவையில்லை தான்!

கடந்த தேர்தலின்போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தன் பிரமாண பத்திரத்தில், சொந்தமாக கார் இல்லை என்றும், ரொக்கமாக, 10,000 ரூபாய்தான் கையிருப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்ததைக் கண்டு, உடன் இருந்த தி.மு.க., தொண்டர்களே திரும்பி நின்று சிரித்தனர்.

தேர்தல் கமிஷன் காதுகளில் பூ சுற்றினாலும், தமிழக மக்கள் காதில் சிறு பூ இதழைக் கூட கிள்ளி வைக்க முடியவில்லை. சமூக வலைதளங்களில் ஸ்டாலினை வறுத் தெடுத்தனர்.

தி.மு.க.,வை சேர்ந்த சாதாரண வார்டு கவுன்சிலருக்கே, பல லட்சம் ரூபாய் மதிப்பில் சொந்தமாக கார் இருக்கும்போது, பல முறை எம்.எல்.ஏ.,வாக, மாநகர மேயராக, துணை முதல்வராக, மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்த ஒருவருக்கு, சொந்தமாக கார் இல்லை என்று சொன்னால், முழு மூடர்கள் கூட நம்ப மாட்டார்கள்.

அவ்வகையில், 'எங்களிடம் கார் இருக்கிறது; விஜய் அரசு கொடுக்கும் கார் தேவையில்லை' என்று புறக்கணித்திருக்கும் உதயநிதியின் நேர்மையை பாராட்டலாம்.

'காருக்கு செலவாகும் நிதியை வைத்து, நெல் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கலாம்' என்று அருமையான ஆலோசனையை முன் வைத்துள்ளார், பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ., சவுமியா அன்புமணி. இதுபோன்று ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் அரசியல் தலைவர்கள் நம்மிடையே இல்லாமல் போனது தான், தமிழகத்தின் கடன் சுமைக்கு காரணம்!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், அரசியலுக்கு புதியவர்கள் பலர், எம்.எல்.ஏ.,க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உண்மையாகவே, அவர்கள் கார் வாங்கும் வசதியற்றவர்களாக இருக்கலாம்; அவர்களுக்கு முதல்வர் உதவ நினைத்தால், ஒரு தொகையை கார் வாங்க மானியமாகக் கொடுக்கலாம். இதன்வாயிலாக தேவையில்லாத பணவிரயம் தடுக்கப்படும்.

கேரள முன்னாள் முதல்வர் ஏ.கே.அந்தோணி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி போன்றோர், சைக்கிளிலும், இரு சக்கர வாகனங்களிலும் பயணித்து, மக்களோடு மக்களாக எளிய வாழ்க்கை வாழ்ந்த னர், வாழ்கின்றனர்.

த.வெ.க.,வில் உள்ள இளம் தலைமுறை எம்.எல்.ஏ.,க்களும், அமைச்சர்களும் இவர்களை பார்த்து பாடம் கற்றுக்கொண்டால், உங்களுக்கென்று தமிழக அரசியலில் நிரந்தர இடம் கிடைக்குமே... வாய்ப்பை தவற விடலாமா?

----

வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்!


அ.சேகர், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபையில் முதல்வர் விஜய், 'என் மேஜையில் மூன்று ஊழல் கோப்புகள் உள்ளன; அதை தற்போது திறக்க வைத்து விட வேண்டாம்' என்று கூற, 'சவால் விடுகிறேன்; முதல்வர் அந்த கோப்புகளை திறந்து பார்க்க வேண்டும்; உண்மையாகவே ஆதாரங்கள் இருந்தால், எவராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள். அதைவிடுத்து, இந்த உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்படுபவர் அல்ல நாங்கள்' என்று கூறியுள்ளார், தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி.

அவரது இந்த தைரியத்திற்கு காரணம், தி.மு.க.,வினர் தங்களை பாதுகாத்துக் கொள்ள மிகப்பெரிய வழக்கறிஞர் அணியை உச்ச நீதிமன்றம் வரை வைத்துள்ளது தான்!

அவர்களை கைது செய்தால், ஜாமினில் வருவதற்கும் அல்லது வழக்கு பதிவு செய்தால் முன் ஜாமின் பெறுவதற்கும், தப்பித் தவறி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தால், அந்த வழக்குகளை வாழ்நாள் முழுதும் இழுத்தடிப்பு செய்து, ஒன்று இல்லாமல் செய்து விடவும் அவர்களால் முடியும்.

முன்னாள் தி.மு.க., அமைச்சர் செந்தில் பாலாஜியே இதற்கு மிகச் சிறந்த உதாரணம்!

இன்று தி.மு.க.,வில் வெற்றி பெற்று சட்டசபையில் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் பலர் மீது, பல்வேறு ஊழல் வழக்குகள் மற்றும் குற்றச் சாட்டுக்கள் உள்ளன.

ஊழலுக்கு எதிரானவர் என்று கூறி வரும் முதல்வர் விஜய், உடனடியாக தன் மேஜையில் உள்ள ஊழல் கோப்புகளை திறந்து, அவர்கள் யார் என்பதை தமிழக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us