PUBLISHED ON : ஆக 15, 2026 01:01 AM

ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
அ.தி.மு.க.,வில் இருந்து பல நிர்வாகிகள், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு தாவியுள்ளனர். எம்.எல்.ஏ., பதவியில் இருந்தவர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, த.வெ.க.,வில் இணைந்துள்ளனர். வந்து சேரும் இவர்களுக்கு எல்லாம் துணை பொதுச்செயலர், அமைப்பு செயலர், மாவட்ட செயலர் என பதவிகள் வாரி வழங்கப்படுகின்றன.
அவ்வகையில், ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு, புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலர் மற்றும் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலர் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதேபோல், ஊழல் வழக்கில் தொடர்புடைய அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கும் துணை பொதுச்செயலர், கரூர் மாவட்ட அமைப்பு செயலர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையாவுக்கு தென்காசி மாவட்ட அமைப்பு செயலர் மற்றும் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலர் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சி.விஜயபாஸ்கர் மீது இருந்த மருத்துவத் துறை ஊழல் குற்றச்சாட்டுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
'அமைச்சர்கள் ஊழல் புகாரில் சிக்கினால் அவர்கள் பதவி பறிக்கப்படும்; இதில் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடே கிடையாது' என்று, தன் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்தவர், முதல்வர் விஜய்.
அப்படி இருக்கும் போது, ஊழலில் திளைத்த இவர்களை, தன் கட்சியில் சேர்த்தது மட்டுமின்றி, அவர்களுக்கு பதவிகளும் கொடுத்துள்ளார், முதல்வர்.
இரும்பு பிடித்த கையும், சிரங்கு பிடித்த கையும் சும்மா இருக்குமா?
அதிகாரிகள் மனதில் கொள்வது நல்லது!
முனைவர் பெ.வை.சே.கணேஷ் சுப்பிரமணி, பெரியகுளம், தேனி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்:
கோவில்களுக்குள் பக்தர்கள் மொபைல் போன் எடுத்துச் செல்லவும், வி.ஐ.பி.,க்கள் தரிசனத்திற்கு பல்வேறு கட்டுப் பாடுகளையும் விதித்துள்ளது, அறநிலையத் துறை.
இதேபோன்று, அறநிலையத் துறையின் ஒவ்வொரு உத்தரவும் சட்டத்திற்கு உட்பட்டு, பொதுநல நோக்கத்துடன் இருக்க வேணடும்.
ஓர் அதிகாரி பிறப்பிக்கும் உத்தரவு, பக்தர்களின் வழிபாட்டு நடைமுறையை மாற்றக்கூடியதாக இருந்தால், அதன் காரணம் தெளிவாக விளக்கப்பட வேண்டும்.
குறிப்பாக, பல தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் கோவில் மரபுகளில் மாற்றம் தேவைப்பட்டால், அதற்கான காரணங்களை பக்தர்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
ஏனெனில், தமிழகத்தில் உள்ள பல கோவில்களுக்கும் நுாற்றாண்டுகள் பழமையான வழிபாட்டு மரபுகள் உள்ளன. திருவிழாக்கள், பூஜை நேரங்கள், ஊர்வலங்கள், அர்ச்சனை முறைகள், கோவில் சார்ந்த சமூகப் பழக்கவழக்கங்கள் பல தலைமுறைகளாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, கூட்ட நெரிசல் போன்ற காரணங்களால், சில மாற்றங்கள் அவசியம் தான் என்றாலும், மாற்றம் செய்யும்போது பாரம்பரியத்தின் நோக்கத்தையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
இதற்காக கோவில் நிர்வாகம், அர்ச்சகர்கள், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய ஆலோசனைக் குழுக்கள் அமைக்கலாம். இதனால், நிர்வாக முடிவுகள் ஒருதலைப்பட்சமானவை என்ற எண்ணம் குறையும்.
மேலும், வழிபாட்டு நேரத்தில் மாற்றம், சிறப்பு தரிசன நடைமுறை, கட்டண சேவைகள், திருவிழா ஏற்பாடுகள் போன்றவற்றில் மாற்றம் செய்தால், முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடுவது அவசியம். இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்புவது தடுக்கப்படும்.
இன்றைய டிஜிட்டல் காலத்தில், ஒவ்வொரு கோவிலுக்கும் தனிப்பட்ட இணையதளம் அல்லது ஒருங்கிணைந்த இணையதள பக்கம் உருவாக்கி, கோவிலின் வரவு - செலவு அறிக்கை, திருப்பணி நிலவரம், கோவில் சொத்து, ஏலம் மற்றும் வாடகை விபரங்கள் போன்றவற்றை பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வைக்க முடியும்.
வெளிப்படைத்தன்மை அதிகரித்தால் குற்றச்சாட்டுகளும், சந்தேகங்களும் குறையும்.
மேலும், ஒவ்வொரு கோவிலிலும் பக்தர்கள் குறைதீர் மையமும், ஆன்லைன் புகார் வசதியும் ஏற்படுத்தி, புகார்களுக்கு பதிவு எண் வழங்கி, அவற்றின் நிலையை இணையத்தில் அறியும் வசதியை உருவாக்கலாம்.
இதன் வாயிலாக பக்தர்கள், அதிகாரிகளை நேரடியாக அணுக வேண்டிய அவசியம் குறையும்; நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும்.
கோவில் நிர்வாகத்தின் வெற்றி என்பது, ஒரு சாதாரண பக்தர் எந்த சிரமம் இன்றி சுவாமியை அமைதியாக வழிபடு வதில் தான் உள்ளது.
இதை, அறநிலையத் துறை அதிகாரிகள் மனதில் கொள்ள வேண்டும்!
ஒரே நேரத்தில் இரு வேலைகளை செய்வரா?
எஸ்.ஆர்.த்ராவிட், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழக வெற்றிக் கழக அரசு, சத்துணவில் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறதாம்.
இதை பத்திரிகையில் படித்ததும், ஒரு கதைதான் நினைவுக்கு வந்தது...
ஒரு குருகுலத்தில், மாணவர்களுக்கு உணவு பறிமாறிக் கொண்டிருந்தார், குருவின் மனைவி. ஒரு கைப்பிடி உணவை எடுத்து உண்ட ஒரு மாணவன், 'அம்மா... இந்த உணவில் விளக்கெண்ணெய் வாசம் அடிக்கிறதே...' என்றானாம்!
உடனே குருவின் மனைவி, 'இவ்வளவு நாளும் விளக்கெண்ணெயில் சமைத்த உணவை தான் உங்கள் அனைவருக்கும் பறிமாறினேன். படிக்கும் ஆர்வத்தில் இருந்ததால், உனக்கு உணவின் ருசி தெரியவில்லை. இப்போது ருசி பார்க்க துவங்கி விட்டாய்; இனி, ஒழுங்காக படிக்க மாட்டாய். அதனால், உன் குருகுல வாசம் முடிந்தது. நீ வீட்டுக்கு செல்லலாம்' என்றாராம்!
இக்கதையைப் போல், உணவின் ருசிக்காக மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் தான். ஆனால், பிரியாணியின் சுவைக்காக சேர்க்கப்படும் மசாலா பொருட்களால், உணவு உண்டதும் ஒரு மந்தம் ஏற்படும்.
உண்ட மயக்கத்தில், வகுப்பறையில் மாணவர்கள் துாங்கி வழிவரே தவிர, பாடத்தை கவனிக்க மாட்டார்கள்.
மேலும், அரசு பள்ளிகளில் அசைவம் சாப்பிடுவோர் மட்டும் கல்வி கற்பதில்லையே... சைவ உணவு உண்ணும் பிராமணர், சைவபிள்ளை, சைவ மரபில் வந்த செட்டியார், முதலியார் போன்ற பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த பிள் ளைகளும் படிக்கின்றனர்.
மாற்று ஏற்பாடாக அவர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி வழங்குவதாக வைத்துக் கொண்டாலும், ஒரு பள்ளியில் ஒரு சமையல்காரர் மட்டுமே இருப்பார். அவருக்கு உதவியாளர்கள் கூட இருக்க மாட்டார்கள். இத்தகைய சூழ்நிலையில், ஒரே நேரத்தில் இரு வகை உணவை சமையல் பணியாளரால் தரம் நிறைந்ததாக செய்ய முடியுமா?
அரசு யோசிக்க வேண்டும்!
