/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
ஒரு இன்ச் மீனை கூட விற்க முடியாது!
/
ஒரு இன்ச் மீனை கூட விற்க முடியாது!
PUBLISHED ON : நவ 14, 2024 12:00 AM

சி.சிவகுமார்,
கீழக்காட்டூர், தஞ்சை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: புதிய கட்சி துவங்கி உள்ள விஜய், இருமொழிக் கொள்கையை ஆதரிப்பதாக
அறிவித்துள்ளார்.
அப்படி எனில், இவர் நடித்த பல படங்கள், மற்ற மொழிகளில், 'டப்' செய்யப்பட்டு வெளியானதே... ஏன் தடுக்கவில்லை?
மற்ற மாநிலங்களில் இவர் படங்கள் வெளியானதே... ஏன் தடுக்கவில்லை?
'மீன்
கொடுப்பதை விட, மீன் பிடிக்கக்கற்றுக் கொடுப்பதே சிறந்தது எனச்
சொல்கின்றனர்; நாங்கள் மீனும் வாங்கிக் கொடுப்போம்; மீன் பிடிக்கவும்
கற்றுக் கொடுப்போம்' என, தன் முதல் மாநாட்டில், ஆவேசமாக பேசினார் விஜய்.
அதாவது, அனைத்து கட்சிகளையும் தாண்டி யோசிக்கிறாராம்!
மக்கள்
மீனையும், பணத்தையுமா கேட்கின்றனர்? 'எங்களுக்கு மீனும் கிடைக்கிறது; மீன்
பிடிக்கவும் தெரியும்... அதை விற்பனை செய்ய, இடைத்தரகர்கள் இல்லாமல்,
சந்தைப்படுத்த வழி ஏற்படுத்துங்கள்' என்று தான் கேட்கின்றனர்.
இந்த பாயின்டை விஜய் சிந்திக்காமல் விட்டது ஏன்?
அவர் பாணியிலேயே பேசுகிறேன்...
சாரி...
சாரி... சாரி... ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்... இருமொழிக் கொள்கையை வைத்துக்
கொண்டு, இடைத்தரகர் இல்லாமல், ஒரு இன்ச் மீனைக் கூட நேரடியாக விற்பனை
செய்ய முடியாது! புரியுதுங்களா?
ஜம்மு -- காஷ்மீர் சட்டசபையில் பிரிவினைவாதம்!
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சிறப்பு அந்தஸ்து என்ற தவறான, காலத்திற்கு ஒவ்வாத சட்டம், ஜம்மு - காஷ்மீர் மக்களை இந்திய தேசிய நீரோட்டத்தில்கலக்க விடாமல் முட்டுக்கட்டை போட்டது.
இதை நம் எதிரிகளானபாகிஸ்தான், சீனா போன்றவை, உள்ளூர் தேச விரோத அரசியல்வாதிகளின் ஒத்துழைப்போடு, தவறாக பயன்படுத்தி, தீவிரவாத, பிரிவினைவாத, வன்முறை அரசியல் செய்து வந்தன. பெரும்பாலான ஹிந்துக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த சரித்திர தவறை உணர்ந்து, தேசநலன் கருதி பா.ஜ., சரி செய்தது. ஆனால் தேச விரோத சக்திகள் சில, நீதிமன்றங்களை நாடி சட்டசபை தேர்தல் நடத்த உத்தரவு பெற்றன. தேர்தலையும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் மத்திய அரசு நடத்தியது.
ஆனால் சட்டசபை கூடிய உடன், அதே பிரிவினைவாத சக்திகள், பழைய, தள்ளுபடி செய்யப்பட்ட சிறப்பு அந்தஸ்தை, மறுபடியும் அளிக்க வேண்டும் என்று கூறி மசோதாவை நிறைவேற்றின.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற பெயரில், பிரிவினைவாதத்திற்கு மூலமாக இருந்த சட்டத்தை, மீண்டும் தர வேண்டும் என்று மசோதா நிறைவேற்றுவது வன்மை யாக கண்டிக்கதக்கது.
பிரிவினைவாதத்திற்கு துணைபோகும் இத்தகைய கட்சிகள், அதன் உறுப்பினர்கள், அதற்கு ஆதரவளித்தவர்கள் மீது, சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இது போன்ற பிரிவினைவாத அரசியல்வாதிகள், சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதும், ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயலே.
மக்கள் பிரச்னைகள் எத்தனையோ இருக்கும் போது, அதைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல், விவாதிக்காமல், பிரிவினைவாதத்திற்கு ஏதுவான சிறப்பு அந்தஸ்திற்கு அப்படி என்ன அவசியம், அவசரம்?
பள்ளி பொறுப்பாளர்கள் கவனத்திற்கு!
ஆர்.நந்தினி, ராமநாதபுரம்,கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: 'மனநிலையை மாற்றுங்கள் பெற்றோரே' என்ற தலைப்பில், மரகதம் சிம்மன் என்பவர் எழுதிய கடிதம், இப்பகுதியில் வெளியாகி இருந்தது; அமெரிக்காவில் மாணவர்களே பள்ளியின் ஒட்டுமொத்த கிளீனிங் வேலையையும் பார்க்கின்றனர் என்று சொல்லி இருந்தார் அவர்.
அவருடைய கருத்தை நான் வரவேற்கிறேன்; ஆனால், அங்குள்ள கல்வி முறையையும் சமூக நிலையையும் இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு உண்மை புரியும். இங்கு, பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு ஏற்றபடி, ஒவ்வொரு கல்வி முறையும் உள்ளது.
இருபது ஆண்டுகளுக்கு முன், நான் பள்ளியில் படித்த போது, எங்கள் வகுப்பறையை நாங்களே குழுவாக சுத்தப்படுத்துவோம்; ஜாதி பேதமே பார்த்ததில்லை. அப்பணியை கடமையாக கருதிச் செய்வோம்.
இன்றும் பல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வகுப்பறைகளை மாணவர்கள் சுத்தம்செய்கின்றனர்; தவறுஇல்லை. ஆனால், கழிப்பறையை சுத்தம் செய்தல்போன்ற செயல்களில், ஜாதிப்பாகுபாடு அடிப்படையில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்என்பது உண்மை;இதனால்தான், மாணவர்களின் பெற்றோர் கொதித்து எழுகின்றனர்.
பள்ளியின் பொறுப்பாளர்கள், பள்ளியை திறந்து மூடும் கடமையோடு தங்கள் பணியைச் சுருக்கிக் கொண்டால், இத்தகைய நிலை ஏற்பட்டு விடும். மாறாக, கல்வியின் சுத்தம் - சுகாதாரம், கற்பித்தலில் தரம், மாணவர்களின் ஆரோக்கிய மனநிலை - உடல்நிலை, ஆசிரியர்களின் மனநிலை - உடல்நிலை ஆகிய அனைத்திலும் கவனம் செலுத்தினால், எந்த பிரச்னையும் ஏற்படாமல், மாநில அளவில் என்ன... சர்வதேச அளவிலும் சாதிக்கலாம்!
ராமேஸ்வரத்திற்கு வருவோர் கடும் அவதி!
பா.நம்புராமநாத், ராமேஸ்வரத்திலிருந்து எழுதுகிறார்: புண்ணிய ஸ்தலம் ராமேஸ்வரத்திற்கு, ஒவ்வொரு நாளும், பல மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. நீண்ட துாரத்திலிருந்து வருவோர், ரயிலை மட்டுமே நம்பி இருக்கின்றனர். மண்டபம் ஸ்டேஷன் இறங்குவதற்குள், மிகமிக அவஸ்தை.
ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தவுடன் ஆட்டோவில் ஏறி, அவர்கள் கேட்கும், மலையளவு கட்டணத்தைக் கொடுத்து, 22 தீர்த்தக் கடலிலும் குளித்து, அவர்கள் கேட்கும், நபருக்கு, 125 முதல் 225 ரூபாய் பணத்தையும் கொடுத்து, வெளியே வருவதற்குள், திக்கித் திணற வேண்டி இருக்கிறது.
மேலும், ருத்ராபிஷேக பூஜைக்கென, 3,000 - 7,000 - 10,000 என, அவரவர் ஏமாறுவதைப் பொறுத்து வசூலிக்கப்படுகிறது.
லாட்ஜ், சாப்பாடு, ஆட்டோ என எதற்கும்,மொழி தெரியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பு சொல்லி மாளாது இதையெல்லாம் கூட சமாளிக்கலாம்... ரயிலை நம்பி ராமேஸ்வரம்வருகின்றனரே... அங்குதான் மிகப்பெரிய பிரச்னை.
பாம்பன் பாலம் இன்னும் திறக்கப்படாததால் தினமும் அவதி.
அக்டோபர் 1,அக்டோபர் 2, அக்டோபர்23, நவ., 20... இல்லை இல்லை... டிச., 4 அல்லது 12... என்ன நடக்கிறது இங்கே? பிரதமர் மோடி திறப்பதற்காக காத்திருக்கின்றனராம்!
அண்ணாமலை வந்தாலும் சரி, பிரதமர் வந்தாலும் சரி... 2026 சட்டசபை தேர்தலுக்குள்ளாவது, பாம்பன் பாலம் திறக்கப்படுகிறதா என்று பார்க்கலாம்!

