PUBLISHED ON : நவ 23, 2024 12:00 AM

க. மூர்த்தி, சென்னையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 67 பேர் பலியானசம்பவம் தொடர்பான வழக்கை, சி.பி.ஐ.,க்குமாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எந்த மர்மமும்கிடையாது; மர்மம் இருந்தால் தானே முடிச்சை அவிழ்ப்பதற்கு! நாங்கள் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக, அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்' என்று கூறியுள்ளார்.
கள்ளச்சாராய பலிகளோ, நிர்வாக குளறுபடிகளால் உண்டாகும் மரணங்களோ,பேனர்கள் விழுந்து ஏற்படும் உயிரிழப்புகளோ, இதுபோன்ற எந்த சம்பவங்கள் நடந்தாலும், ஒரு நிவாரணத் தொகை அறிவித்து வழங்கி விட்டால், பிரச்னை முடிவுக்கு வந்து விடும் என்ற மனநிலையில் தான், தமிழகத்தில் ஆட்சி நடத்தி கொண்டிருக்கின்றனர். அதில், ஒன்று தான், 67 உயிர்களை, 'காவு'வாங்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்!
தஞ்சாவூரில் பள்ளி ஆசிரியை, பள்ளியில் வைத்தே கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மிருகத்தனமானதுஎனக் கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், ஆசிரியை குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதே சமயம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், கண்ணன் என்ற வக்கீலை கோர்ட் வளாகத்திலேயே ஆனந்தகுமார் என்பவர்,அரிவாளால் தலை, கழுத்து, தொடை என பார்த்து பார்த்து வெட்டி இருக்கிறார். இச்சம்பவம் மனிதத்தனமான செயல் என்பதால், இதுகுறித்து முதல்வர் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. வக்கீல் கண்ணனின் உயிர் போகவில்லை என்பதால், நிவாரணம் அறிவிக்கவில்லையோ?
கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்கள்,அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவித்ததாக, சட்டத்துறை அமைச்சர் கூறியுள்ளது, நமக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு வழங்கும், 10 லட்ச ரூபாய் நிவாரண நிதியானது, தங்களுடைய கணவன்மார்களும்கள்ளச்சாராயம் குடித்து இறந்துபோனால், 10 லட்ச ரூபாய் கிடைக்குமே என, அப்பகுதி பெண்கள் ஏங்குகின்றனர் என்று சொல்வது போலுள்ளது, அமைச்சரின் பேச்சு!
மாநில நிர்வாகத்தின் மேற்பார்வையில் இயங்கும், சி.பி.சி.ஐ.டி., விசாரணை, நியாயமான கோணத்தில் இயங்காது என்பதால் தான், உயர் நீதிமன்றம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை, சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதில், ஆச்சரியப்படவோ, அதிசயப்படவோ, அதிர்ச்சியடையவோ என்ன இருக்கிறது?
ஒரு தவறு நடக்கும்போது, அத்தவறின்மூலத்தை கண்டறிய முயலாமல், புண்ணை,புனுகு பூசி மறைப்பது போல, நிவாரணத்தொகை வழங்கி, பிரச்னையை மூடி மறைக்க முயல்வது, நல்ல நிர்வாகத்திற்கு அழகு அல்ல!
மாறாமல் மாற்றம் இல்லை!
அ.குணா,
கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வாக்காளர்கள் ஜாதி, மதம்
பாராமல், பணத்திற்கு விலைபோகாமல், நேர்மையாக ஓட்டளித்தால் தான்,
ஆட்சியாளர்களிடம் நாம் நேர்மையை எதிர்பார்க்க முடியும். மேற்கூறிய
இம்மூன்று விஷயங்களிலும்,வாக்காளர்கள் தவறிப் போவதால் தான், இன்று பல
தேர்தல் முடிவுகளும் மாறுபடுகின்றன!
தமிழகத்தில், ஜாதி, மதத்தால்
மக்களை பிரித்து,பணத்திற்கு அவர்களை விலைபோக வைத்த பெருமை, திராவிட
கட்சிகளையே சேரும். கடந்த, 1970களில் ஆரம்பித்த இந்தமடைமாற்று வேலை,
தற்போதைய, 'திராவிடமாடல்' ஆட்சியில் உச்சத்தில் உள்ளது.
ஒவ்வொரு
தேர்தலின்போதும், வாக்குறுதிகளாக,பல இலவசங்களை அள்ளிவிடுவதில்,
தி.மு.க.,வுக்கு இணையாக எந்தவொருகட்சியையும் கூற
முடியாது.விலையில்லா,'டிவி' வழங்கியது முதல், தற்போது,மகளிருக்கு
கட்டணம்இல்லாத பேருந்து, உரிமைத் தொகை என்று, மக்களை
இலவசங்களுக்குஅடிமையாக்கிய பெருமைக்குரியவர்கள், இன்றைய ஆட்சியாளர்கள்.
இந்த,
திராவிட மாடலைபின்பற்றி, தற்போது, நடந்துமுடிந்த மஹாராஷ்டிரா சட்டசபைத்
தேர்தலில், பா.ஜ.,மற்றும் காங்., கட்சிகளின் கூட்டணி,
தேர்தல்வாக்குறுதிகளை அள்ளி வீசி உள்ளன.
மஹாராஷ்டிராமாநிலத்தின்,
2022- - 23ம் நிதியாண்டில் அரசின் மொத்த வருவாய், 4.5 லட்சம் கோடி ரூபாய்.
ஆனால், செலவோ, 4.95 லட்சம் கோடி. 'வரவு எட்டணா; செலவு பத்தணா'கதை தான்!
இந்த
லட்சணத்தில், காங்., கட்சியின், 'மஹாவிகாஸ் அகாடி' கூட்டணி, பெண்களுக்கு
மாதம் 3,000 ரூபாய், இலவச பஸ் பாஸ், ஆண்டுக்கு, 500 ரூபாய் விலையில், ஆறு
காஸ் சிலிண்டர்கள், மாதவிடாயின் போது, விடுமுறை, 18 வயதான பெண்களுக்கு தலா 1
லட்சம் ரூபாய்; 3 லட்சம் ரூபாய் வரை கடன் தள்ளுபடி, வேலையில்லாத
இளைஞர்களுக்கு,4,000 ரூபாய் உதவித்தொகை என்று, பிற மாநிலத்தவர் மஹாராஷ்டிரா
வில் குடியேறி விடலாமா என்று நினைக்கும் அளவுக்கு, வாக்குறுதிகளை அள்ளி
வீசியுள்ளது.
ஏற்கனவே, வருவாயைவிட, 90,000 கோடி
ரூபாய்பற்றாக்குறையில் உள்ளது,மஹாராஷ்டிரா. இந்நிலையில், வாக்குறுதிகளை
அள்ளி வீசியவர்கள்தேர்தலில் பெற்றி பெற்றால்,எப்படி அதை நிறைவேற்றமுடியும்?
சட்டியில் இருந்தால் தானேஅகப்பையில் வரும்?
ஆனாலும்,
மக்களின் மனநிலையை நன்றாக புரிந்து கொண்ட, சுயநல அரசியல்வாதிகள்,
எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்று, மணல் கயிறுகளை மக்களிடம்
வீசி உள்ளனர். மஹாராஷ்டிரா வாக்காளர்கள், யாருடைய வாக்குறுதிகளுக்கு
விலை போய் உள்ளனர் என்பது, இன்று தெரிந்து விடும்.
நாம் நேர்மையான வாக்காளர்களாக மாறாத வரை, அள்ளி வீசப்படும் வாக்குறுதிகளும் மாறப் போவது இல்லை!
வேண்டாம் இந்த தேசவிரோத போக்கு!
வெ.சீனிவாசன்,
திருச்சியிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: ஜம்மு - காஷ்மீர்
சட்டசபையில், அரசியல் சாசனப் பிரிவு 370ஐ திரும்பவும் கொண்டுவர வேண்டும்
என்ற தீர்மானத்தை, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையேஆளுங்கட்சி
நிறைவேற்றி உள்ளது; இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சமீபத்தில்,
காஷ்மீரின் மற்றொரு பிரிவினைவாத ஆதரவு கட்சியான பி.டி.பி.,கட்சியின்
தலைவர், தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட குற்றத்திற்காகபணிநீக்கம்
செய்யப்பட்ட அரசு ஊழியர்களை, மீண்டும்பணியில் சேர்த்துக் கொள்ளவேண்டும்
என்று கூறியுள்ளார்.
இதே வேகத்தில்போனால், தீவிரவாதிகளை சுதந்திரப்
போராட்ட வீரர்களாக பாவித்து, அரசுநிவாரணம் வழங்க வேண்டும் என்று
இவர்கள்கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
மத்திய அரசு, இதுபோன்ற தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் கட்சிகள்மீது, கடுமையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.
தேர்தல்
கமிஷனும், அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் இக்கட்சிகளின்
அங்கீகாரத்தை ரத்து செய்ய, வழிவகைகள் உள்ளனவா என்று ஆய்வு செய்து,
நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மறைமுக பிரிவினைவாதம் பேசும் பல
கட்சிகளுக்கு இது ஒரு பாடமாக, எச்சரிக்கையாக அமைய வேண்டும்.