PUBLISHED ON : ஜூன் 02, 2025 12:00 AM

எஸ்.ஸ்ரீனிவாசன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'குடும்பத்தில் யாரும்
அரச பதவி ஏற்க மாட்டோம் என்ற என் சத்தியத்தை மீறி, 35 வயதில் அன்புமணியை
மத்திய அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்' என்று அங்கலாய்த்துள்ளார்,
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்.
இப்போது புலம்பி என்ன செய்வது?
கட்சி
வளர்ச்சி தந்த செல்வாக்கு அன்று ராமதாசின் கண்ணை மறைத்தது. அதனால்,
கட்சிக்காக பாடுபட்டோருக்கு அதிகாரத்தை கொடுக்க மனம் வராமல், தன் குடும்பம்
மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து, மகனுக்கு அதிகாரத்தை வாங்கிக்
கொடுத்தார். அப்போதே, பா.ம.க., குடும்பக் கட்சியாக மாறிவிட்டது.
இப்போது மட்டும் மக்கள் நலனுக்காகவா மகனுடன் மல்லுக்கட்டுகிறார் ராமதாஸ்...
தன்
மகள்வழிப் பேரனுக்கு பதவி கொடுத்து, அழகு பார்க்க நினைக்கிறார். அதை
அன்புமணியால் ஏற்க முடியவில்லை. காரணம், கட்சி தன் கட்டுப்பாட்டிற்குள்,
தன் குடும்பத்தை சார்ந்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
அதன்வெளிப்பாடு தான், கடந்த 2024 பார்லிமென்ட் தேர்தலில் தன் மனைவியை
வேட்பாளராக நிறுத்தியதும், தேர்தல் பணிக்காக என்று சொல்லி, தன் இரு
மகள்களையும் அரசியலில் களம் இறக்கியதும்!
இப்படி தன் குடும்பம் அரசியலில் இருக்கும் போது, தன் சகோதரி மகன் அரசியலுக்கு வருவதை அன்புமணி எப்படி ஏற்றுக் கொள்வார்?
ஒரு
குடும்பத்திற்குள் இரண்டு தலைமை உருவாவது, எதிர்காலத்தில் தனக்கே
பிரச்னையாகி விடும் என்று நினைக்கிறார். அதுவே, இன்று கட்சி இரண்டாக
உடையும் அளவிற்கு உருமாறியுள்ளது.
அதேநேரம், தந்தை - மகன் இருவரும்
இணக்கமாக இருந்தால் தான், கட்சிக்கு நல்லது. ஏற்கனவே சரிவை நோக்கி சென்று
கொண்டிருக்கும் கட்சி, இவர்களது மோதலால் இன்னும் சரிவுக்கு தான் செல்லும்
என்பதை இருவருமே மறந்து விட்டனர்.
ஒரு கட்சி மக்களுக்கானதாக
இல்லாமல், ஒரு குடும்பத்திற்கானதாக இருந்தால், அதன் நிலை கடைசியில்
இப்படித்தான் முடியும் என்பதற்கு, பா.ம.க., சிறந்த உதாரணம்!
கருணாநிதி புகழ் பாடவா வரிப்பணம்!
ஜெ.மனோகரன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, 525 கோடி ரூபாயில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளார், முதல்வர் ஸ்டாலின்.
கடந்த சட்டசபை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் பல நிறைவேற்றவில்லையே என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு, நிதிநிலை சரியான பின் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று கூறும் முதல்வருக்கு, இதற்கு மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?
சமீபத்தில், சட்டசபையில் எம்.எல்.ஏ., ஒருவர், அவரது தொகுதியில் தீயணைப்பு மற்றும் காவல் நிலையங்கள் தேவை என்று கோரிக்கை வைத்த போது, நிதிநிலையை பொறுத்து, உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார் முதல்வர்.
மற்றொரு எம்.எல்.ஏ., அவரின் தொகுதியில், நீர்நிலையை துார்வாரும் கோரிக்கையை எழுப்பிய போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 'அரசுக்கு வருவாய் இருந்தால் மட்டுமே துார்வாரும் கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும்' என்று பதில் அளித்தார்.
இப்படி, எம்.எல்.ஏ.,க் கள், பொது மக்கள், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் கோரிக்கைகளை நிறைவேற்ற, அரசின் நிதி பற்றாக்குறையை காரணமாக கூறி கை விரிக்கும் தி.மு.க., அரசு, மக்களுக்கு கொடுக்காத வாக்குறுதிகளான டில்லி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல கோடி ரூபாய் செலவில் கருணாநிதிக்கு சிலைகள், மணிமண்டபம் அமைத்துள்ளதுடன், தற்போது, 525 கோடி ரூபாயில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளது.
ஏற்கனவே, தமிழகம் 9 லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளது. மக்கள் வரிப்பணம், நலத்திட்டங்களுக்கு செலவிடப்படாமல், ஒரு கட்சி தலைவரின் புகழ்பாட செலவிடப்படுகிறது.
இதற்குத்தான் தி.மு.க.,விற்கு மக்கள் ஓட்டுப் போட்டனரா?
தமிழகம் கடனில் மூழ்கினால் என்ன, கடலுக்குள்ளே மூழ்கினால் தான் என்ன... எங்கள் பரம்பரை புகழ் பாட சிலைகள் அமைப்போம், மண்டபங்கள் கட்டுவோம், பன்னாட்டு அரங்கங்கள் அமைப்போம் என்பது போல் இருக்கிறது, தி.மு.க., அரசின் செயல்பாடு!
இப்படியே போனால், வரும் சட்டசபை தேர்தலுக்குள் தமிழக கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயை எட்டி விடுவது நிச்சயம்!
அரசியல் நடிப்பிலும் வெற்றி கண்ட கமல்!
அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடிப்பை ரசித்த பாவத்திற்கு, ரசிகர்களை பகடை காயாக மாற்றி, மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவக்கி, அரசியல் நாடகத்தை அமோகமாக அரங்கேற்றினார், நடிகர் கமல் ஹாசன். அதற்கான வெற்றி பரிசு தான், ராஜ்ய சபா எம்.பி., பதவி!
தி.மு.க.,வில் திறமையானவர்கள் எத்தனையோ பேர் இருந்த போதிலும், எம்.எல்.ஏ.,க்கள் பலத்தோடு கூட்டணி கட்சிகள் இருந்தபோதும், கமல் ஹாசனுக்கு ஏன் ராஜ்ய சபா சீட் தர வேண்டும்?
எல்லாம் ஒரு நன்றிக்கடன்!
பொதுவாக, கமல்ஹாசன் தான் நடிக்கும் படங்களில் பெரிதாக அரசியலோ, 'பஞ்ச்' டயலாக்கோ பேசியதில்லை.
நடிகர் ரஜினிகாந்த், 'அரசியலுக்கு வருவேன்; வருகிறேன்... வந்து கொண்டே இருக்கிறேன்...' என்ற போது கூட அமைதியாக இருந்தவர், திடீரென, 'நானும் அரசியலுக்கு வருகிறேன்; தமிழகத்தை காக்க போகிறேன். ஊழல் - லஞ்சம் கொள்ளைகளை தடுத்து நல்லாட்சி தரப் போகிறேன்' என்று சொல்லி, டார்ச் லைட்டை துாக்கியபடி தேர்தல் களத்தில் குதித்தார்.
வெற்றி கிடைக்காவிட்டாலும், கொஞ்சமாக ஓட்டு பெற்றார்.
அது, அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு பாதகமாக, தி.மு.க., ஆட்சி பீடத்தில் ஏறியது.
அதேநேரம், சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை எதிர்த்து தேர்தல் களம் கண்ட கமல் ஹாசன், பார்லிமென்டில் தி.மு.க., வுடன் தன்னை இணைத்துக் கொண்டார். அதன்பின் தான் மக்களுக்கு புரிந்தது... தி.மு.க., வெற்றி பெற உருவாக்கப்பட்ட அரசியல் நாடகமே மக்கள் நீதி மய்யம் என்பது!
திரையில் நடித்த கமல், அரசியலிலும் சிறப்பாக நடித்ததற்கான வெகுமதியே ராஜ்யசபா சீட்!
கமல் பேசிய அதே டயலாக்குடன், தற்போது நடிகர் விஜய் களமிறங்கியுள்ளார். உண்மையிலேயே தி.மு.க.,வை எதிர்த்து அரசியல் செய்கிறாரா அல்லது இவரும் கமல் ஹாசனைப் போன்று தி.மு.க.,வின் வெற்றிக்கு உழைக்கும், 'பி' டீமா என்பதை, காலம் தான் வெளிப்படுத்தும்!