PUBLISHED ON : பிப் 19, 2024 12:00 AM

வி.கோபாலன், சென்னை யில் இருந்து எழுதுகிறார்: இயற்கை வளங்களில் குஜராத், மஹாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்கள் செழிப்பாக இருக்கின்றன.
அதேநேரம் அதிக இயற்கை வளங்கள் இல்லாமல், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாநிலங்களில் முக்கியமாக பீஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா போன்றவை இருக்கின்றன.
டாக்டர் அம்பேத்கர் தலைமையில், நம் அரசியல் அமைப்பை ஏற்படுத்தியோர், தீர்க்கதரிசிகள்; தொலைநோக்கு பார்வை உடையோர். அந்த வகையில், அவர்கள் ஏற்படுத்திய ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட அமைப்பு தான், நிதி கமிஷன்.
ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் இந்த, நிதி கமிஷன் மாற்றி அமைக்கப்பட்டு, புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். தற்போது உள்ள 15வது நிதி கமிஷனின் பெயரை, பா.ஜ., அரசு, 'நிடி ஆயோக்' என மாற்றி உள்ளது.
இதன் முக்கிய பணி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இடையே உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வை சீர்படுத்தி, ஒரே மாதிரியான பொருளாதார நிலையில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், மத்திய அரசு வசூலிக்கும் வரி வருமானத்தை, மாநிலங்களுக்கு எவ்வளவு பிரித்து வழங்க வேண்டும் என, சிபாரிசு செய்கிறது.
இந்த அடிப்படையில் தான் மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது.
எந்த மாநிலமும், தங்களிடமிருந்து வசூலிக்கும் வரி முழுதையும், தங்கள் மாநிலத்திற்கே வழங்க வேண்டும் என்று கேட்க முடியாது; கேட்கவும் கூடாது.
இதை, மாநில முதல்வர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நிதி ஒதுக்கீடு விஷயத்தில் மத்திய அரசை குற்றம் சாட்டி, சமீபத்தில் கர்நாடக, கேரள முதல்வர்கள் புதுடில்லியில் தர்ணா செய்தது பொறுப்பற்ற செயல்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'நிடி ஆயோக் சிபாரிசு அடிப்படையில் தான் நிதி ஒதுக்கப்படுகிறது. இதில், மத்திய அரசு தலையிட முடியாது' என, தெளிவாக விளக்கிய பிறகும், மேற்கூறிய இரு மாநில முதல்வர்களின் தர்ணாவில், அரசியல் உள்நோக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது.
தங்கள் பொறுப்பை தட்டிக் கழித்து மத்திய அரசின் மீது பழி சுமத்துவது, அவர்களின் நிர்வாக செயலின்மையை காட்டுகிறது. மக்கள், இதை புரிந்து கொள்ள வேண்டும்.
உண்மையை சொன்னால் பாய்வது ஏன்?
ரா.செந்தில் முருகன், திருப்பூரில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., பொதுச் செயலர்
பழனிசாமி,'தினமலர்' நாளிதழ் குறித்த விமர்சனத்தை, அப்படியே வெளியிட்டு,
'தினமலர்'நாளிதழ் தன் நடுநிலையை நிரூபித்துள்ளது.
ஆனால்,
தி.மு.க.,வினருடன் திரைமறைவு தொடர்பு வைத்திருப்பவர்களை, கட்சியிலிருந்து
நீக்கி, அ.தி.மு.க.,வை கட்டுக்கோப்பாக வைத்திருந்த ஜெயலலிதா இருந்த
பதவியில் இருக்கும் பழனிசாமி செயல்பாடு எப்படி இருக்கிறது?
சட்டசபை
தேர்தலின் போது, சென்னை, திருவல்லிக்கேணியில், உதய நிதியை எதிர்த்து
போட்டியிட, நடிகை குஷ்பு பா.ஜ.,வில் சீட் கேட்டார்; அதை பா.ஜ.,விற்கு
கொடுக்காமல், தொகுதியை கேட்காத பா.ம.க.,வுக்கு கொடுத்து, உதயநிதிக்கு சுலப
வெற்றியை அளித்ததுடன், அவர் மாநிலம் முழுதும் சூறாவளியாக சுற்றி பிரசாரம்
செய்ய மறைமுகமாகஉதவியது யார்?
பொன்முடி, எ.வ.வேலு ஆகியோருக்கு
எதிராக அ.தி.மு.க., சார்பில் வலுவான வேட்பாளரை நிறுத்தி நெருக்கடி
கொடுக்காமல், அப்போது வலுவில்லாத பா.ஜ.,விடம் தள்ளிவிட்டு, அவர்களுக்கு
சுலப வெற்றியை பரிசளித்தது ஏன் என்று பழனிசாமி விளக்க வேண்டும்.
நகர்ப்புற
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.,வின் கோட்டையாக இருந்த, கோவை உள்ளிட்ட
கொங்கு பகுதிகளில், பெயரளவிற்கு கூட போராடாமல், 100 சதவீத வெற்றியை
தி.மு.க.,விற்கு அள்ளிக் கொடுத்ததன் பின்னணியை பழனிசாமி விளக்க வேண்டும்.
அறப்போர்
இயக்கத்தின் ஜெயராமன் ஒரு பேட்டியில், 'லஞ்ச ஒழிப்புத் துறைக்கு,
அ.தி.மு.க., மீது ஒரு துரும்பை கூட கிள்ளிப் போட வேண்டாம் என்று, வாய்மொழி
உத்தரவு ஆளுங்கட்சியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், அ.தி.மு.க.,வினர்
மீது நடவடிக்கை இல்லை' என்கிறார். இது என்ன, 'டீலிங்?'
இவற்றையெல்லாம்
விட, சட்டசபையில் ஆளும் தி.மு.க.,வை மயிலிறகால் வருடுவது போல பழனிசாமி
உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் பேசுவதும், ஸ்டாலின் பெரிய மனதுடன் சட்டசபை
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஒதுக்குவதும் எப்படி நடக்கிறது.
தி.மு.க.,
எதிர்ப்பில் தான் அ.தி.மு.க.,வின் எதிர்காலம் இருக்கிறது. ஆனால்,
தி.மு.க., உத்தரவுப்படி தேசிய ஜனநாயக கூட்டணி யில் இருந்து வெளியேறி,
லோக்சபா தேர்தலில் தி.மு.க.,விற்கு சுலப வெற்றியை அளிப்பதன் பின்னணி என்ன?
ஆக,
பழனிசாமியின் தலைமையில் அ.தி.மு.க.,வின் எதிர்காலம், 'பணால்' ஆகிறது. இதை
சுட்டிக்காட்டும், 'தினமலர்' நாளிதழ் மீது அவர் பாய்கிறார். எல்லாவற்றையும்
மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். தக்க சமயத்தில் பாடம்
புகட்டுவர்.
ரூபாய் நோட்டில் படத்தை மாற்றலாமா?
பி.முனுசாமி, திண்டுக்கல்லில் இருந்து எழுதுகிறார்: பண்டைய காலத்தில், பண பரிமாற்றம் என்பது எப்படி எல்லாமோ நடந்தது. அதையும் யாராலும் கணக்கிட முடியாது. ஆனால், கடைசியில் மனிதன் காகிதத்தையே பணமாக மாற்றினான்.
பல உலக நாடுகளின் ரூபாய் நோட்டுகளில், அந்த நாட்டின் முன்னேற்றத்துக்கு அல்லது விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்களின் படங்களையே அச்சிட்டுள்ளனர். அதுபோல, நம் ரூபாய் நோட்டிலும், தேச தந்தையான மகாத்மா காந்தியின் படத்தையே அச்சிடுகிறோம்.
ஆனால், தற்போது சிலர், 'ரூபாய் நோட்டில் அவர் படம் போடலாம். இவர் படம் போடலாம்' என்று, பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இவ்வாறு செய்வது, நாட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி, பெரும் சர்ச்சைக்கு வழிவகுக்கும்.
நம் பாரத நாட்டில், ரூபாய் நோட்டு அனைவருக்கும் பொதுவானது. அனைத்து மதத்தினரும், சமூகத்தினரும் அதையே பயன்படுத்துகின்றனர். இதில், தேச தந்தையின் படத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
ஒருவேளை, சில ரூபாய் நோட்டுகளில் மட்டும் மாற்று படத்தை பயன்படுத்தலாம் என முடிவெடுத்தால், பாரத மக்கள் அனைவரும் வணங்கும் நம் காவல் தெய்வமாகிய, பாரத மாதாவின் படத்தை அச்சிட்டால், யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டர். இது குறித்து, மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.

