தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ தரமான கல்வியே தலையாய தேவை!

 தரமான கல்வியே தலையாய தேவை!

 தரமான கல்வியே தலையாய தேவை!


PUBLISHED ON : ஆக 18, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 18, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முனைவர். ரா.ஷண்முகசுந்தரம், விவசாய ஆராய்ச்சியாளர், அவினாசி, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பள்ளிகளில் சிக்கன் பிரியாணி வழங்கும் கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக கூறியுள்ளார், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்.

ஏற்கனவே, பள்ளிகளில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது. புரதம் வேண்டும் என்றால் முட்டையின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்; பால் வழங்கலாம்; பருப்பு, பயறு, கீரை, நிலக்கடலை, சோயா போன்ற சத்தான உணவுகளை கொடுக்கலாம்.

அரசுப் பள்ளிகளில் இன்னும் பல இடங்களில் கழிப்பறை, குடிநீர் வசதி, ஆய்வகங்கள், நுாலகங்கள் இல்லை; ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இப்படி அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படாத நிலையில், அவற்றிற்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தலாம்.

கல்வியின் தரத்தை உயர்த்தாமல், உணவின் ஆடம்பரத்தை உயர்த்துவதால் என்ன பயன்?

மதிய உணவுத் திட்டத்தின் நோக்கம் பசியை போக்குவது; மாணவர்களை ருசிக்கு அடிமையாக்குவது அல்ல.

குழந்தைகளின் எதிர்காலத்தை வளமானதாக மாற்ற வேண்டுமென்றால், அதற்கு, பிரியாணி தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. திறமையான ஆசிரியர்கள், நவீன ஆய்வகங்கள், சிறந்த நுாலகங்கள், விளையாட்டு மைதானங்கள், துாய்மையான கழிப்பறைகள், பாதுகாப்பான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரலாம்.

தரமான கல்வி வழங்கிய அரசே, தலைமுறைகள் தாண்டியும் நினைவுகூரப்படும் என்பதை, தமிழக வெற்றிக் கழக அரசு நினைவில் கொள்ள வேண்டும்!

----

உறுப்பினர் எண்ணிக்கையை கூட்டுவதால் என்ன நன்மை?


பி.என்.கபாலி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: லோக்சபாவின் மழைக்கால கூட்டத்தொடர், வெறும் 19 சதவீதம் மட்டுமே செயல்பட்டுள்ளது, நாம் அனுப்பி வைத்துள்ள பிரதிநிதிகளின் பொறுப்பற்ற தனத்தையே காட்டுகிறது.

இதற்கு காரணம் எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல; ஆளுங்கட்சியின் மெத்தனமும் கூடத்தான்!

விவாதமே இல்லாமல், நெருடலான கேள்விகளுக்கு பதில் சொல்ல தேவையில்லாமல், 12 மசோதாக்களை நிறைவேற்றுவது ஆளுங்கட்சிக்கு வசதியானது தானே... அதனால் தான் எதிர்க்கட்சியினரின் அமளிகள் குறித்து ஆளும் கட்சியினர், கவலைப்படுவதே இல்லை!

பார்லிமென்ட் என்பது பேசுவதற்கும், விவாதிப்பதற்குமான அரங்கமே தவிர, கூச்சல் போடுவதற்கும், ஒழுங்கீனமாக நடந்து கொள்வதற்குமான இடம் இல்லை.

இதை எம்.பி.,க்கள் புரிந்து கொள்ளும் விதமாக ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் உறுப்பினர்கள் தயவு தாட்சண்யம் இன்றி வெளியேற்றப்படுவர் என்று சபை விதிமுறையை வகுத்திருந்தால், எதிர்க்கட்சியினர் இப்படி பொறுப்பற்று நடந்து கொண்டிருக்க மாட்டார்கள்.

தமிழக சட்டசபையை பாருங்கள்... எவ்வித அமளியும் இன்றி நடைபெறுகிறது. காரணம், இங்கு சபாநாயகர் எந்த உறுப்பினரும் ஒழுங்கீனமாக நடந்து கொள்ள அனுமதிப்பதில்லை.

சமீபத்தில், தன் கட்டளைக்கு கீழ்படியாத ஓர் உறுப்பினரை பார்த்து, 'உங்களை எச்சரிக்கிறேன்' என்று மிக அழுத்தமாக கூறியதை நேரலையில் பார்த்தோம்; உடனே அந்த உறுப்பினரும் வாய் மூடி அமர்ந்தார். எச்சரித்த பின்னும் அந்த உறுப்பினர் கீழ்ப்படியாமல் இருந்திருந்தால், அவரை வெளியேற்ற சற்றும் தயங்கி இருக்க மாட்டார், சபாநாயகர்.

அப்படிப்பட்ட அணுகுமுறை ஏனோ லோக்சபாவில் காணப்படவில்லை. சபாநாயகர் ஒரு பொம்மையைப் போல் அமர்ந்துள்ளார்.

இத்தகைய நிலையில், லோக்சபா உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட்டுவதால், கூச்சலும், ஆர்ப்பாட்டமும், ஒழுங்கீனமும் தான் அதிகரிக்குமே தவிர, மக்களுக்கு எந்த பலனும் ஏற்படப் போவதில்லை!

------

கேட்பவர் காது ரணமாகாது!


சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவி பிரேமலதாவும், பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ., சவுமியாவும் முதல் முறை எம்.எல்.ஏ.,க்களாகி உள்ளனர். ஆனால், இந்த இருவரும் சட்டசபையில் பேசும் போது, அது கன்னிப் பேச்சு என்று கூற முடியாத அளவிற்கு எந்தவித தடுமாற்றமும் இன்றி, மிக அழகாக மக்கள் பிரச்னைகளை பேசுகின்றனர்.

அதேநேரம், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., கனிமொழி, மனமார்ந்த நன்றி என்று கூறுவதற்கு பதில், மன்மத நன்றி என்றார். ஒருமுறை தான் வாய் தவறி கூறிவிட்டார் என்று பார்த்தால், உரையின் கடைசியிலும் அப்படித்தான் கூறினார்.

அதுமட்டுமல்ல... பார்த்து படிக்கும் போதே திக்கி திணறி வாசித்தார்.

கடந்த ஆட்சியில், தி.மு.க.,வைச் சேர்ந்த சென்னை மேயர் பிரியா, இப்படித்தான் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக் கொட்டி, சமூக வலைதளத்தில் கேலிக்கு உள்ளானார்.

எனவே, அரசியலுக்கு வர ஆசைப்படும் பெண்கள், பேச்சுப் பயிற்சியையும் பெற்றுக் கொண்டு வந்தால், கேட்பவர் காதுகள் ரணமாகாது!

-----

ஆறு மாத தவணை தேவையில்லை!


ஜி.பெரியசாமி, சென்னையில் இருந்து எழுதுகிறார்: தமிழக முதல்வர் விஜய், கமிஷன், கலெக் ஷன், கரப்ஷன் மூன்றையும் ஒழிக்க முயன்று வருகிறார்.

ஆனால், கடந்த ஆட்சியில், தி.மு.க.,வின் கைபொம்மைகளாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் ஐக்கியமாகி இருந்தாலும், அக்கட்சிகளின் தலைவர்கள் நேரத்திற்கு ஒரு பேச்சு பேசி, தாங்கள் இன்னும் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க காத்திருக்கும் கொக்குகள் தான் என்பதை அடிக்கடி நிரூபித்துக் கொண்டுள்ளனர்.

அதனால், த.வெ.க., அமைச்சர்கள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். ஊழல் அதிகாரிகள் சில இடங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாலும், அவர்கள் தங்கள் இயல்பு நிலை மாறாமல் தான் இருப்பர். அவர்களிடமும் எச்சரிக்கையாக இருந்து, முதல்வரின் திட்டங்களை சரிவர நிறைவேற்றினால், எதிர்க்கட்சியினர் கூறும் ஆறு மாத தவணை, த.வெ.க.,விற்கு தேவை இருக்காது!

கபட நாடகம்!


பி.கே.வெங்கட்ராமன், சென்னையில் இருந்து எழுதுகிறார்: இன்று, 'நீட்' தேர்வு வேண்டாம் என்று கூறும் தி.மு.க.,வினர், 2010 ல் மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது, காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வுக்கு வரவேற்பு பத்திரம் வாசித்தது. அதேபோன்று, இன்று மேகதாது அணை கட்ட வேண்டாம் என்று குரல் எழுப்பும் தி.மு.க., காவிரி நதி நீருக்காக, 1925ல் போட்ட 50 ஆண்டு ஒப்பந்தம், 1975ல் முடிவுற்ற போது, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி அதை புதுப்பிக்க துணியவில்லை. அன்று, தங்கள் சுயநலத்திற்காக அன்று செயல்படாமல் இருந்து விட்டு, இன்று போராடுகின்றனராம்! என்னே... ஒரு கபட நாடகம்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us