PUBLISHED ON : நவ 24, 2026 12:00 AM

வி.வேணுகோபாலன், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சித்தாந்தமே, அதானி, அம்பானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படுவது; தொழிலாளர்களை கொத்தடிமைகளை போல் நடத்துவது. ஆனால், எங்கள் கட்சி சித்தாந்தத்தின்படி, தொழிலாளர்கள் நம் நாட்டின் அடித்தளமாக உள்ளனர். அவர்களை பாதுகாக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார், காங்கிரஸ் எம்.பி., ராகுல்.
ராகுலுக்கு அரசியல் அறிவும் இல்லை; கடந்த கால காங்., கட்சியின் வரலாறும் தெரியவில்லை.
இவரது பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா ஆட்சிக் காலத்தில், இவர் கூறும் நாட்டின் அடித்தளமான தொழிலாளர்களை எப்படி பாதுகாத்தார் தெரியுமா?
கடந்த 1980க்கு முன், அரசு அலுவலர்கள் ஓய்வு பெற்று செல்லும் போதும், அகால மரணமடையும் போதும் ஏற்படும் காலி இடங்களை, ஆண்டு தோறும் ஒரு குறிப்பிட்ட மாதங்களில் நிரப்புவது வழக்கம். 1980ல் இந்திரா பிரதமராக இருந்த போது, கேரளாவை சேர்ந்த தொழிற்சங்க தலைவர், சி.எம்.ஸ்டீபன், தகவல் தொடர்பு துறை அமைச்சராக இருந்தார்.
அந்த தொழிற்சங்கவாதியின் கண்டு பிடிப்பு தான்,பயிற்சி பெற்ற தொழிலாளர் குழு அமைப்பான, ‘ரிசர்வ் டிரெயின்ட் பூல்’ என்ற ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமன திட்டம்!
இத்திட்டம், 1980 அக்., 30ம் தேதி இந்திய தபால் மற்றும் தந்தி துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, இந்திய தபால் மற்றும் தந்தி துறையில் நேரடி நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, ஒப்பந்த அடிப்படையிலான நியமனங்கள் அமலுக்கு வந்தன.
பின், இந்த ஒப்பந்த அடிப்படையிலான நியமனம் தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் பரவலாக அமலுக்கு கொண்டுவரப்பட்டு, இப்போதும் நடைமுறையில் உள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சியில் நியமனம் செய்யப்பட்டுள்ள துாய்மை பணியாளர்களும், இந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளவர்களே!
நியாயமான முறையில் ஓர் அலுவலரை அரசு நியமனம் செய்தால், அவருடைய பதவிக்குரிய அடிப்படை சம்பளம், பஞ்சப்படி, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி ஆகியவையும், ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பும்; ஆண்டுக்கொருமுறை அடிப்படை சம்பளத்திற்கேற்ப போனசும், ஓய்வு பெறும்போது கிராஜுவிடி, லீவ் சாலரி, மாதந்தோறும் பென்ஷனும் கொடுக்க வேண்டும்.
ஆனால், ஒப்பந்த அடிப்படையில் ஓர் அலுவலரை நியமிக்கும் போது, மேலே குறிப்பிட்டுள்ள எவையும் அவருக்கு கிடைக்காது; ஒரு குறிப்பிட்ட தொகையே ஊதியமாக வழங்கப்படும்.
இது தான், காங்., கட்சி, நாட்டின் அடித்தளமாக இருக்கும் தொழிலாளர்கள் மீது காட்டிய மரியாதை!
இந்த வரலாறு தெரியாமல், பா.ஜ.,வுக்கு அறிவுரை கூறுகிறார், ராகுல்.
சாத்தான் வேதம் ஓதினால், அதில் சாரம் இருக்குமா என்ன!
lll
