PUBLISHED ON : நவ 24, 2026 12:00 AM

ஹிந்தியை வைத்து எத்தனை காலம் உருட்டுவர்?
அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘முன் ஏர் எவ்வழியோ, அவ்வழியில், பின் ஏர்’ என்பது போல், தி.மு.க., – அ.தி.மு.க., வழியில், தற்போது, தமிழக வெற்றிக் கழக அரசும் இருமொழி கொள்கை என்பதில் உறுதியாக உள்ளது.
‘தமிழகத்திற்கு மும்மொழி தேவை’ என பா.ஜ., அழுத்தம் தந்தால், அரசியல் லாபத்திற்காக, ‘ஹிந்தி திணிப்பு’ என ஓலமிடுகிறது, தேசிய கட்சியான காங்கிரஸ்.
இங்கு, தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதும் பலருக்கு தெரியவில்லை; தேசிய மொழி ஹிந்தி என்பதும் யாருக்கும் புரியவில்லை.
தேச உணர்வு வளர, தேசியம் குறித்த புரிதல் வேண்டும். ஆனால், தமிழக அரசியல் கட்சிகள் தமிழ், தமிழர் என குறுகிய வட்டத்துக்குள் செக்குமாடு போல வாழ, தமிழனை கட்டாயப்படுத்தி வருகின்றன.
காங்., கட்சியை சேர்ந்த தமிழக அமைச்சர் ராஜேஷ்குமார், சமீபத்தில், பள்ளி விழாவில் பங்கேற்று பேசும் போது, ‘டில்லிக்கு போயிருந்தேன்; ஹிந்தி தெரியாமல் சிரமப்பட்டேன்’ என வருத்தப்பட்டார்.
‘படித்தவர்கள் எந்த ஊருக்கு சென்றாலும், தைரியமாக வாழலாம்; அதனால், ஹிந்தி படிப்பது பாதகம் இல்லை’ என்பதை, நேரடியாக சொல்ல தைரியம் இல்லாமல், சுற்றி வளைத்து பேசியுள்ளார்.
தமிழகத்தில் ஹிந்தி பேசுவோர், சரிபாதியாக கலந்துவிட்ட நிலையில், ஹிந்திக்கு எதிர்ப்பு என்று நாடகம் ஆடுகின்றனர், அரசியல்வாதிகள்.
டில்லியில் அரசியல் செய்யும் தமிழக அரசியல்வாதிகள் பலருக்கு ஹிந்தி பேச, எழுத தெரிகிறது; பாமர தமிழன் மட்டும் இன்னும் எத்தனை காலத்திற்கு ஏமாளியாக இருக்கப் போகிறானோ!
lll
வேண்டாம்
மவுனம்!
வி.எம்.மகிழ்நன், கடலுாரில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் முக்கியச் செய்திகள் இரண்டு. ஒன்று, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ், அந்த மாவட்ட பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ் செய்தி அனுப்பிய செயலுக்கு, தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது; மற்றொன்று, துறையூர் எம்.எல்.ஏ.,வும், துணை சபாநாயகருமான ரவிசங்கர், தன்னிடம் உதவி கேட்டு வந்தவரை அடித்து விரட்டிய காட்சிகள், காணொளி வாயிலாக வெளியாகியும், தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது.
இந்த இரண்டு நிகழ்வுகளும், சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பதவியின் மாண்பை மறந்து, மிகவும் கீழ்த்தரமான முறையில், அப்பட்டமான சட்ட மீறல்களில் ஈடுபட்டிருப்பதைக் காட்டுகின்றன. தேசிய மகளிர் ஆணையமே விளக்கம் கேட்கும் அளவுக்கு, தமிழகப் பெண்களின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட சவாலாக இச்சம்பவங்கள் அமைந்துள்ளன.
‘பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைக் காப்போம்’ என்று உறுதிமொழி ஏற்று, அதை உரக்கப் பறைசாற்றி ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய், இத்தகைய கேவலமான செயல்களில் ஈடுபட்ட சட்டசபை உறுப்பினர்களை, இனியும் புனிதர்களாகக் காட்சிப் படுத்த வேண்டுமா?
முகம் தெரியாத த.வெ.க., கட்சி வேட்பாளர்களுக்காக மக்கள் ஓட்டுப் போடவில்லை; விஜய் முகத்துக்காகவே மக்கள் ஓட்டளித்து, இந்த அரசை தேர்ந்தெடுத் துள்ளனர்.
செய்தவர்களை முதல்வர் உடனடியாகத் தண்டிக்க வேண்டும். ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயம் முதல்வருக்கு வேண்டாம். பயந்துகொண்டே ஆட்சி நடத்த முடியாது; துணிச்சலுடன் சட்டப்படி ஆட்சி நடத்தினால், மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வர முடியும்.
முதல்வரே, இனியும் வேண்டாம் இந்த மவுனம்!
lll
