PUBLISHED ON : நவ 09, 2024 12:00 AM

சில நேரங்களில், சில சம்பவங்கள்!
எஸ்.சீனிவாசுலு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, இரு தினங்களுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்துாரிக்கு எதிராக, அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில், சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரை ஆதாரமாக வைத்து, கலவரத்தை துாண்டுதல், தவறான கருத்துகளை பரப்புதல் உட்பட நான்கு பிரிவுகளின்கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சில நேரங்களில் சிலரால் நடக்கும் சில சம்பவங்கள்,சிலரில் வாழ்க்கைப் பாதையையே மாற்றி அமைத்து விடக்கூடிய வல்லமை வாய்ந்தவை.
உதாரணத்துக்கு ஒரு சம்பவம்...
அ.தி.மு.க.,வில், ஜெயலலிதாவை கொள்கைபரப்பு செயலராக அறிவித்தார் எம்.ஜி.ஆர்., அதோடு ராஜ்யசபா எம்.பி.,யாகவும் ஆக்கினார்.
அவரும் அவருக்கு கிடைத்த பதவிகளுடன், அமைதியாகத்தான் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
எம்.ஜி.ஆர்., மரணமடைந்து, அவரது பூதவுடல், சென்னை ராஜாஜி மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது, அவரது தலைமாட்டிலேயே சோகமாக அமர்ந்துகொண்டிருந்தார் ஜெயலலிதா.
எம்.ஜி.ஆரின் பூதவுடல், பீரங்கி வண்டியில்ஏற்றப்பட்டபோது, அந்த வண்டியில் தானும்ஏறிவிட்டார்.
அவரை அப்படியே விட்டிருந்தால், இறுதிவரை அமைதியாக இருந்து, அடுத்த வேலையை பார்க்கப் போயிருப்பார்; அதாவது, தன் நடிப்புத் தொழிலில் ஆர்வம் காட்டி இருந்திருப்பார்... அங்கேதான் விதி தன் வேலையைக் காட்டியது!
ஜெயலலிதாவை, அனகாபுத்துார் ராமலிங்கம்என்பவர் அந்த பீரங்கி வண்டியில் இருந்து கீழே தள்ளி விட்டார்.
அதன் விளைவு?
ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆர்வம் அதிகமாகி, திருநாவுக்கரசர் போன்ற சிலரின் துணையோடு, கட்சியையும் கைப்பற்றி, ஆட்சியிலும் அமர்ந்து கோலோச்சினார்.
நிற்க...
சமீபத்தில் அர்ஜுன் சம்பத் கூட்டிய கூட்டத்தில், நடிகை கஸ்துாரி பேசிய பேச்சு, பெரிதாக கண்டுகொள்ளப்பட வேண்டாத விஷயம்.
திராவிடக் கட்சியினர் எப்போதுமே ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்கி, ஊதி ஊதி பெரிதாக்குவரே... அதன்படி, அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் என்ற அமைப்பின் சார்பில், நடிகை கஸ்துாரி மீது போலீசில் புகார் கொடுக்க வைத்து, வழக்கும்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கஸ்துாரியின் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்ததுமே, தனக்கு அரசியல் ஆசை துளிர்விட்டு விட்டதாக தெரிவித்தும் விட்டார்.
அனகாபுத்துார் ராமலிங்கம், ஜெயலலிதாவை கீழே தள்ளி, அவரது அரசியல்வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்தது போல, இந்த அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தார், கஸ்துாரியின்அரசியல் வாழ்க்கைக்கு வழிகாட்டி இருக்கின்றனர் போலும்!