/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
உள்ளத்திலிருந்து பேசுங்கள் விஜய்!
/
உள்ளத்திலிருந்து பேசுங்கள் விஜய்!
PUBLISHED ON : மே 11, 2025 12:00 AM

ஆர்.மகேசன், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், மதுரை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் விஜய் அருகில் செல்ல முயன்ற தொண்டரை, துப்பாக்கியைக் காட்டி அவரது பாதுகாவலர் மிரட்டி உள்ளார்.
இது ஒருபுறம் என்றால், விமான நிலையத்திலிருந்த இரும்பு தடுப்புகளை சேதப்படுத்தி உள்ளனர், அவரது ரசிகர்கள்.
விஜய் படத்துக்கு, 'கட் - அவுட்' வைத்து, பாலாபிஷேகம் செய்து, வாழ்க்கையை பாழாக்கும் ஒரு தொண்டனுக்கே துப்பாக்கி மிரட்டல் என்றால், இவர் பதவிக்கு வந்தால், அப்பாவி பொதுஜனம் இவரை எப்படி அணுக முடியும்?
கோடி கோடியாக சம்பாதித்தும், வெளிநாட்டிலிருந்து வாங்கிய காருக்கு வரி கட்டமுடியாது என்று அடம்பிடித்த விஜய், 'கறை படியாத கைகளோடு தேர்தலை சந்திக்கிறோம்' என்கிறார்.
முழு நேர அரசியல்வாதியாகி, ஆட்சியைப் பிடித்து, ஐந்தாண்டுகள் முழுமையாக ஆட்சி செய்த பின் அல்லவா இந்த டயலாக்கை கூற வேண்டும்!
த.வெ.க.,வின் கொள்கை என்ன, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், என்ன திட்டங்களை நிறைவேற்றுவர் என்று கூறுவதை விடுத்து, இதுபோன்ற உதவாத பேச்சுகளால் என்ன நன்மை?
இதுபோன்று அர்த்தமற்ற பொய்களை ஆயிரம் முறை கேட்டு விட்டனர், தமிழக மக்கள்.
இரு திராவிடக் கட்சிகளுக்கு மாற்று சக்தியாக உருவெடுக்க நினைத்தால், விஜய், உள்ளத்திலிருந்து பேச வேண்டுமே தவிர, எழுதிக் கொடுப்பதை பேசி நடிக்கக் கூடாது!
'கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த சொல்லும் காலத்துக்கும் கூட வராது' என்பதை மறந்து விட வேண்டாம்!
தி.மு.க., செய்து வரும் முதலீடு!
பொ.ஜெயராஜ்,
பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: 'விடுபட்டோருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்; ஜுன் மாதம்
முதல் விண்ணப்பிக்கலாம்' என அறிவித்துள்ளார், முதல்வர் ஸ்டாலின்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், 'அனைத்து குடும்ப தலைவியருக்கும் மாதம்
1,000 ருபாய் வழங்கப்படும்' என்று வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றது,
தி.மு.க.,
ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளை கடந்தும், நிதிநிலை சரியில்லை என்று காரணம் கூறி, வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
இந்நிலையில்,
பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, வேறு
வழியில்லாமல், 2023 செப்., முதல், 'மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை
செயல்படுத்த ஆரம்பித்தது, தி.மு.க., அரசு.
அதேநேரம், 'அனைத்து
குடும்ப தலைவியருக்கும்' என்ற வாக்குறுதியை, தகுதியுள்ளவர்களுக்கு மட்டும்
என்று மாற்றிவிடவே, இத்திட்டத்தில் பலன் பெற விண்ணப்பித்தோரில், 57 லட்சம்
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
இப்போதும், தமிழகத்தின் கடன்சுமை
கூடிக் கொண்டுதான் செல்கிறது. இடிந்து விழும் நிலையிலுள்ள பள்ளிக்
கட்டடங்களை சீரமைக்க, மருத்துவமனை, கல்லுாரிகள் கட்ட, காலிப்பணியிடங்களை
நிரப்ப என, எந்த கோரிக்கை வைத்தாலும், நிதிநிலை சரியில்லை என்றே கூறி
வருகின்றனர்.
ஆனாலும், வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஓட்டுக்காக துவங்கப்பட்ட இந்த இலவச திட்டத்திற்கு, நிதி பற்றாக்குறை ஏற்படாது.
தகுதியற்றவர்கள் என்று கூறி நிராகரிக்கப்பட்டவர்கள் எல்லாம், ஓட்டுக்காக உரிமைத் தொகை வாங்கும் தகுதியை அடைந்து விடுவர்.
இத்திட்டத்தை
துவக்கி வைத்தபோது, 'இதை உதவித்தொகையாக நினைக்கவில்லை; எதிர்காலத்திற்கான
முதலீடாக நினைக்கிறேன்' என்று கூறியிருந்தார், முதல்வர்.
ஆம்... வரும் சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க., செய்து வரும் முதலீடு என்பது முதல்வர் சொல்லியா தெரிய வேண்டும்?
கூட்டணிக்காக காத்திருக்கும் அன்புமணி!
கோ.பாண்டியன்,
செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடந்த 2017ல்
மருத்துவ படிப்புக்கு 'நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின், ஒவ்வொரு
ஆண்டும் தற்கொலைகள் நிகழ்கின்றன. கடந்த இரு மாதங்களில், ஐந்து மாணவியர்
தற்கொலை செய்துள்ளனர்.
'நீட்' தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால்,
மாணவ - மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதை தடுக்க முடியாது. நீட் தேர்வால்
மருத்துவ கல்வியின் தரம் உயரவில்லை' என்று கூறியுள்ளார், பா.ம.க.,வின்
தற்போதைய செயல் தலைவர் அன்புமணி.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான
மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், தமிழகத்திலும்
மாணவர்களும், பெற்றோரும் மனரீதியாக ஏற்றுக் கொண்டு விட்டனர். நகரங்கள்
என்றில்லாமல் கிராமபுற மாணவர்களும் இத்தேர்வில் வெற்றி பெற்று, பெரும் பணச்
செலவின்றி மருத்துவம் பயின்று வருகின்றனர்.
ஆனால், தமிழக
அரசியல்வாதிகளோ ஓட்டுக்காகவும், கட்சியினர் நடத்தும் மருத்துவக் கல்லுாரி
வாயிலாக பணம் சம்பாதிக்கவும், நீட் விலக்கு தேவை என்று கூச்சலிடுகின்றனர்.
தேர்தல்
நெருங்கி வரும் நேரம் என்பதால், ஆளாளுக்கு நீட் தேர்வு பிரச்னையை தலையில்
துாக்கி வைத்து ஆட ஆரம்பித்து விட்டனர். கடந்த 2021 தேர்தல் பிரசாரத்தின்
போது அறிவித்த நீட் ரத்து ரகசியத்தை, இன்றளவும் உதயநிதி வெளிப்படுத்த
வில்லை.
நிலைமை இப்படி இருக்க, சில மாதங்களுக்கு முன், 'மது
உற்பத்தி, வணிகம் செய்வது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும், மாநில அரசுக்கு
மட்டுமே உள்ளது. இதில் மத்திய அரசு தலையிட முடியாது' என்று உச்ச நீதிமன்றம்
தீர்ப்பளித்த போது, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 'மதுவால் தமிழகத்தில்
ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
'தேசிய அளவில் அதிக
விபத்துகள், தற்கொலைகள், மனநல பாதிப்புகள் நடக்கும் மாநிலமாக தமிழகம்
உள்ளது. அதனால், உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என்று கூறினார்.
ராமதாஸ்
அறிக்கைப் படி மதுவால் ஆண்டுக்கு, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர்
இறந்து போவது, அவரது மகன் அன்புமணிக்கு பெரிதாக தெரியவில்லை.
அதேநேரம்
நீட் தேர்வைஎதிர்கொள்ள தெரியாமல், தற்கொலை செய்து கொள்ளும் ஒரு சிலரின்
இறப்பு மட்டும் பெரிதாக தெரிகிறது என்றால், தி.மு.க.,வின் கூட்டணிக்காக,
அன்புமணி கதவை திறந்து வைத்துள்ளதையே இது காட்டுகிறது!
நேரத்துக்கொரு பேச்சு; தேர்தலுக்கு ஒரு கூட்டணி... இவர்கள் தான் தீர்மானிக்கின்றனர், மாணவர்கள் எதை படிக்க வேண்டும் என்பதை!
இந்த இரட்டை வேடதாரிகளை இனம் கண்டு கொள்வது, மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது!