PUBLISHED ON : அக் 14, 2026 12:00 AM
வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: சிவகங்கை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்காக, 2017 முதல் 2023 வரை அரசு ஒதுக்கிய, 2 கோடி, 35 லட்சம் ரூபாய் நிதியில் மோசடி நடந்துள்ளது. இதில், ௧௦க்கும் மேற்பட்ட தாசில்தார்கள் பல்வேறு காலகட்டங்களில் மோசடியில் ஈடுபட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் கொதித்து எழுந்து விட்டனர். ‘ஏழை மாணவர்களுக்கான நிதியிலும் ஊழல் செய்து பிழைப்பதற்கு பதில், பிச்சை எடுத்து உண்ணலாம்’ என்று, கடுமையான மொழியில் அதிகாரிகளை சாடியுள்ளனர், நீதிபதிகள்!
அரசு அதிகாரிகள் தங்கள் பணிகளை செய்ய, மாதந்தோறும் அரசிடம் இருந்து சம்பளம் வாங்குவதுடன், மக்களிடம் இருந்து லஞ்சமும் பெறுகின்றனர்.
இப்படி ஒரே வேலைக்கு இரு ஊதியம் பெற்றும், இவர்களது பண வெறி தீருவதில்லை.
அரசு பணிகளுக்கான ஒப்பந்த நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து குறிப்பிட்ட சதவீத அடிப்படையில், கையூட்டு பெறுகின்றனர்; மக்கள் நலத்திட்டங்களிலும் சுரண்டுகின்றனர்.
அப்படியிருந்தும் ஏழை, எளிய ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான நிதியிலும் கை வைத்துள்ளனர் என்றால், இவர்கள் எல்லாம் என்ன ஜென்மங்கள்?
‘வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம்’ என, முதல்வர் விஜய் அடிக்கடி கூறி வருகிறார். ஆனால், ஆட்சி மாறினாலும், இன்னும் பல அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை நிறுத்தவில்லை.
ஊழலுக்கு எதிராக சில ரெய்டுகள், நடவடிக்கைகள் எடுப்பதுடன் அரசு நின்று விடக் கூடாது; லஞ்ச ஒழிப்புத் துறையினர் நாள்தோறும் அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினால் மட்டுமே ஓரளவேனும் ஊழல்களை கட்டுப்படுத்த முடியும்!
முதல்வர் விஜய், ஊழலுக்கு எதிராக, இன்னுமே கடுமையாக சாட்டையை சுழற்ற வேண்டும்!
lll
